மக்கள் குறைகளை போக்கும் ஸ்ரீரங்கநாதர்சுவாமி திருக்கோவிலைப் பற்றி காண்போம்.
பல்லாயிரக்கணக்கான பெருமாள் கோவில்களில் உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கநாதர்சுவாமி கோவில் திருச்சியில் அமைந்துள்ளது.
கோவில் பிறந்த கதை :
திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா, நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.
ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை, எவ்வளவோ முயன்று பார்த்தான். எடுக்க முடியாமல் கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான்.
அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் 'தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
தலச் சிறப்பு :
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் இத்தலம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும்.
மதுரகவி ஆழ்வாரை தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும். கவிசக்கரவர்த்தி கம்பர், இராமாயணத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் (தாயார் சன்னதிக்கு அருகில்).
கம்பீர காட்சி :
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீPரங்கம் ராஜகோபுரமாகும். இதன் உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்கு ராஜகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறைதான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
சிற்பங்களின் அழகு :
இக்கோயிலில் கட்டிடக்கலைக்கு பறை சாற்றக்கூடிய அளவில் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபமும், அதில் உள்ள திருமாமணி மண்டபமும், ஷேசராய மண்டபமும் ஆகும். சேஷராயர் மண்டபத்தில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்களின் அழகு நம்நாட்டினவரை மட்டுமல்ல வெளிநாட்டவரையும் ஆச்சரியபட வைக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
தன்வந்திரி சன்னிதி :
தேவர்களும், அசுரர்களும், திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது விஷத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களைக் காக்க தன்வந்திரி பெருமாள் அவதாரம் எடுத்து காத்தார். இத்திருக்கோயிலில் உயர்ந்த இடத்தில் கிழக்கு நோக்கி தன்வந்திரி சன்னதி உள்ளது. வைணவத்திருத்தலங்களில் ஸ்ரீPரங்கத்தில் மட்டுமே தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது. கடும் நோயுற்றவர்கள் இந்த சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட்டால் உடம்பில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நோயுற்றவர்கள் இந்த சன்னதியில் தன்வந்திரி பெருமாளிடம் வேண்டி, அர்ச்சனை, திருமஞ்சனம் செய்து நோய்நீங்கி வளம் பெற்று வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக