Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அநிருத்தரின் பிரார்த்தனை! (மூன்றாம் பாகம் : கொலை வாள்)

முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்கள். பலர் இளவரசரைப் பற்றிய தங்கள் கவலையையும் வெளியிட்டார்கள். முதன் மந்திரியும் கவலை தேங்கிய முகத்துடனேதான் தோன்றினார். ஆனாலும் இரு கைகளையும் தூக்கி ஜனங்களுக்கு ஆறுதலும் ஆசியும் கூறும் பாவனையில் சமிக்ஞை செய்துகொண்டு சென்றார். அரண்மனைக் கட்டிடத்தின் முகப்பை அடைந்ததும் பல்லக்கு கீழே இறக்கப்பட்டது. முதன் மந்திரி வெளி வந்து முதலில் மேலே நோக்கினார். பெரிய ராணியும் இளவரசியும் அங்கே நிற்பதைப் பார்த்து, வணக்கம் செலுத்தினார். பிறகு, துவந்த யுத்தம் நடந்த இடத்தை நோக்கினார். இவ்வளவு நேரம் தங்களைச் சுற்றி நடப்பது ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் வந்தியத்தேவனும், பினாகபாணியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆழ்வார்க்கடியான் இதற்குள் இறங்கிவந்து முதன் மந்திரியின் காதருகில் ஏதோ சொன்னான். அவர் தம்முடன் வந்த சேவகர்களைப் பார்த்து, 'அரண்மனை முற்றத்தில் கலகம் செய்யும் இந்த முரடர்களை உடனே சிறைப்படுத்துங்கள்!" என்று கட்டளையிட்டார். சேவகர்களுடன் ஆழ்வார்க்கடியானும் கூட்டத்தைப் பிளந்து கொண்டு சென்றான். சண்டை போட்ட இருவரையும் சேவகர்கள் கைப்பற்றி அவர்களுடைய கைகளை வாரினால் பிணைத்தார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை நோக்கி ஜாடை செய்யவே, அவன் தன்னைச் சிறைப்படுத்தும்போது சும்மாயிருந்தான்.

அநிருத்தர் மேல்மாடத்துக்குச் சென்றார். அங்கு நின்றபடி ஜனங்களைப்பார்த்து, 'உங்களுடைய கவலையையும் கோபத்தையும் நான் அறிவேன். சக்கரவர்த்தியும், ராணிமார்களும் உங்களைப் போலவே துயரத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவர்களுடைய கவலையை அதிகப்படுத்தும்படியான காரியம் எதுவும் நீங்கள் செய்யவேண்டாம். இளவரசரைத் தேடுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் அமைதியாக வீடு திரும்புங்கள்" என்று கூறினார்.

'சக்கரவர்த்தியை நாங்கள் பார்க்கவேண்டும். சக்கரவர்த்தி பழையாறைக்குத் திரும்பி வரவேண்டும்" என்று கூட்டத்தில் ஒருவரும் கூறினார்.

'இலங்கையில் உள்ள எங்கள் ஊர் வீரர்கள் கதி என்ன?" என்று இன்னொருவர் கேட்டார்.

'சக்கரவர்த்தி தஞ்சை அரண்மனையில் பத்திரமாயிருக்கிறார். அவர் தங்கியுள்ள அரண்மனையை இப்போது வேளக்காரப்படையினர் இரவு பகல் என்று காவல் புரிகின்றனர். கூடிய சீக்கிரத்தில் சக்கரவர்த்தியை இந்த நகருக்கு நானே அழைத்து வருகிறேன். இலங்கையில் உள்ள நம் வீரர்களைப் பற்றியும் உங்களுக்கு கவலை வேண்டாம். ஈழத்துப் போர் நமக்குப் பூரண வெற்றியுடன் முடிந்து விட்டது. நம் வீரர்கள் விரைவில் திரும்பி வந்து சேருவார்கள்!" என்று முதன் மந்திரி அறிவித்ததும் கூட்டத்தில் பெரும் உற்சாக ஆரவாரம் ஏற்பட்டது. சுந்தரசோழரையும், அன்பில் அநிருத்தரையும் வாழ்த்திக் கொண்டு ஜனங்கள் திரும்பலானார்கள்.

முதன் மந்திரி பெரிய மகாராணியைப் பார்த்து, 'தேவி, தங்களிடம் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்! அரண்மனைக்குள் போகலாமா?" என்றார். இளவரசியைத் திரும்பி பார்த்து, 'அம்மா! உன்னிடம் பிற்பாடு வருகிறேன்" என்று கூறியதும், குந்தவை தன்னுடைய இருப்பிடத்துக்குப் புறப்பட்டாள்.

அவளுடைய மனத்தில் இப்போது பல கவலைகள் குடிகொண்டன. சோழ சாம்ராஜ்யத்தில் யாராவது ஒருவரிடம் குந்தவை பயம் கொண்டிருந்தாள் என்றால், அவர் முதன் மந்திரி அநிருத்தர்தான். கழுகுப் பார்வையுள்ள மனிதர் அவர். புறக்கண்களினால் பார்ப்பதைத் தவிர எதிரேயுள்ளவர்களின் நெஞ்சிலும் ஊடுருவிப் பார்த்து, அவர்களுடைய அந்தரங்க எண்ணங்களை அறியும் ஆற்றல் படைத்தவர். அவருக்கு எவ்வளவு தெரியும் - எவ்வளவு தெரியாது. அவரிடம் எதைச் சொல்லலாம் எதைச் சொல்லாமல் விடலாம் என்பதைப்பற்றி இளைய பிராட்டிக்கு ஒரே குழப்பமாயிருந்தது. வாணர் குல வீரரையும், பினாகபாணியையும் சேர்த்து அவர் சிறைப்படுத்தும்படி கட்டளையிட்டது இளவரசிக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. அதை வெளிக் காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. அந்த மாபெரும் ஜனக்கூட்டத்தின் முன்னால் வந்தியத்தேவனுக்குப் பரிந்து பேசவும் முடியவில்லை. 'என்னிடம் பிற்பாடு வரப்போகிறாராமே? வரட்டும். ஒரு கை பார்த்து விடுகிறேன்!" என்று மனத்தில் கறுவிக்கொண்டே தன் அந்தப்புரத்தை நோக்கி விரைந்து சென்றாள்.
செம்பியன் மாதேவி சோழ சாம்ராஜ்யத்தில் அனைவருடைய பயபக்தி மரியாதைக்கும் உரியவராயிருந்தவர். முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரும் அதற்கு விலக்கானவர் அல்ல. ஆனாலும், அம்மூதாட்டி இச்சமயம் ஏதோ ஒருவித பயத்துடனேயே நடந்து கொண்டார். அநிருத்தர் ஆசனத்தில் அமர்ந்த பிறகே தாம் அமர்ந்தார்.

'ஐயா! சில காலமாக என் தலையில் இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருக்கிறது. நீரும் அத்தகைய செய்தி ஏதேனும் கொண்டு வந்தீரா? அல்லது ஆறுதலான வார்த்தை சொல்லப் போகிறீரா?" என்று வினவினார்.

'அம்மணி! மன்னியுங்கள்! தங்கள் கேள்விக்கு என்னால் விடை சொல்ல முடியவில்லை. நான் கொண்டு வந்திருக்கும் செய்தியைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தைப் பொறுத்திருக்கிறது!" என்றார் தந்திரத்திலே தேர்ந்த மாதிரி.

'பொன்னியின் செல்வனைப் பற்றிய செய்தி உண்மைதானா, ஐயா! என்னால் நம்பவே முடியவில்லையே? அருள் மொழிவர்மனைப் பற்றி நாம் என்னவெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோம்? இந்த உலகத்தையே ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவன் என்று நாம் எத்தனை தடவை பேசியிருக்கிறோம்?..."

'பெருமாட்டி! ஜோசியர்கள் அவ்விதம் சொல்வதாகத் தாங்கள் என்னிடம் கூறியது உண்மைதான். அடியேன் தங்களை மறுத்தும் பேசியதில்லை. ஒத்துக்கொண்டும் பேசியதில்லை!"

'அது போகட்டும். இப்போது சொல்லுங்கள். பொன்னியின் செல்வனைச் சமுத்திர ராஜன் கொள்ளை கொண்டு விட்டது நிச்சயந்தானா?"

'நிச்சயம் என்று யார் சொல்ல முடியும், தாயே! அம்மாதிரி செய்தி நாடு நகரமெங்கும் பரவியிருப்பது நிச்சயம்."

'அது உண்மை என்று ஏற்பட்டால், இந்தச் சோழ நாட்டின் கதி என்ன? எத்தகைய விபரீதங்கள் ஏற்படும்?"

'விபரீதங்கள் அது உண்மை என்று ஏற்படும் வரையில் காத்திருக்கப் போவதில்லையென்று தோன்றுகிறது..."

'ஆம், ஆம்! விபரீதம் நேரிடுவதற்கு வதந்தியே போதுமானதுதான். இந்தப் பழையாறை நகரமக்கள் இவ்வளவு ஆத்திரங்கொண்டு திரளாக அரண்மனைக்குள் பிரவேசித்ததை இதுவரையில் நான் பார்த்ததில்லை...."

'பழையாறையில் மட்டுந்தான் இப்படி நடந்ததென்று கருத வேண்டாம். தஞ்சாவூர் நகரம் நேற்று முதல் அல்லோலகல்லோலமாயிருக்கிறது. வேளக்காரப் படையினர் சக்கரவர்த்தியின் அரண்மனையைவிட்டு நகர மறுத்துவிட்டார்கள். மக்கள் கோட்டைக்குள் திரள் திரளாகப் புகுந்து பழுவேட்டரையர்களின் மாளிகைகளைச் சூழ்ந்து கொண்டார்கள். மதங் கொண்ட யானைகளை ஜனங்கள் பேரில் ஏவி விட்டு அவர்களைக் கலைந்து போகும்படி செய்ய வேண்டியதாயிற்று..."

'ஐயோ! இது என்ன விபரீதம்! எத்தகைய பயங்கரமான செய்தி!"

'மதுராந்தகர் பழையாறைக்கு வந்துவிட்டதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் அந்தப் பயங்கரமான பழி அவரையும் சேர்ந்திருக்கும்..."

'ஐயா! மதுராந்தகன் எப்படி மாறிப் போயிருக்கிறான் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்."

'ஆச்சரியப்பட மாட்டேன், தாயே! அவை எல்லாம் எனக்குச் சில காலமாகத் தெரிந்த விஷயந்தான்."

'தெரிந்திருந்தும் அவனுடைய மனத்தை மாற்றத் தாங்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லை. இப்போதாவது யோசனை சொல்லி உதவுங்கள்."

'அம்மா! மதுராந்தகருடைய மனத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய கட்சியை ஆதரித்துப் பேசவே நான் வந்திருக்கிறேன்...."

'அப்படியென்றால்? எனக்கு விளங்கவில்லை, ஐயா!"

'அம்மணி! மதுராந்தகர் இந்தச் சோழ சிங்காதனம் தமக்கு உரியது என்று கருதுகிறார். சக்கரவர்த்திக்குப் பிறகு தாம் இந்த இராஜ்யத்தை ஆளவேண்டுமென்று ஆசைப்படுகிறார். அது நியாயமான ஆசை, நன்றாக அவர் மனத்தில் வேரூன்றி விட்ட ஆசை. அதைத் தடுக்க முயல்வதினால் சோழ ராஜ்யத்துக்கு நன்மை ஏற்படாது. அதை நிறைவேற்றி வைப்பதுதான் உசிதம்..."

'ஐயோ! இது என்ன வார்த்தை? தாங்கள் கூடவா சோழ சக்கரவர்த்திக்குத் துரோகம் செய்யத் துணிந்துவிட்டீர்கள்? இது என்ன விபரீத காலம்?"

'பெருமாட்டி! சக்கரவர்த்திக்குத் துரோகம் செய்ய நான் கனவிலும் கருதியதில்லை. சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரிலேயே வந்தேன். அவர் தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளச் சொன்னதைத்தான் சொல்கிறேன், சக்கரவர்த்தியின் காலத்துக்குப் பிறகு மதுராந்தகர் சிங்காதனம் ஏற விரும்புகிறார். பழுவேட்டரையர்கள் அதற்காகச் சதி செய்கிறார்கள். ஆனால் சக்கரவர்த்தி இப்போது மதுராந்தகருக்கு முடிசூட்டி விட்டுச் சிங்காசனத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறார். இதற்குத் தங்கள் சம்மதத்தைப் பெற்று வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார்..."

'சக்கரவர்த்தி அவ்விதம் செய்ய விரும்பலாம். ஆனால் அதற்கு என்னுடைய சம்மதம் ஒருநாளும் கிட்டாது. என் பதியின் விருப்பத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கல்விக் கடலின் கரை கண்ட முதல் அமைச்சரே! சக்கரவர்த்தியே சொன்னாலும் தாங்கள் இந்த முறைதவறான காரியத்தை என்னிடம் சொல்ல எப்படி வந்தீர்? சோழ சிங்காசன உரிமையைப் பற்றித் தங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த சில உண்மைகள் இருக்கின்றனவென்பதைத் தாங்கள் அடியோடு மறந்துவிட்டீர்களா...?"

'அம்மணி! நான் எதையும் மறக்கவில்லை. தங்களுக்குத் தெரியாத சில உண்மைகளும் எனக்குத் தெரியும். ஆகையினாலேயே சக்கரவர்த்தியின் தூதனாகத் தங்களிடம் வந்தேன்..."

'ஐயா! தங்களுடைய மதி நுட்பமும், இராஜ தந்திரமும் உலகம் அறிந்தவை. அவற்றைப் பெண்பாலாகிய என்னிடம் காட்ட வேண்டாம்..."

'பெருமாட்டி! தங்களிடம் நான் வாதாட வரவில்லை. என் சாமார்த்தியத்தைக் காட்டுவதற்கும் வரவில்லை. இந்தச் சோழநாட்டைப் பேரபாயத்திலிருந்து காப்பாற்றி அருளும்படி மன்றாடிப் பிரார்த்தனை செய்ய வந்தேன்."

'தங்கள் பிரார்த்தனையைப் பிறைசூடும் பெருமானிடம் செலுத்திக் கொள்ளுங்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வமான விஷ்ணு மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்..."

'ஆம், தாயே! தாங்கள் பெரிய மனது செய்யாமற் போனால் அம்பலத்தானும், அரங்கத்தானும்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்."

'அப்படி என்ன ஆபத்து, இந்த நாட்டுக்கு வந்துவிட்டது? மதுராந்தகன் சிங்காதனம் ஏறுவதால் அதை எப்படித் தடுக்க முடியும்?"

'கேளுங்கள், பெருமாட்டி! இன்றைக்கு இந்நகர மாந்தர் கொதித்தெழுந்தது போல், காஞ்சிபுரத்திலிருந்து இராமேசுவரம் வரை உள்ள மக்கள் இன்னும் இரண்டு மூன்று நாளைக்குள் ஆத்திரமடைந்து கொதித்தெழுவார்கள். அத்துடன் முடிந்து விடாது, இலங்கையிலிருந்து பூதிவிக்கிரமகேசரி ஏற்கனவே, படை திரட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார் என்று அறிகிறேன். ஆதித்த கரிகாலனுக்குச் செய்தி எட்டும்போது அவனும் பொறுக்கமாட்டான். வடதிசைச் சைன்யத்துடன் தஞ்சையை நோக்கிக் கிளம்புவான். பழுவேட்டரையர்களும், மற்ற சிற்றரசர்களும் ஏற்கெனவே படை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த யுத்தத்தைப் போன்ற பயங்கரமான தாயாதிச் சண்டை இந்த நாட்டில் நடைபெறும். தங்களுடைய உற்றார் உறவினர் எல்லாரும் அழிந்து விடுவார்கள். இதையெல்லாம் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா...?"

'ஐயா! மதிநுட்பம் மிகுந்த முதல் மந்திரியே! எனக்கு உற்றார் உறவினர் என்று யாரும் இல்லை. மேற்கே மலை நாட்டில் அவதரித்த சங்கரர் என்ற மகாபுருஷனைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டிருப்பீர். அந்த மகான்,

'மாதாச பார்வதி தேவி

பிதா தேவோ மகேச்வர

பாந்தவா: சிவபக்தாஸ்ச"

என்று அருளியிருக்கிறார். என்னுடைய அன்னை பார்வதி தேவி. என்தந்தை பரமசிவன். என் உற்றார் உறவினர் சிவ பக்தர்கள், இந்த உலகில் வேறு பந்துக்கள் எனக்கு இல்லை..."

'அம்மணி! அதே சுலோகத்தில் சங்கரர் அருளியுள்ள நாலாவது வாக்கியத்தைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

'ஸ்வதேசோ புவனத்ரய"

என்றும் அவர்தான் சொல்லியிருக்கிறார். நாம் பிறந்த தேசந்தான் நமக்கு மூன்று உலகமும், தங்களுடைய சொந்த நாடு உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதைத் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?"

'என்னுடைய சொந்த தேசம் எனக்கு மூன்று உலகத்தையும் விட அருமையானதுதான். ஆனால் இந்தச் சாண் அகலத்துச் சோழநாடுதான் நம்முடைய சொந்த நாடா? ஒரு நாளுமில்லை. வடக்கே கைலையங்கிரி வரையில் உள்ள நாடு என்னுடைய நாடு. சோழ நாட்டில் இடமில்லாவிட்டால் நான் காசி க்ஷேத்திரத்துக்குப் போவேன். காஷ்மீரத்துக்கும் கைலாசத்துக்கும் போவேன். அப்படி யாத்திரை கிளம்பும் யோசனை எனக்கு வெகு நாளாக உண்டு, அதற்கு உதவி செய்யுங்கள்..."
'தாயே! தெற்கே திரிகோண மலையிலிருந்து வடக்கே இமோத்கிரி வரையில் உள்ள தேசம் நமது ஸ்வதேசம் என்று ஒத்துக்கொள்கிறேன். இப்படிப் பரந்துள்ள பாரத புண்ணிய பூமிக்குத் தற்போது பேரபாயம் நேர்ந்திருக்கிறது. பட்டாணியர்கள், துருக்கர்கள், மொகலாயர்கள், அராபியர்கள் என்னும் சாதியினர் பொங்கிக் கிளம்பி எந்தப் புது நாட்டைக் கைப்பற்றலாம் என்று புறப்பட்டிருக்கிறார்கள். ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு யவனர்களும், ஷுஹணர்களும் படையெடுத்து வந்ததுபோல் இந்தப் புதிய மதத்தினர் இப்போது அணிஅணியாக இந்நாட்டின் மீது படையெடுக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய மதம் விசித்திரமான மதம். கோவில்களை இடிப்பதும் விக்கிரகங்களை உடைப்பதும் புண்ணியம் என்று நம்புகிறவர்கள். அம்மணி! இவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பேரரசர்கள் யாரும் இப்போது வடநாட்டில் இல்லை. சோழநாட்டு வீரர்கள் கங்கை நதி வரையில், அப்பால் இமயமலை வரையில் சென்று பெரிய பாரத சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகிறார்கள் என்றும், கோயில்களை இடிக்கும் கூட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போகிறார்கள் என்றும், அடியேன் கனவு கண்டு வந்தேன். அந்தக் கனவை நனவாக்கத் தாங்கள் உதவி செய்யுங்கள். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டச் சம்மதித்துச் சோழநாட்டில் தாயாதிச் சண்டை ஏற்படாமலிருக்க உதவி புரியுங்கள்!"

இதைக்கேட்ட செம்பியன் மாதேவி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர், 'ஐயா! ஏதேதோ இந்தப் பேதைப் பெண்ணுக்கு விளங்காத விஷயங்களைச் சொல்லி என்னைக் கலங்க அடித்து விட்டீர்கள். இந்தப் புண்ணிய பாரத பூமிக்கு அப்படிப்பட்ட ஆபத்து நேரிடுவதாயிருந்தால், அதை சர்வேசுவரன் பார்த்துத் தடுக்க வேண்டுமே தவிர, இந்த அபலையினால் என்ன செய்ய முடியும்? என்னுடைய கணவர் இறைவனடியைச் சேரும் சமயத்தில் எனக்குச் சொல்லிவிட்டுப் போனதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன். அதற்கு விரோதமான காரியம் எதுவும் நான் செய்ய மாட்டேன்!" என்றார்.

'அப்படியானால் இதுவரையில் தாங்கள் அறியாத ஓர் உண்மையை இப்போது நான் தெரியப்படுத்தியாக வேண்டும்!" என்றார் அநிருத்தர்.

இச்சமயத்தில் மதுராந்தகன் அங்கே தடபுடலாகப் பிரவேசித்து, 'அம்மா! இது என்ன நான் கேள்விப்படுவது? அருள்மொழிவர்மனைக் கடல் கொண்டு விட்டதா?" என்று கேட்டான்.

'பெருமாட்டி! தங்கள் செல்வக் குமாரருக்கு ஆறுதல் சொல்லுங்கள். நான் சொல்ல விரும்பியதை இன்னொரு சமயம் சொல்லிக் கொள்கிறேன்" என்று முதன் மந்திரி கூறி விட்டுக் கிளம்பினார்.

அவர் வாசற்படி தாண்டியதும், 'இதோ போகிறாரே, இவர்தான் என்னுடைய முதன்மையான சத்துரு. நான் இங்கிருக்கும் போதே தங்களுக்குத் துர்போதனை செய்ய வந்துவிட்டார் அல்லவா?" என்று இளவரசர் மதுராந்தகன் கூறியது அநிருத்தரின் காதிலும் விழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக