Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

நினைவு வந்தது! (மூன்றாம் பாகம் : கொலை வாள்)


வானதி மீண்டும் ஒரு முறை நினைவற்ற நிலையை அடைந்தாள். அவளுடைய கண்களும் மூடிக் கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாகச் சுய நினைவு வரத் தொடங்கியது. நாகலோகத்திலோ, தேவலோகத்திலோ, தான் இளவரசரை மணந்தது வெறும் பிரமை என்பதை உணர்ந்தாள். இளவரசரைப் பற்றிய துயரமான செய்தி கேட்டதையும், அதன் பேரில் தான் ஓடைக் கரையில் வந்து நின்றதையும், தலை சுற்றி நீரில் விழுந்ததையும் நினைவுபடுத்திக் கொண்டாள். இந்த நினைவுகள் அவளுக்கு எல்லையற்ற ஏமாற்றத்தை அளித்தன. நெஞ்சில் சுருக்கென்று ஈட்டி பாய்வது போன்ற வலியையும் அளித்தன. கண்களைத் திறக்க முயன்றாள், ஆனால் முடியவில்லை. தன்னைத் தண்ணீரிலிருந்து தூக்கிக் கரை சேர்த்தது யாராயிருக்கும்? இளைய பிராட்டியாகத்தான் இருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் படகில் வந்து கொண்டிருந்த குந்தவை தேவியாகத்தான் இருக்க வேண்டும். தன்னை எதற்காக அவர் காப்பாற்றி இருக்க வேண்டும்? ஒரேயடியாக முழுகித் தொலைந்து போகும்படி விட்டிருக்கக் கூடாதா? கண்களைத் திறந்து பேசுவதற்கு முடிந்தவுடனே, 'ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்?" என்று இளைய பிராட்டியுடன் சண்டை பிடிக்க வேண்டும்! தம்முடைய அருமைத் தம்பியிடம் அவருடைய அன்பு இவ்வளவுதானா?...

இதோ இளையபிராட்டி பேசுகிறார். என்ன சொல்கிறார்? யாரிடம் சொல்கிறார்? கேட்கலாம்.

'மயக்கத்தில் ஏதேதோ பிதற்றுகிறாள்! இந்த மட்டும் உயிர் பிழைத்ததே பெரிய காரியம்! நம்முடைய படகு மட்டும் இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்திருந்தால்? இவள் ஓடையில் விழுந்தது நம் கண்ணில் படாமற் போயிருந்தால்? அதை நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது!"

'நாம் பாராமல் விட்டிருந்தால், ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிருக்கும் இந்தப் பெண்ணின் வாழ்க்கை இனிதாக முடிந்திருக்கும். தங்களால் உயிர் பிழைத்த கொடும்பாளூர் இளவரசி வாழ்க்கையில் எவ்வளவோ மனவேதனைப்படவேண்டியிருக்கும்..."

'ஆகா! இது யார்? நம்மிடம் இவ்வளவு அநுதாபத்துடன் பேசுகிறது? ஆம், அந்த வாலிபர் தான். குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரசலாற்றங்கரையிலும் பார்த்த அந்த வீர வாலிபர் தான்! இளவரசர் கடலில் முழுகிய செய்தியையும் அவரே கொண்டு வந்திருக்க வேண்டும். இன்னும் இவர்கள் என்ன பேசிக்கொள்ளப் போகிறார்கள்? கேட்கலாம், கண்ணைத் திறக்க முடியாவிட்டாலும் காது நன்றாய்க் கேட்கிறதல்லவா!"

'இது என்ன, இவ்வளவு நெஞ்சிரக்கம் இல்லாமல் பேசுகிறீர்? ஆண்பிள்ளைகளின் மனதே கல் மனதாகத்தான் இருக்குமோ?" என்றது இளையபிராட்டியின் குரல்.

'அப்படிக் கல் நெஞ்சன் என்று தீர்ப்புக் கூறும் படியாக இப்போது நான் என்ன சொல்லி விட்டேன்?"

'இந்தப் பெண் இறந்திருந்தால் நல்லது என்று சொன்னீரே, அது போதாதா? எவ்வளவு சிரமம் எடுத்து இவளை நான் வளர்த்து வருகிறேன் தெரியுமா?..."

'இவள் பிதற்றிய வார்த்தைகளைத் தாங்கள் கேட்டீர்களா?"

'உம்முடைய செவிகளில் என்ன விழுந்தது?"

'இளவரசரை மணந்து கொள்வது பற்றி ஏதோ சொன்னதாகக் காதில் விழுந்தது..."

'ஆம், நினைவு தெரியாத மயக்கத்திலே கூட அவளுடைய வாய் அப்படி முணுமுணுத்தது. இளவரசர் மீது ஆசை அவள் உள்ளத்தில் அப்படி வேரூன்றியிருக்கிறது."

'அந்த ஆசை இந்தப் பெண்ணுக்கு நல்லதல்ல! அதனால் துன்பமும், ஏமாற்றமுந்தான் ஏற்படும்."

'ஏன் அவ்வாறு சொல்கிறீர்? இவளைக் காட்டிலும் இளவரசருக்கு ஏற்ற உயர்குலப் பெண் வேறு யார்? புராதனமான கொடும்பாளூர் வீரவம்சத்தைப் பற்றி உமக்குத் தெரியாதா?"

'நன்றாய்த் தெரியும். நான் நினைப்பது ஒன்று. தாங்கள் சொல்வது இன்னொன்று. இந்தப் பெண் எவ்வளவு உயர்குலமாயிருந்தால் என்ன? இவள் மனத்திலுள்ள சபலம் நிறைவேறப் போவதில்லை..."

'கட்டாயம் நிறைவேறியே தீரும். அது இவள் மனத்தில் உள்ள சபலம் அன்று. என்னுடைய மனோரதம். நான் செய்து இருக்கும் தீர்மானம்."

'தங்கள் தீர்மானமாயினும், இந்த விஷயத்தில் நிறைவேறாது."

'ஏன் மீண்டும் அவ்விதம் சொல்கிறீர்? இளவரசர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் பத்திரமாயிருக்கிறார் என்று சற்றுமுன் நீ கூறியது உண்மைதானே?"

'ஆகா! இது என்ன இன்பமான செய்தி? இளவரசர் பத்திரமாயிருக்கிறாரா? நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கிறாரா? இந்தச் செய்தியைக் கேட்க இந்தச் செவிகள் கொடுத்து வைத்திருந்தனவே? ஓடை நீரில் முழுகிச் சாகாமல் நான் உயிர் பிழைத்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று! இளையபிராட்டிக்கு எத்தனையோ விதத்தில் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதுவும் ஒன்று இப்போது சேர்ந்தது."

'ஆனால் ஐயோ! இது என்ன மேலே இவர் சொல்லும் செய்தி? செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கிறதே!"

'அம்மணி! இளவரசர் பத்திரமாயிருக்கிறார் என்பது உண்மைதான். அதனால் இவளுடைய ஆசை நிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? இளவரசர் இந்தப் பெண்ணை மணந்து கொள்ளமாட்டார் என்று நான் நினைக்கிறேன்..."

'நீர் எதை வேணுமானாலும் நினைக்கலாம். இந்த உலகில் நான் இட்ட கோட்டைத் தாண்டாமல், என் பேச்சைத் தட்டாமல் நிறைவேற்றக்கூடிய ஓர் ஆண்மகன் இருக்கிறான். அவன்தான் என் தம்பி அருள்மொழிவர்மன்!"

'இளவரசி! அத்தகையவன் நானும் ஒருவன் இருக்கிறேன்..."

'பின்னர் என்ன எனக்குக் குறைவு? என்னுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு என்ன தடை? பழுவேட்டரையர்கள் இதற்குக்கூடக் குறுக்கே வருவார்களா, என்ன...?"

'அது எனக்குத் தெரியாது. தங்களிடம் இளவரசருக்கு எல்லையற்ற அன்பு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். வேறு எந்தக் காரியத்திலும் தங்கள் வார்த்தையைக் கேட்பார். அவருக்கு இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் இஷ்டமில்லை. என் கண் முன்னால் இலங்கை மணி மகுடத்தை வேண்டாம் என்று மறுத்தார். ஆயினும் தாங்கள் வற்புறுத்தினால் இராஜ்யம் ஆளுவதற்குக்கூடச் சம்மதிப்பார். ஆனால் இந்தப் பெண்ணை மணப்பதற்கு..."

'சம்மதிக்க மாட்டான் என்றா சொல்கிறீர்? அவ்விதம் என் அருமை தோழியை நிராகரிப்பதற்கு அவன் இவளிடம் என்ன குறையைக் கண்டான்? நீர்தான் என்ன கண்டீர்?"

'அம்மணி! நான் இந்தப் பெண்ணிடம் ஒரு குறையும் காணவில்லை. கண்டாலும் நம்ப மாட்டேன். இளைய பிராட்டி அரண்மனையில் பணி செய்யும் எல்லாரிலும் கீழான சேடிப் பெண்ணும் எனக்குத் தேவ கன்னிகைதான். இளைய பிராட்டியின் தோட்டத்தில் வாழும் முயற்குட்டி என் கண்களுக்குத் தேவேந்திரனுடைய ஐராவதத்துக்கும் மேலானதாகத் தோன்றும். இளவரசரும் இந்தப் பெண்ணிடம் குறை ஒன்றையும் காணவில்லை. ஆனால் அவருடைய மனது வேறொரு பெண்ணிடம் சென்றிருக்கலாம் அல்லவா?..."

'ஐயோ! எவ்வளவு கொடுமையான வார்த்தைகள்! இந்த வாலிபர் எதற்காக இவ்விதம் நம்முடைய புண்பட்ட உள்ளத்தில் வேலை எடுத்துக் குத்துகிறார்?"

'வாணர் குலத்து வீரரே! தாங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை. என் தம்பியைப் பற்றி ஏன் இப்பேர்ப்பட்ட அவதூறு கூறுகிறீர்?"

'அவதூறு ஒன்றுமில்லை, அம்மணி! உண்மையைத்தான் கூறுகிறேன் கண்ணால் கண்டு, காதினால் கேட்டதைச் சொல்கிறேன்."

'மேலே சொல்லுங்கள்! எவ்வளவு கஷ்டமான விஷயத்தைக் கேட்கவும் இப்பொழுது நான் சித்தமாயிருக்கிறேன்."

'ஓடக்காரப் பெண் பூங்குழலி என்பவளைப்பற்றிச் சொன்னேன் அல்லவா? இலங்கைக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தவளும் அவள்தான். இளவரசரையும் என்னையும் கடலிலிருந்து காப்பாற்றியவளும் அவள்தான். சூடாமணி விஹாரத்துக்கு இளவரசரைப் படகில் ஏற்றிக் கொண்டு போயிருப்பவளும் அவள்தான். சேந்தன் அமுதனை மட்டும் நம்பி இளவரசரை நான் ஒப்புவித்து வந்திருக்க மாட்டேன். பூங்குழலியை நம்பித்தான் ஒப்புவித்திருக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு ஆயிரம் உயிர் இருந்தால் அவ்வளவையும் இளவரசருக்கு அர்ப்பணம் செய்வாள்..."

'அதனால் என்ன? ஓடக்காரப் பெண் ஓடக்காரிதானே? உலகமாளப் பிறந்தவனை மணப்பது பற்றி அவள் கனவு காணமுடியுமா? தரையில் தத்திக் குதிக்கும் சிட்டுக் குருவி வானத்தில் உயரப்பறந்து, வட்டமிடும் கருடனைப் பார்க்க முடியுமா?"

'ஏன் முடியாது? சிட்டுக் குருவியும் கருடனை அண்ணாந்து பார்க்கலாம். கருடனும் சிட்டுக்குருவியைக் குனிந்து பார்த்து ஆசைப்படலாம்."

'என் தம்பியின் மனத்தில் அப்படி ஏதேனும் எண்ணம் உதித்திருந்தால், அதைப் போக்குவதற்கு நான் ஆயிற்று. கூடவே கூடாது! எத்தனையோ அபாயங்களிலிருந்து அருள்மொழிவர்மனை நான் தப்புவித்திருக்கிறேன். இந்த ஓடக்காரியின் மோக வலையிலிருந்தும் நான் தப்புவிப்பேன்..."

'ஓடக்காரியென்றால் அவ்வளவு தள்ளுபடியா? குலமும் கோத்திரமும் அவ்வளவு முக்கியமா? ஓடக்காரியின் உடம்பில் ஓடுவதும் சிவப்பு இரத்தந்தானே? அவளுடைய நெஞ்சும் அரண்மனையில் பிறந்த இளவரசிகளின் நெஞ்சைப்போல் துடிப்பதில்லையா? பார்க்கப் போனால் இளவரசிகளின் அன்பில் இராஜ்ய ஆசை முதலியவை கலந்திருக்கலாம். ஆனால், அந்த ஓடக்காரப்பெண்ணின் அன்பு மாசற்றது. புனிதமானது. இளவரசரும் அவ்வாறுதான் நம்புகிறார். மற்றவர்கள் ஏன் குறுக்கே வந்து தடை செய்யவேண்டும்? இப்போது வந்து, ஊஷுஹம் - என் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய நெஞ்சைப் பிளந்து அதனுள் இருப்பதைத் தங்களுக்கு நான் வெளியிட்டுக் காட்டமுடியுமானால்..."

'வேண்டாம், வேண்டாம். உம்முடைய நெஞ்சில் இருப்பது அப்படியே பத்திரமாயிருக்கட்டும். அதுதான் நல்லது. அன்பு, ஆசை, காதல் என்பவையெல்லாம் உலகில் பிறந்த மற்றவர்களுக்குச் சரிதான். ஆனால் இராஜ்யம் ஆளப்பிறந்தவர்களின் விஷயம் வேறு. அவர்கள் இராஜ குலத்திலேயே கலியாணம் செய்து கொள்ள வேண்டும். மனத்தைச் சிதறவிடக்கூடாது. தவறினால் அதன்மூலம் பல தொல்லைகள் ஏற்படும். எங்கள் குடும்பத்திலேயே அதற்குத் தகுந்த உதாரணம் இருக்கிறது. என் தந்தையின் இளம்பிராயத்தில் - இராஜ்யம் அவருக்கு வரும் என்ற உத்தேசமே இல்லாதபோது - இப்படித்தான் காட்டில் வளர்ந்த ஒரு பெண்ணை...! ஆனால் இதையெல்லாம் இப்போது உமக்கு நான் எதற்காகச் சொல்லவேண்டும்? இந்தப் பெண்ணுக்கும் மூர்ச்சை தெளிந்து சுயநினைவு வந்து கொண்டிருக்கிறது கண்ணிமைகள் அசைகின்றன. வேறு ஏதேனும் சொல்வதற்கு இல்லையா? ஈழநாட்டில் இன்னும் பல அபாயங்களுக்கு நீங்கள் உள்ளானதாகச் சொன்னீர் அல்லவா! அதைச் சொல்லுங்கள்".

'ஆம்! இளவரசி! இலங்கைச் சிம்மாசனத்தையும் மணி மகுடத்தையும் இளவரசர் மறுத்துவிட்டு வந்த அன்று நாங்கள் அநுராதபுரத்தின் வீதிகளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. ஒரு கணநேரம் நாங்கள் அங்கே தாமதித்திருந்தால் எங்கள் தலையில் விழுந்திருக்கும். உயிரோடு சமாதி ஆகியிருப்போம். அச்சமயத்தில் ஒரு பெண்மணி திடீரென்று அங்கே தோன்றினாள். சமிக்ஞை செய்து இளவரசரை அழைத்தாள்..."

'அவள் யாரோ எனக்குத் தெரியாது. ஆனால் இளவரசருக்கு முன்னால் பழக்கமுள்ளவளாகத் தோன்றியது... வீண் சந்தேகத்துக்கு ஆளாக வேண்டாம். அம்மணி! அந்த அம்மாள் பிராயம் முதிர்ந்தவள்..."

'எவ்வளவு பிராயம் இருக்கும்?"

'இளவரசரின் அன்னையாக இருக்கக் கூடியவள். அதோடு காது செவிடு, வாயும் ஊமை!"

'என்ன? என்ன இன்னொருதரம் சொல்லுங்கள்!"

'பிறவிச் செவிடும் ஊமையுமான ஒரு மூதாட்டி... அவள் பிராயம் நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கும்..."

'ஐயா! அப்படி ஒரு மூதாட்டியை ஈழநாட்டில் பார்த்தீரா? அவளைப் பற்றி மேலும் சொல்லுங்கள். அவளுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஒன்றும் தெரியாதா? அவள் எங்கே பிறந்தவள்".

'ஈழநாட்டை அடுத்துக் கடலில் ஒரு தீவில் பிறந்தவள்...."

இளவரசி குந்தவைதேவி அளவில்லாத பரபரப்பை அடைந்து 'ஐயா! இன்னும் சொல்லுங்கள்! பார்ப்பதற்கு அவள் எப்படியிருக்கிறாள்?" என்றாள்.

'அம்மணி! அவளுடைய தோற்றத்தில் ஓர் அதிசயத்தைக் கண்டேன். அதைச் சொல்வதற்கே எனக்குத் தயக்கமாயிருக்கிறது."

'தயக்கம் வேண்டாம்! சீக்கிரம் சொல்லுங்கள்."

'சோழ நாட்டில் நான் பார்த்த ஒரு பெண்ணைப் போலவே அவள் இருந்தாள். வயது மட்டுந்தான் அதிகம். ஆடை ஆபரணங்கள் பூணாமல் தலைவிரிகோலமாயிருந்தாள். மற்றபடி அதே முகம்! அதே தோற்றம். உண்மையில் நான் ஒரு நிமிஷம் ஏமாந்து போய்விட்டேன்."

'ஐயா, அப்படிப்பட்ட பெண் - இங்கே உள்ளவள் யார்?"

'இளவரசி! தங்களால் ஊகித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லையா?"

'நானா? இந்தப் பெண் வானதியா? தஞ்சை அரண்மனையில் உள்ள என்னுடைய அன்னையரா?"

'நீங்கள் குறிப்பிட்ட யாரும் இல்லை."

'பழுவூர் இளையராணி நந்தினியா?"

'ஆம், நந்தினிதான்!"

'கடவுளே! அப்படியானால், நான் சந்தேகித்தது உண்மை தான்." 'என்ன சந்தேகித்தீர்கள்?"

'விஷ நாகத்தைவிடக் கொடியவள் என்று எண்ணி நான் வெறுத்தவள் உண்மையில் என் தமக்கையாக இருக்கலாமோ என்று சந்தேகித்தேன். அது நிஜமென்று தாங்கள் சொல்வதிலிருந்து தெரிந்தது. விதியின் கொடுமையே கொடுமை. இதிலிருந்து குலம், கோத்திரம் தெரியாத ஒரு பெண்ணை அரச குலத்தைச் சேர்ந்தவர் மணப்பது எவ்வளவு பிசகு என்று தெரிகிறது."

'அம்மணி! நான் அவ்விதம் குலம் கோத்திரம் தெரியாதவன் அல்ல. எங்கள் மூதாதையர் முந்நூறு வருஷங்களாகச் செந்தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்களைச் சிறையில் அடைத்தார்கள். இன்றைக்கு எனக்கு இராஜ்யமில்லாத போதிலும் என் கையில் வாள் இருக்கிறது. என் தோளில் வலிமை இருக்கிறது. என் நெஞ்சில் தைரியமிருக்கிறது..."

'ஐயா! தங்கள் பெருமைகளைக் கொஞ்சம் பின்னால் கேட்டுக் கொள்கிறேன். உடனே செய்வதற்குப் பல காரியங்கள் இருக்கின்றன. உம்முடைய உதவி இன்னமும் எனக்குத் தேவை. அளிப்பீர் அல்லவா?"

'எனக்கு ஆயிரம் உயிர் இருந்தால் அவ்வளவையும் தங்களுக்குக் கொடுக்கச் சித்தமாயிருப்பேன்."

'ஓடக்காரப் பெண் பூங்குழலிக்கு நீர் உடன் பிறந்தவர் போலிருக்கிறது. நல்லது. அந்தப் பேச்சு இப்போது வேண்டாம். இதோ, இந்தப் பெண் கண்ணைத் திறக்கப்போகிறாள்..."

ஆம். இதற்குள் வானதிக்குப் பூரண நினைவு வந்துவிட்டது. உடம்பிலும் சக்தி பிறந்துவிட்டது. மனத்தில் பலப்பல யோசனைகள் உதித்தன. இளவரசரிடம் அந்த ஓடக்காரப் பெண்ணின் அன்பைவிடத் தன்னுடைய அன்பு அதிகமானது என்பதை நிரூபிக்கும் வரையில், தான் உயிரோடிருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். அத்துடன் தஞ்சை அரண்மனையில் சக்கரவர்த்தி படுத்திருந்த அறையில் அன்றொரு நாள் இரவு, தான் கண்ட காட்சியும், கேட்ட புலம்பலும் நினைவுக்கு வந்தன! அவற்றின் பொருளும் ஒருவாறு விளங்கத் தொடங்கிவிட்டது.

வானதி கண் விழித்ததும் இளையபிராட்டி, 'என் கண்ணே! உனக்கு இப்போது எப்படியிருக்கிறது?" என்று அன்போடு கேட்டாள்.

'எனக்கு ஒன்றுமில்லை. அக்கா! தங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேனே என்பதை நினைத்தால்தான் சங்கடமாயிருக்கிறது" என்றாள்.

அச்சமயத்தில் ஆழ்வார்க்கடியான் பிரவேசித்து, 'நானும் தொந்தரவு கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். தேவி! அரண்மனை வாசலில் ஒரே ஜனக்கூட்டமும் குழப்பமாயிருக்கிறது! இளவரசர் கடலில் முழுகிவிட்டது பற்றி ஜனங்கள் ஒரே ஆத்திரமாயிருக்கிறார்கள். தாங்கள் உடனே வந்து சமாதானம் சொல்லாவிட்டால் விபரீதம் நேரலாம்" என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக