ஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
ப்ருஹத்ரதா என்னும் அரசன் மகத நாட்டை ஆண்டு வந்தான். அவன் ஒரு சிறந்த சிவ பக்தன். அண்டை அரசுகளை அடக்கி பேரும் புகழுமாக இருந்தான். இரட்டை அரச குமாரிகளை மணந்து அரசு புரிந்து வந்தான். இருப்பினும் திருமணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் அவனுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் மனம் வெறுத்துக் கானகம் சென்று சந்திரகௌஷிகா என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தான். இவனது நிலைகண்டு மனமிறங்கிய முனிவர் பழம் ஒன்றைக் கொடுத்து அதை அவனது மனைவி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார். இரு மனைவிமார்களுக்கும் பழத்தினை இரு சம பாகமாக்கி கொடுத்தான்.
அதன் பின் இருவரும் கர்ப்பமுற்று குழந்தைகளும் பெற்றனர். ஆனால் ஒரு பழத்தை இரு பாதியாக்கி அரசன் கொடுக்க அவர்கள் உண்டதால் மனிதக் கூறின் இரு பாதிகளைப் பெற்றெடுத்தனர். இதனால் கோபம் கொண்ட அரசன் அந்த இரு கூறுகளையும் கானகத்தில் வீசி எறிந்தான். கானகத்தில் ஜைரை என்னும் அரக்கி அந்த இருகூறுகளையும் உண்ண நினைத்தாள். உண்பதற்கு முன் அந்த இரு கூறுகளையும் ஒன்றாக்கினாள். இரு கூறுகளும் ஓருயிராகி குழந்தை சத்தமாக அழத் துவங்கியது. உயிருள்ள குழந்தையை உண்ண விரும்பாத அரக்கி அந்தக் குழந்தையை அரசனிடம் கொடுத்து நடந்தவற்றை விவரமாக கூறினாள். அரசன் அக்குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டு வளர்த்தான்.
ஜராசந்தனும் ஒரு சிவ பக்தன். அவனுக்கு ஒரே குறை. ஆண்வாரிசு இல்லாத ஜராசந்தன் தன் இரு புதல்விகளைக் கம்சனுக்கு திருமணம் செய்து வைத்தான். கம்சனின் மாமனார் என்பதால் அவனும் யாதவர்களை பகைத்துக் கொண்டான். கம்சனின் மரணத்திற்கு பிறகு விதவைகளான அவனது இரண்டு புதல்விகளும் கண்ணீருடன் தங்கள் தந்தையின் மாளிகையை அடைகின்றனர். இதைத் தாள முடியாத ஜராசந்தன் மதுராவை முற்றுகை இடுகிறான். கிருஷ்ணரைக் கொல்வதைத் தவிர அவனுக்கு வேறு நோக்கம் எதுவும் இல்லை. யாதவர்களின் படை அளவு சிறியது என்றாலும் கிருஷ்ணரின் தலைமையின் கீழ் ஆவேசமாக போரிட்டு முற்றுகையை தவிர்த்து பகைவரை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவன் முற்றுகையை யாதவர்கள் தடுத்து நிறுத்தினாலும் உயிர் இழப்பும், பொருள் இழப்பும் யாதவர் பக்கம் அதிகரித்த வண்ணமே இருந்தது.
பிறகு யாதவர்கள் கிருஷ்ணரின் அறிவுரையின் படி மதுராவை விட்டு நகர்ந்து புதிதாக கட்டப்பட்ட துவாரகை என்ற நகரத்திற்குள் குடி புகுந்தனர். அங்கு அவர்கள் வீடுகளையும் கோட்டை கொத்தளங்களையும் கட்டிக் கொண்டு வாழ நினைத்தனர். கண்ணன் ஆண்ட மதுராவைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டு ஜராசந்தன் தோல்வியையே தழுவினான். கிருஷ்ணரும் ஜராசந்தனை வதம் செய்ய சரியான சந்தர்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணர், பீமன், அர்ஜூனன் மூவரும் ஓர் அந்தணன் வேடம் அணிந்து மகத நாட்டை வந்தடைந்தனர். ஜராசந்தனுக்கு மற்ற மன்னர்களை கண்டால் பிடிக்காது. அதனால் அந்தணன் வேடம் அணிந்து சென்றனர். மூவரும் ஜராசந்தனின் அரண்மனைக்கு சென்றனர். வந்திருப்பவர் அந்தணர்கள் என நினைத்து அவர்களுக்கான உபசரிப்பை கொடுத்தான் ஜராசந்தன். அவர்களின் உடலில் இருந்த தழும்புகளை வைத்து இவர்கள் மன்னர்கள் என்பதை கண்டறிந்தான். உடனே அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டான். வந்திருப்பவர் கிருஷ்ணன் என்பதை அறிந்து ஜராசந்தன் மிகவும் கோபம் கொண்டான்.
கிருஷ்ணன் ஜராசந்தனிடம் உன்னிடம் யுத்தம் புரியவே இங்கு வந்துள்ளோம் எனக் கூறினார். ஜராசந்தன் கிருஷ்ணனிடம், கோழையாக ஓடி மறைந்த உன்னிடம் என்னால் யுத்தம் செய்ய முடியாது எனக் கூறினான். கிருஷ்ணர், நீ என்னிடம் போர் புரிய வேண்டாம். இந்த இரு வீரர்கள் யாருடனாவது யுத்தம் புரியலாம். இவன் அர்ஜூனன். வில்வித்தையில் சிறந்தவன். மற்றொருவன் பீமன். மிகவும் பலசாலியானவன். இருவரில் நீ யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றார். வில்வித்தையில் சிறந்தவனிடம் மோதி என் பலத்தை நான் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. பலசாலி என்று கூறினாயல்லவா? அவனிடம் போரிட்டு அவனை மேலோகத்திற்கு அனுப்புகிறேன் என்றான்.
கிருஷ்ணன் நினைத்தவாறே நடந்தது. மறுநாள் இருவருக்கும் ஒரு மேடை அமைக்கப்பட்டது. வேடிக்கை பார்க்க வந்த மன்னர்களும், போர் வீரர்களும், அதிகாரிகளும் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் பொதுமக்கள் இருந்தனர். அர்ஜூனனும், கிருஷ்ணரும் மேடையின் அருகில் வந்து நின்றனர். இருவரும் யுத்தம் புரிய தயாராக இருந்தனர். யுத்தம் ஆரம்பமானது. இருவரும் ஒருவரையொருவர் பலமாக அடிக்க தொடங்கினர். இருவரும் பயங்கரமாக யுத்தம் புரிந்தனர். யுத்தத்தில் இருவரும் சளைக்கவும் இல்லை.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக