இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில்தான்.
தல வரலாறு:-
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சனீஸ்வரன் சுயம்புவாக இங்கு மட்டுமே உள்ளார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதி குலிங்க நாடு என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள மணி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தினகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னனுக்கு வாரிசு இல்லை. இவரது கனவில் தேவலோக ரம்பையும், ஊர்வசியும் வந்து, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்பேரில் ஒரு அந்தணரின் குழந்தையை எடுத்து சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தார். இதற்கிடையே கர்ப்பம் தரித்த ராணி வெந்துருவை, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால், அந்தக் குழந்தைக்கு சுதாகன் என்று பெயரிட்டு வளர்த்தனர்.
மன்னன் தினகரனுக்கு ஏழரை சனி பிடித்தது. பட்டம் சூட்டும் நிலையில் வளர்ப்பு மகன் சந்திரவதனன் அடர்ந்த செண்பக வனத்திற்குள் சென்று தியானம் செய்தார். மனமிறங்கிய சனீஸ்வரன் தியானத்தைப் பற்றி கேட்டபோது, வயதான காலத்தில் தந்தையால் தாங்கிக்கொள்ள முடியாது என்னைப் பிடித்து ஆட்டுங்கள் என்று மன்றாடினான். மனமிரங்கிய சனீஸ்வர பகவான் பிடிக்கும் காலத்தை ஏழரை மாதமாக குறைத்து மறைந்தார்.
மீண்டும் தொடர்ந்து தியானித்தபோது, மீண்டும் சனீஸ்வர பகவான் தோன்றி, தினகரனை பிடிக்கும் காலத்தை ஏழரை நாழிகையாக குறைத்ததோடு, சுயம்புவாகத் தோன்றி அப்பகுதியில் கோவில் கட்டவும் உத்தரவிட்டார்.
அதன்பேரில் இப்பகுதியில் குச்சுப்புற்களால் கோவில் கட்டி வழிபாடு செய்யப்பட்டது. அதனால், இது குச்சனூர் என்று அழைக்கப்பட்டது.
வழிபாடுகளும் சிறப்புகளும்:-
இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் 'ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் 'சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது.
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் 'விடத்தை மரம்" தல மரமாகவும், 'கருங்குவளை மலர்" தல மலராகவும், 'வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது.
இந்த கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.
சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.
மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக