யது குலத்தவரான சூரசேனர் வசுதேவருடைய தந்தை. வசுதேவர் கிருஷ்ணரின் தந்தை. குந்தி கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிருதை (பிரீதா) என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார். குந்தி இளமையாக இருந்தபோது, துர்வாச முனிவர் அவரது தந்தையின் இடத்திற்கு வந்தார். குந்திதேவி முனிவருக்கு மிகுந்த கனிவோடும், பணிவோடும் ஒரு ஆண்டு முழுவதும் பணிவிடை செய்தாள். குந்தியின் விருந்தோம்பல் மற்றும் சேவையில் மகிழ்ந்த முனிவர் அவரது எதிர்காலத்தை பற்றி கணித்து திருமணத்திற்குப் பின்னர் பாண்டு மூலம் குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல் பற்றி அறிந்து கொண்டதால் அந்த துன்பத்தை தீர்க்க வரம் ஒன்றை அளித்தார்.
துர்வாச முனிவர், விரும்பிய கடவுளின் மூலம் குழந்தை பெறலாம் என்ற வரத்தை அருளினார். இதனால் குந்தி தனது விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து குழந்தை பெற முடியும். முனிவரின் இந்த வரத்தை சோதிக்க முடிவு செய்த குந்தி மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானை அழைத்தார். சூரிய பகவான், மந்திரத்தின் சக்திக்கு கட்டுப்பட்டு, சூரியன் குந்தியின் முன்னாள் தோன்றி அவருக்கு மகனை அளித்தார். அக்குழந்தை சூரியனைப் போன்றே பிரகாசமாக இருந்தது. சூரிய பகவான் இக்குழந்தை பிறக்கும்போதே போர்க்கவசம் மற்றும் காதுவளையங்கள் (குண்டதால) அளித்து பாதுகாத்தார். குழந்தை பிறந்த பின்பும் குந்தி தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை. ஆயினும் குந்தி, மணமாகாத நிலையில் ஒரு குழந்தை பெற்றால் உலகத்தார் இகழ்ந்து பேசுவார்கள் என அஞ்சி அக்குழந்தையை தனது தோழியான தத்ரியின் துணையுடன், குழந்தையை ஒரு கூடையில் வைத்து, புனித நதியான கங்கை நதியில் விட்டாள்.
இதைப் பார்த்த சூரிய பகவான் தன் நெருப்பு மழையால் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். கங்கை நதியில் குழந்தை மிதந்து வருவதைக் கண்ட திரிதராஷ்டிரரின் தேரோட்டியான அதிரதன் அக்குழந்தையை காப்பாற்றினார். பிறகு அக்குழந்தையை தன் குழந்தையாக பாவித்து, கர்ணன் எனப் பெயர் சூட்டி அன்போடு வளர்த்தார்.
திருதிராஷ்டிரனுக்கு கண் பார்வை இல்லாததால் அவன் நாடாளும் தகுதியை இழந்தான். இதனால் பீஷ்மர் இரண்டாவது மகனான பாண்டுவுக்கு அஸ்தினாபுரத்தின் அரசனாக முடிசூட்டி அரியணையில் அமர்த்தினார். பாண்டுவிற்கும் திருமண வயது நெருங்கிவிட்டதால், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் பீஷ்மர். சுயம்வரத்தில் குந்தி, பாண்டுவை தன் மணாளனாக ஏற்று மாலை சூட்டினாள். அதன்பின் சில மாதங்கள் கழித்து, மந்தர நாட்டு மன்னனாகிய சல்லியனின் தங்கையான மாத்ரி என்பவளை இரண்டாவது மனைவியாக பாண்டுவிற்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின் விதுரருக்கு தேவகன் என்னும் மன்னனின் மகளை திருமணம் செய்து வைத்தார். இவ்வாறு மூன்று சகோதரர்களுக்கு திருமணம் நடை பெற்றது.
திருமணம் முடிந்தபின் பாண்டு அரசாட்சியில் ஈடுப்பட்டான். அஸ்தினாபுரத்திற்கு கப்பம் கட்ட தவறிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்றான். அந்நாடுகளை வென்று கப்பம் செலுத்த வைத்தான். பாண்டுவின் இந்த வீர செயல்கள் பீஷ்மருக்கு மகிழ்ச்சியை தந்தது. நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னன் பாண்டுவிற்கு வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. அவன் தன் காலத்தின் பெரும்பகுதிகளை காட்டில் கழித்தான். அவனோடு தன் இரண்டு மனைவிமார்களும் காட்டில் தங்கினர். இவ்வாறு ஒரு முறை பாண்டு வேட்டையாடும் போது, இரு மான்கள் இணைந்திருப்பதை கவனிக்காமல் அம்பை செலுத்தி விட்டான். அங்கு மானின் வடிவில் இருந்தவர் முனிவர் ஆவார். இதனால் கோபங்கொண்ட மான், மன்னரை பார்த்து, மன்னா! நான் மான் வடிவில் இருக்கும் கிந்தமா என்ற பெயர் கொண்ட முனிவன். நான் இந்த காட்டில் சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தேன். நான் என் துணையோடு இணைந்திருக்கும்போது நீ என்னை கொன்று விட்டாய்.
என்னைப்போலவே நீயும், உன் மனைவியுடன் ஒன்றாக இணையும்போது உன் உயிர் பிரியும். அப்பொழுது உன்னுடன் இருக்கும் மனைவியின் உயிரும் பிரியும். நான் மகிழ்ச்சியாக இருந்த பொழுது நீ என்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டாய். அதேபோல் நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது துயரம் உன்னை வந்தடையும். இது என் சாபமாகும் எனக் கூறி மறைந்தார். முனிவரின் இந்த சாபத்தை நினைத்து அளவற்ற துன்பம் அடைந்தான், மன்னன் பாண்டு. தன் மனைவிமார்களிடம் ஓடி வந்து முனிவரால் ஏற்பட்ட சாபத்தை பற்றிக் கூறினான். இனி மேல் நான் முக்தியை பெற தவ வாழ்க்கை மேற்கொள்ள போகிறேன். என் மனைவிமார்கள், உற்றார் உறவினர்களை துறந்து காய் கனிகளையும் உண்டு, இனி வன வாழ்க்கையை மேற்கொள்ள போகிறேன். இனி அனைத்து உயிர்களிடத்தும் நான் என் பிள்ளைகள் போல் அன்பாக நடந்துக் கொள்வேன். இனி யார் என்னை மதித்தாலும், மதிக்காவிட்டாலும் என் தவ பயணத்தை மேற்கொள்ள போகிறேன் என்றான்.
இதைக் கேட்ட பாண்டுவின் மனைவிகள் குந்தி மற்றும் மாத்ரி அளவற்ற துன்பம் அடைந்தனர். அவர்கள், மன்னா! நாங்களும் எங்கள் உணர்ச்சிகளை அடக்கி, ஆடம்பரங்களை துறந்து, கடும் நோன்புகள் இருந்து உங்களுக்கு துணையாக இருப்போம். நீங்கள் எங்களை கைவிட்டீரானால் நாங்கள் அந்த நொடியே உலகத்தை துறப்போம் என்றனர். அதன் பின் பாண்டு தன்னிடமிருந்த கிரீடம், ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் அந்தணருக்கு கொடுத்து விட்டான். பிறகு பாண்டு பணியாட்களை அழைத்து, அஸ்தினாபுரத்தின் மன்னனான பாண்டு, தன் இரு மனைவிகளுடன், ஆசை, இன்பம், ஆடம்பரம், செல்வம் என அனைத்தையும் துறந்து கானகம் சென்றுவிட்டார் என தெரிவியுங்கள் என்றான். இச்செய்தியைக் கேட்டு பணியாட்கள் துன்பம் அடைந்து கண்ணீர் விட்டனர். பிறகு அவர்கள் அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பிச் சென்றனர்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக