சனி, 1 பிப்ரவரி, 2020

திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் பிறப்பு...!


 வியாசர், அன்னையே! நான் சந்ததி தர வேண்மென்றால் அப்பெண்கள் இருவரும் எனது இந்த விகார தோற்றக் கண்டு அருவருப்புக் கொள்ளக்கூடாது. என்னிடமிருந்து வரும் இந்த நாற்றத்தையும் பொருட்படுத்தக் கூடாது. இவ்வாறு அம்பிகை என்னுடன் ஒன்று சேர்ந்தால் அவளுக்கு பிறக்கும் மகன் நூறுகளை பெறுவான் எனக் கூறினார். உடனே சத்யவதி அம்பிகையை அழைத்து, மகளே! நீ ஒரு முனிவருடன் ஒன்று சேர்ந்து புத்திரரை பெற வேண்டும். இதை நீ நம் குல விருத்திக்காக மறுக்காமல் செய்ய வேண்டும் என்றாள். அம்பிகையும், நாட்டின் நலன் கருதியும், குல விருத்திகாகவும் இதற்கு சம்மதித்தாள். அன்றிரவு அம்பிகை மாளிக்கைக்கு வியாசர் சென்றார். வியாசரின் விகாரமான தோற்றத்தைக் கண்டு அம்பிக்கை தன் இரு கண்களையும் மூடிக் கொண்டாள். இரவு முழுவதும் அவள் தன் கண்களை திறக்கவில்லை.

 மறுநாள் வியாசர் சத்யவதியிடம், அன்னையே! அம்பிக்கைக்கு வீரமுடன் மகன் பிறப்பான். ஆனால் அவள் என்னைக் கண்டு கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்கு பிறக்கும் மகன், கண் இல்லாதவனாக இருப்பான். அவனின் பெயர் திருதிராஷ்டிரன் என்றார். சில மாதங்கள் கழித்து அம்பிகை ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். அக்குழந்தை குருடனாக இருந்தது. சத்யவதி வியாசரை நினைத்தாள். வியாசர் சத்யவதி முன் தோன்றினார். சத்யவதி, மகனே! குரு வம்சத்தில் குருடனாக இருப்பவர் எவ்வாறு அரசாள முடியும். அவன் தகுதியற்றவன் என புறக்கணித்து விடுவர். அதனால் நீ அம்பாலிகையுடன் சேர்ந்து ஒரு சிறந்த மகனை தர வேண்டும் என்றாள். அன்றிரவு அம்பாலிகை மாளிகைக்குச் சென்றார் வியாசர். வியாசரின் விகாரத் தோற்றத்தைக் கண்டு அம்பாலிகையின் உடல் வெளுத்து போனது.

 மறுநாள் வியாசர் சத்யவதியிடம், அன்னையே! அம்பாலிகைக்கு பிறக்கும் மகன் வெண்மை நிறத்துடன் இருப்பான். அவனின் பெயர் பாண்டு. அவனுக்கு ஐந்து குழந்தைகள் பிறப்பார்கள் என்றார். அதே போல அம்பாலிகையும் சில மாதங்களில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அக்குழந்தை வெளுத்து காணப்பட்டது. மறுபடியும் சத்யவதி வியாசரை நினைத்தாள். வியாசர் சத்யவதி முன் தோன்றினார். சத்யவதி, மகனே! இரு குழந்தைகளும் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள். அதனால் அம்பிகைக்கு மற்றொரு குழந்தையை தர வேண்டும் என வேண்டினாள். ஆனால் அம்பிகையோ வியாசரின் விகார உருவத்தைக் கண்டு பயந்து பணிப்பெண்ணை அனுப்பினாள். வியாசரும், பணிப்பெண்ணும் மகிழ்ச்சியாக இணைந்தார்கள். மறுநாள் வியாசர், இப்பெண்ணின் அடிமைத்தனம் நீங்கியது. இவளுக்கு பிறக்கும் குழந்தை சிறந்த ஞானியாக விளங்குவான். அவனின் பெயர் விதுரன் எனக் கூறி மறைந்தார்.

 இவ்வாறு வியாசரின் மூலமாக அம்பிகை, அம்பாலிகை மற்றும் பணிப்பெண் மூவருக்கும் திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோர் பிறந்தனர்.

 பீஷ்மர், திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரனை தன் மகன்கள் போல் வளர்த்தார். அனைத்து கலைகளையும், போர் பயிற்சிகளையும், சாஸ்திர கல்வியையும் அளித்தார். பீஷ்மர், நாட்டை கவனித்துக் கொண்டதால் அஸ்தினாபுரத்தில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது. சில வருடங்கள் கழிந்தது. திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் இளமை பருவத்தை அடைந்தனர். பீஷ்மர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். ஒரு நன்னாளின் காந்தார நாட்டின் மன்னான சுபலனின் மகள் காந்தாரரிக்கும், திருதிராஷ்டிரனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் கணவருக்கு பிறவியேலேயே கண் இல்லாததால், தானும் தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டாள். சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவான்.

 காந்தார நாட்டின் மன்னன் சுபலனின் கடைசி மகன் தான் சகுனி. ஒருமுறை காந்தாரியின் திருமணம் பற்றி சர்ச்சை எழுந்த போது, பீஷ்மர் அதை விசாரித்து வர ஒற்றர்களை அனுப்பினார். காந்தாரிக்கு வரப்போகும் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்பதால், முதலில் காந்தாரிக்கும் ஆட்டுக்கடாவுக்கும் திருமணம் செய்து வைத்து, பிறகு ஆட்டுக்கடாவை பலிக் கொடுத்துவிட்டனர் என பீஷ்மரிடம் ஒற்றர்கள் தெரிவித்தனர். இதையறிந்த பீஷ்மர் மிகவும் கோபங்கொண்டார். ஜோதிடர்கள் ஆட்டிக்கடாவை பலிக் கொடுக்காமல் இருந்திருந்தால் கௌரவர்களின் தந்தை ஆட்டுக்கடாவாகிருக்கும் எனக் கூறினர். இது பீஷ்மரை இன்னும் அதிக கோபத்தை தூண்டியது. இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தால் ஏளனம் செய்வார்கள் என நினைத்து, சுபலனையும் அவரது குடும்பத்தையும் அழிக்க நினைத்தார். ஆனால் ஒரு குடும்பத்தை அழிப்பது அதர்மம் என்பதை உணர்ந்த பீஷ்மர் அவர்களை சிறை பிடித்தார்.

 சிறையில் அவர்களுக்கு தினமும் சாப்பிட ஒரு கைப்பிடி உணவு கிடைத்தது. இன்னும் சிறிது உணவு அதிகம் கேட்பதும், மகள் வீட்டிலிருந்து தப்பி ஓடுவது அதர்மம் என சுபலன் நினைத்தார். இவ்வாறு பல நாட்கள் கடந்தது. உணவுக்காக சகோதர்களிடம் சண்டை ஏற்பட்டது. இதைப்பார்த்த சுபலன் கடைசியில் ஒரு முடிவு செய்தார். நம்மில் புத்திசாலியானவன் யாரோ அவன் மட்டும் உணவை உண்டு பீஷ்மரை பழி வாங்கட்டும் என்றான். இந்த யோசனைக்கு அனைவரும் சம்மதித்தனர். இளையவனான சகுனியை தேர்ந்தெடுத்தனர். நாட்கள் செல்ல செல்ல பட்டினியால் குடும்பத்தில் ஒவ்வொருவராக இறக்க தொடங்கினர். சுபலன் இறக்கும் தருவாயில் சகுனியின் கணுக்காலை உடைந்தார். சுபலன், மகனே! நீ இனிமேல் நடக்கும்போது நொண்டுவாய். அப்பொழுது கௌரவர் நமக்கு செய்த அநீதி உனக்கு நினைவுக்கு வரும். அவர்களை நீ மன்னிக்க கூடாது என்றார்.

உனக்கு தாயத்தின் மேல் விருப்பம் உண்டு. அதனால் நான் இறந்த பின் என் கை விரல் எலும்புகளை தாயக்கட்டைகளாக செய்துக் கொள். அந்த தாயக்கட்டைகளில் என் கோபம் முழுவதும் நிறைந்திருக்கும். நீ ஒவ்வொரு முறையும் தாயம் விளையாட நீ தாயத்தை உருட்டும்போது நினைத்த எண்ணிக்கை விழும். அதனால் நீ எப்பொழுது வெற்றி பெறுவாய் என்றார். சில நாட்களில் சகுனியின் குடும்பத்தில் அனைவரும் இறந்தனர். சகுனி மட்டும் பிழைத்து பீஷ்மரின் கவனிப்பில் வாழ்ந்தான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்