எம்பெருமான் தேவர்களை நோக்கி திருமாலால் உருவாக்கப்பட்ட மாய ரூபிகளின் செயல்பாடுகளால் தர்மத்தை விடுத்து அதர்ம வழியில் செல்லும் அசுரர்களை சம்ஹாரம் செய்வேன் என்றும், திரிபுரத்தின் அழிவானது நெருங்கிவிட்டது என்றும் கூறினார்.
மேலும், இதுவரை அவர்களை அரணாக இருந்து பாதுகாத்து வந்த பூஜைகளின் பலனானது அகன்றுவிட்டது என்றும் கூறினார். இதைக்கேட்ட தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பின் தலைமேல் தங்களின் கரங்களை குவித்துக்கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள்.
அசுரர்களை அழிப்பதற்கு தகுந்த ரதத்தினை உருவாக்குங்கள் என்று கூறி அவ்விடத்தை விட்டு மறைந்தார். எம்பெருமானின் கூற்றுகளை கேட்ட அனைத்து வானுலக தேவர்களும் மகிழ்ச்சியில் இறைவனை பலவாராக துதித்து போற்றினார்கள்.
பின்பு, தேவர்களின் வேந்தனான இந்திரதேவன் தேவ லோகத்தின் தச்சகராக விளங்கும் விஷ்வகர்மாவை அழைத்து அசுரர்களுடன் போர் புரிய ரதத்தினையும், தேவையான ஆயுதங்களான தனுசு மற்றும் பாணங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பினையும் ஒப்படைத்தார். விஷ்வகர்மாவும் இப்பணியை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
திரிபுரர்களை அழிப்பதற்காக எம்பெருமான் அமர்ந்து போர் புரிவதற்கு தேவையான ரதத்தை உருவாக்கும் பொருட்டு தேவர்களின் சிற்பிகளாக விளங்கக்கூடிய விஷ்வகர்மா தன்னுடைய முழு படைப்புத் திறனையும் புகுத்தி அனைத்துலகத்திற்கும் மகா தேவராக இருக்கும், தேவர்களுக்கு எல்லாம் தேவராகவும், அசுரர்களுக்கு எல்லாம் அசுரர்களாகவும், பிரபஞ்சத்தினை தன்னுள் உள்ளடக்கிய சிவபெருமானுக்காக காலத்தை சிந்தையில் கொள்ளாமல் நுட்பமான செயல்பாடுகளால் உருவாக்கினார்.
மிகவும் அழகிய வடிவமும், பிரமிக்கத்தக்க வகையில் வேலைப்பாடுகளும் கொண்ட ரதமானது விஷ்வகர்மாவின் பங்களிப்பு மட்டுமில்லாமல், தேவர்களின் பங்களிப்புடனும் சேர்ந்து உருவாகியது.
எம்பெருமான் போர் புரிய தனித்துவமாக உருவாக்கப்பட்ட ரதமானது பதினான்கு உலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற பொன்னை கொண்டும், ரதத்தின் சக்கரங்கள் என்பது வெப்பமும், குளுமையும் கொண்டதுமாகவும், அதாவது ஆதவன் வலது புறமாகவும், சந்திரன் இடதுபுற சக்கரங்களாகவும் விளங்கின.
இச்சக்கரங்களை எழில்படுத்த நட்சத்திரங்கள் எல்லாம் அலங்கார பொருட்களாவும், திரைச் சீலைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. மந்திர கிரியே (மலை) ரதமாகவும், அந்த ரதத்தின் சக்கரங்களின் இருசுகளாக (வண்டியச்சு) அஸ்தகிரியும், உதயகிரியும் விளங்கின.
ஆகாயத்தை தொடும் விந்திய மலையானது ரதத்தின் நிழற்குடையாகவும், அந்த குடையை அழகுடன் காட்ட, மந்திர மலையானது குடையில் உள்ள கொம்பாகவும், திசைகள் யாவும் ரதமானது பயணிக்கும் தடமாகவும், பிரம்ம தேவர் ரதத்தின் சாரதியாகவும் அமர்ந்து அயத்தினை (குதிரையினை) கட்டுப்படுத்தும் கடிவாளத்தைக் கையில் ஏந்தினார்.
பிரணவம் என்பது அயத்தினை வேகப்படுத்த பயன்படும் சாட்டையாகவும், வேதங்களான (ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வன) நான்கும் ரதத்தினை இழுத்து செல்லும் அயங்களாயின.
மேருமலையானது எம்பெருமான் பயன்படுத்தும் வில்லாகவும், எம்பெருமான் கழுத்தில் வீற்றிருந்த வாசுகி வில்லில் உள்ள நாணாக இருபுறங்களிலும், மங்கல ஒளியை எழுப்பும் சிறு மணிகளாக சரஸ்வதி தேவியும், அந்த வில்லில் உள்ள பாணமாக திருமாலும், இந்த பிரபஞ்சத்தில் பிரமாண்டமாக காட்சியளித்த யாவும் அமைக்கப்பெற்ற அரிதான எழில்மிகு அந்த ரதத்தினை உருவாக்கினார்.
பின்பு, தன்னுடைய வாழ்க்கையின் பயனை அடைந்ததாக இந்த ரதத்தினை உருவாக்கிய விஷ்வகர்மா எண்ணினார். மேலும், இந்த அரிய பொன்னான வாய்ப்பினை அளித்த தேவர்களின் வேந்தரான தேவேந்திரனுக்கு தனது நன்றியை மனதார கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக