வியாழன், 6 பிப்ரவரி, 2020

துரியோதனின் கோபம்...!

 பாண்டுவிற்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். வனத்தில் பாண்டுவும் அவனின் மனைவிமார்களும், குழந்தைகளை அன்போடு வளர்த்து வந்தனர். இவ்வாறு சில வருடங்கள் கழிந்தது. ஒரு சமயம் பாண்டுவும், மாத்ரியும் வனத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாண்டு, மாத்ரியின் அழகை கண்டு மயங்கினான். மாத்ரியை நெருங்க முயன்றான். மாத்ரி எவ்வளவோ தடுக்க முயன்றும், பாண்டுவிற்கு முனிவர் கொடுத்த சாபம் நினைவிற்கு வரவில்லை. அழகில் மயங்கிய பாண்டு, மாத்ரியுடன் இணைந்தான். அப்பொழுது முனிவர் கொடுத்த சாபத்தினால் இருவரின் உயிரும் அந்த இடத்திலேயே பிரிந்தது.

 இதை அறிந்த குந்தி, ஓடிச்சென்று பாண்டுவையும் மாத்ரியையும் கண்டாள். அவர்களின் நிலையைக் கண்டு அளவற்ற துன்பம் அடைந்தாள். அதன் பின் அங்கிருக்கும் முனிவர்கள் அனைவருக்கும் பாண்டு இறந்த விட்டான் என்னும் செய்தி பரவியது. இதை அறிந்த முனிவர்கள், பாண்டுவிற்காக மிகுந்த வருத்தம் கொண்டனர். அவர்கள் குந்தியிடம், தேவி! பாண்டு பாவமற்றவன். அவன் மன்னனாக திகழ்ந்து, ஒப்பற்ற தேவர்களின் மகன்களை உனக்கு கொடுத்து சென்றிருக்கிறான் என ஆறுதல் கூறினர். இச்செய்தி அஸ்தினாபுரத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பாண்டுவும், மாத்ரியும் இறந்துவிட்ட செய்தியை அறிந்த அனைவரும் அளவற்ற துன்பம் அடைந்தனர்.

 பாண்டுவை எண்ணி கண்கலங்கினர். அப்பொழுது பீஷ்மர், திருதிராஷ்டிரா! தன் கணவனை இழந்துவிட்ட குந்தி தன் ஐந்து குழந்தைகளை எவ்வாறு தனியாக வளர்ப்பாள். அதனால் குந்தியையும், அவளின் மகன்களையும் அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும் என்று கட்டளையாக கூறினார். திருதிராஷ்டிரனும், பீஷ்மரின் கட்டளைக்கு ஏற்ப அவர்களை அவ்வாறே அழைத்து வருமாறு கூறினார். அதன் பிறகு அஸ்தினாபுரத்தில் இருந்து அனைவரும், பாண்டு மற்றும் மாத்ரியின் ஈமச்சடங்கில் கலந்துக் கொள்ள சென்றனர். வனத்தில் முனிவர்கள் முன்னிலையில், பாண்டுவின் புதல்வர்கள் ஐவரும் ஈமச்சடங்குகளை முறைப்படி செய்தனர்.

 அதன் பிறகு பீஷ்மர், குந்தியையும், அவளின் மகன்களையும் அரண்மனைக்கு அழைத்து வந்தார். திருதிராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் தன் மகனே நாடாள வேண்டும் என்னும் எண்ணம் மனதில் இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு பாண்டுவின் குழந்தைகள் நாடாள கூடாது என்னும் எண்ணம் மனத்தில் இருந்தது. அரண்மனைக்கு வந்த குந்தியிடம், திருதிராஷ்டிரனும், காந்தாரியும் மனதில் வஞ்ச எண்ணம் இருந்தாலும் குந்தியின் முன் அன்போடு நடந்துக் கொண்டனர். பாண்டவர்களும், கௌரவர்களும் சிறு வயது என்பதால் விளையாடும் அன்போடு விளையாடினர். ஆனால் அவர்கள் விளையாடும் விளையாட்டில் அர்ஜூனனும், பீமனும் மட்டுமே வெற்றி பெறுவது துரியோதனனுக்கு கோபத்தை மூட்டியது.

 இதனால் துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் வெறுப்பும், கோபமும் அதிகமானது. இதனால் துரியோதனன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாண்டவர்களை கேலியும், கிண்டலும் செய்வான். பாண்டவர்களின் மனதில் துன்பம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். பீமனின் ஆற்றல் துரியோதனனுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பீமனுக்கு இணையானவன் யாரும் இல்லை என்பதால் சூழ்ச்சியால் வெல்ல முயன்றான். அதற்காக சகுனியின் உதவியை நாடினான். சகுனி, பீமன் சாப்பாட்டு பிரியன் என்பதால் அவனுக்கு கொடுக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்தால் அவன் இறந்து விடுவான். அதன் பிறகு மீதம் இருக்கும் சகோதரர்களை நம் அடிமைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறினான்.

 சகுனியின் யோசனையைக் கேட்ட துரியோதனன் ஒரு திட்டம் தீட்டினான். அடுத்த நாள் அனைவரும் நந்தவனத்தில் விளையாட்டிக் கொண்டிருந்தனர். அங்கு பீமன், நகுலன், சகாதேவன் மூவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய நேரம் ஆனப் படியால் பீமனுக்கு பசி ஏற்பட்டது. மற்ற சகோதரர்கள் வந்தவுடன் ஒன்றாக சாப்பிடலாம் என நினைத்து விளையாடினான். துரியோதனன், நதி ஓரமாக ஒரு குடிலை அமைத்து, அங்கு வித விதமான சுவையான உணவு பண்டங்களை வைத்திருந்தான். அதில் அவன் பாயாசத்தில் விஷத்தை கலந்திருந்தான். அதன் பிறகு திரியோதனன் விளையாடிக் கொண்டிருந்த பீமனிடம் சென்று, அன்பாக பேசினான். ஆனால் பீமன், துரியோதனை கண்டவுடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

 துரியோதனன்! சகோதரா, நான் செய்த தவறுகளுக்கு என்னை மன்னித்துவிடு. அதற்காக உனக்கு விருந்தளிக்க விரும்புகிறேன். அதில் உனக்கு பிடித்தமான நிறைய உணவுகள் பண்டங்களை வைத்துள்ளேன். நீ என்னுடன் வந்து சாப்பிடு எனக் கேட்டான். துரியோதனனின் பாசாங்கை நம்பிய பீமன், நான் என் சகோதரர்கள் இல்லாமல் எவ்வாறு உண்பது? எனக் கேட்டான். அப்பொழுது நகுலனும், சகாதேவனும், அண்ணா! இங்கு காத்திருங்கள் நாங்கள் சென்று அழைத்து வருகிறோம் எனக் கூறி விட்டு சென்றனர். அதன்பின் துரியோதனன், பீமனை குடிலுக்கு அழைத்துச் சென்றான். அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பண்டங்களை கண்ட பீமனுக்கு பசி இன்னும் அதிகமானது. அப்பொழுது துரியோதனன் விஷம் கலந்த பாயாசத்தை எடுத்து பீமனிடம் கொடுத்தான்.

பீமன் அப்பாயாசத்தை வாங்கி அருந்தினான். பாயாசத்தை அருந்திய சில நேரங்களில் பீமன் மயங்கி விழுந்தான். உடனே துரியோதனன், மறைத்து வைத்திருந்த கயிற்றை எடுத்து பீமனின் கைகளையும், கால்களையும் கட்டினான். பீமனின் வாயையும் துணியால் வைத்து அடைத்தான். அதன் பின் சகுனியின் உதவியால் பக்கத்தில் இருக்கும் நதியில் போட்டுவிட்டனர். பீமனின் உடல் நதியின் ஆழத்திற்கு சென்றது.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்