ராஜசூயயாகம் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. அனைவரும் அவரவர் நாட்டிற்கு திரும்பிச் சென்றனர். துரியோதனன் அஸ்தினாபுரம் சென்றவுடன் அவையைக் கூட்டினான். அவையில் திருதிராஷ்டிரன், காந்தாரி, சகுனி, பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலானோர் கூடியிருந்தனர். துரியோதனன் பேச்சை தொடர்ந்தான். அர்ஜூனனுக்கு காண்டீபம் என்னும் வில்லும், பீமனுக்கு கிடைத்திருக்கும் கதாயுதமும் என்னை இகழ்ச்சி ஆக்கிவிடும் போல் தெரிகிறது. ராஜசூயயாகத்திற்கு எத்தனை அரசர்கள் வந்தனர். எண்ணற்ற பரிசுகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டுச் சென்றனர். இப்படியேவிட்டால் அந்த தர்மன் அனைவருக்கும் நிகரற்றவனாக ஆகிவிடுவான். இதை நான் தடுக்க வேண்டும்.
சகுனியைப் பார்த்து, மாமா அவர்களே! என்னால் அங்கு நடந்த ராஜசூயயாகத்தை மறக்க முடியவில்லை. அங்கு திரௌபதி என்னை ஏளனமாக பார்த்து சிரித்து விட்டாள். நான் அரண்மனையில் இருந்து வெளியே வரும்போது பளிங்கு கல் என நினைத்து தண்ணீரில் விழுந்து விட்டேன். அதைப் பார்த்த திரௌபதி என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்து, அவமானப்படும் வகையில் பேசிவிட்டாள். அதனை என்னால் இப்பொழுது கூட மறக்கமுடியவில்லை. அதனால் நான் அவர்களை பழிவாங்க வேண்டும் அதற்கு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் என்றான். அப்பொழுது சகுனி, மருமகனே! தர்மரை எதிர்த்து வெல்வது என்பது இயலாத ஒன்று. அதேப்போல் தான் பீமனும், அர்ஜூனனும். இவர்களை நம்மால் போரில் வெல்ல முடியாது என்றான்.
அதன் பின் சகுனி, மருமகனே! நீ ஒப்பற்ற தெய்வ மண்டபம் ஒன்றைச் செய். அதைப் பார்க்க பாண்டவர்களுக்கு இங்கு அழைப்பு விடுப்போம். இங்கு சூதாட்டம் ஆட அவர்களுக்கு அழைப்பு விடுப்போம். என் சூதாட்டத்தின் திறமைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அடிமைப்படுத்துவோம் எனக் கூறி சிரித்தான். இதைக் கேட்ட திருதிராஷ்டிரன், சகுனி! என் பிள்ளைகளை கெடுக்க நீ ஒருவனே போதும். வேறு யாரும் தேவையில்லை. எதற்காக சதோகரர்களிடையே சண்டையை வளர்த்து விடுவிகிறீர்கள். நாம் பாண்டவர்களுக்கு செய்த பகைமையை அவர்கள் பொறுத்து கொண்டுள்ளார்கள்.
துரியோதனன் தரை எது? தண்ணீர் எது? என்று பார்த்து காலை வைத்திருக்க வேண்டும். இத்தகைய செயலை சிறு குழந்தைகள் செய்தால் கூட சிரிக்க தான் செய்வார்கள். இதில் தவறு என்ன உள்ளது எனக் கேட்டான். தன் தந்தையின் இப்பேச்சைக் கேட்டு துரியோதனன் கடும் கோபம் கொண்டான். தந்தையே! மாமா அவர்களின் கருத்து எனக்கு சரி எனப்படுகிறது. அதனால் பாண்டவர்களை அழைத்து சூதாடுவதுதான் எனது முடிவு என்று தீர்க்கமாக கூறினான். தன் மகனின் இத்தகைய செயலைக் கண்டு மிகவும் துன்பம் அடைந்தான் திருதிராஷ்டிரன். மகனே! வீரர்கள் ஒரு போதும் இத்தகைய செயலை செய்ய மாட்டார்கள்.
பிறர் செல்வத்தை விரும்புவதும் தவறு. வஞ்சனை செய்து பிறர் செல்வத்தை கவர நினைப்பதும் தவறு. இது ஏன் உனக்கு தெரியாமல் இருக்கிறது. தயவுசெய்து நீ உனது எண்ணத்தை மாற்றிக் கொள் என்றான். துரியோதனன், தந்தையே! பாண்டவர்களை வெல்ல வேண்டும். அதில் நல்வழியை தேர்வு செய்தால் என்ன? தீய வழியை தேர்வு செய்தால் என்ன? நான் பாண்டவர்களை வெல்ல சூதாட்டத்தை தேர்வு செய்து விட்டேன். இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவிக்காவிட்டால் நான் எனது உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்வேன் என்றான். விதியை வெல்பவர் யார்? இஷ்டம் போல் செய் எனக் கூறினான் திருதிராஷ்டிரன். இதை பீஷ்மரும், விதுரரும் எவ்வளவோ தடுக்க முயன்றனர். அவர்களின் முயற்சி தோல்வியைத் தான் தழுவியது.
தந்தையின் முடிவைக் கேட்டு துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அதன் பிறகு ஒரு அழகிய மணிமண்டபத்தை அமைத்தான். திருதிராஷ்டிரன் விதுரரை அழைத்து! தாங்கள் பாண்டவர்களுக்கு மணிமண்டபத்தை காண அழைப்பு விடுங்கள். அதே சமயம் சகுனியின் திட்டத்தையும் குறிப்பால் உணர்த்திவிட்டு வருவீர்களாக என்றான். அதன் பிறகு விதுரரும் அங்கிருந்து இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி சென்றார். இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த விதுரர் பாண்டவர்களிடம், துரியோதனனின் மணிமண்டபத்தை காண அழைப்பு விடுத்தார். அதன் பின் விருந்தும் இருக்கிறது. சூதாட்ட நிகழ்ச்சியும் இருக்கிறது என வருத்தத்துடன் கூறினார்.
இதைக் கேட்ட தருமர் மிகவும் மனவேதனை அடைந்தார். முன்பே துரியோதனன் எங்களை கொல்ல சதி திட்டம் தீட்டியவன். இப்பொழுது சூதாட்டமா? என்றான். விதுரர், துரியோதனனிடம் சூதாட்டம் வேண்டாம் என்று எவ்வளவு எடுத்துக் கூறியும் அவன் மனம் மாறவில்லை. நீங்கள் உங்களின் சிறிய தந்தையிடம் முறையிட்டால் அதுவும் பயனற்று தான் போகும். திருதிராஷ்டிரன், துரியோதனனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் உடன்படவில்லை என்றார். அதன் பிறகு யுதிஷ்டிரன், எங்களின் சிறிய தந்தை அழைத்துள்ளார். எது நடந்தாலும் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அங்கு செல்வது தான் முறையாகும் என்றான்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக