துரோணர் மறுத்துவிட்ட பிறகு, கர்ணன் பரசுராமரை தேடி சென்றான். பரசுராமருக்கும், சத்திரியர்களுக்கும் ஆகாது என்பதை தெரிந்துக் கொண்ட கர்ணன், பரசுராமரிடம் தான் ஒரு பிராமணன் என்று அறிமுகம் செய்து கொண்டான். பரசுராமர், கர்ணனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க சம்மதித்தார். கர்ணன், குருவுக்கு செய்த சேவையும், அவர் மேல் கொண்டிருந்த பக்தியும், பயிற்சியின் மேல் அவன் கொண்டிருந்த ஆர்வமும் பரசுராமருக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது. தன்னிடம் சீடனாக சேர்ந்த கர்ணனுக்கு தகுந்த முறையில் பயிற்சியை வழங்கினார் பரசுராமர்.
பரசுராமரிடம் பிரம்மாஸ்திரப் பிரயோகம் முதல் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் கர்ணன். ஒரு சமயம் கர்ணன், பரசுராமரிடம் வில்வித்தை பயின்றுவந்த காலத்தில் கர்ணன் எய்திய அம்பு தவறுதலாக ஒரு பிராமணனின் பசுவின் மேல் பட்டது. அந்தப் பசுவை நம்பி வாழ்ந்து வந்த பிராமணன், கர்ணனிடம், ஒன்றும் அறியாத என்னுடைய பசு எவ்வாறு உன்னால் துன்பம் அடைந்ததோ, அப்படியே உனக்கும் தக்க நேரத்தில் உதவி கிட்டாமல் துன்பம் அடைவாய் என சபித்தார்.
ஒரு நாள் பரசுராமரின் ஆசிரமத்தில் பயிற்சி முடிந்து, ஒரு மரத்தடியில் பரசுராமர், கர்ணனின் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு ராட்சஸ வண்டு ஒன்று கர்ணனை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. கர்ணன் அவ்வண்டை எவ்வளவு துரத்தியும் திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. வண்டு கர்ணனின் தொடை மீது வந்து அமர்ந்து, கர்ணனின் தொடையை துளைத்தது. வண்டு துளைக்கத் துளைக்க ரத்தம் பெருக்கெடுத்தது.
ரத்தம் பெருக்கெடுத்து வந்தபோதிலும் கர்ணன், தனது குருவாகிய பரசுராமரின் உறக்கம் கலைந்து விடுமே என்று அஞ்சி அசையாமல் வலியை பொறுத்துக் கொண்டான். கர்ணனின் தொடையில் இருந்து வழிந்தோடிய ரத்தம் பரசுராமரின் முகத்தில் பட்டு, பரசுராமரின் தூக்கம் கலைந்து கண் விழித்தார். கர்ணனின் தொடையில் இருந்து வழிந்தோடுகின்ற ரத்தத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்.
கர்ணனின் தொடையை துளைத்துக் கொண்டிருந்த வண்டை பார்த்தார். பரசுராமர் தன்னுடைய ஞான திருஷ்டியால் அந்த வண்டாக வந்திருப்பவன் ஒரு அரசன் என்பதையும், சாப விமோசனத்துக்காகக் காத்திருப்பதையும் அறிந்து கொண்டார். பரசுராமர் அந்த வண்டை பார்த்தவுடனேயே வண்டுக்கு சாப விமோசனம் கிடைத்தது. அதன் பின் பரசுராமர் கர்ணனை பார்த்தார். கர்ணா! தொடையில் இந்த வண்டு இவ்வளவு பெரிய துளையை போட்டும் வலியைப் பொறுத்துக் கொண்டு இருக்க ஒரு சத்திரியனால்தான் முடியும். ஒரு அந்தணனால் வலியைப் பொறுத்துக் கொண்டு இருக்கவே முடியாது. யார் நீ? என்று கேட்டார்.
உடனே கர்ணன், தங்களிடம் கலைகளை கற்றுக் கொள்ளவே அந்தணன் என பொய் உரைத்தேன் என கூறினான். பரசுராமர், அந்தணன் அல்லாத வேறொருவனுக்கு கலைகளை கற்று கொடுத்து விட்டோமே என மிகவும் கோபங்கொண்டார். என்னிடம் ஓர் அந்தணன் என்று பொய் சொல்லி வித்தை கற்ற உனக்கு, கற்ற வித்தை உரிய காலத்தில் பலிக்காது என்றும், பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கையில் அது உனக்கு மறந்து போகும் எனவும், இவ்வுலகிலேயே உனக்கு நிகரான வீரர்கள் எவரும் கிடையாது. ஆனால் அதன் முழுப்பலனும் கர்ணா உனக்கு கிடைக்காது எனவும் சபித்தார்.
அதன் பிறகு கர்ணன் பரசுராமரிடம் இருந்து விடைப்பெற்று அஸ்தினாபுரத்திற்கு வந்தான். அஸ்தினாபுரத்தில் இளவரசர்கள் வெகு சீக்கிரத்திலேயே தருமன் ஈட்டி எறிவதிலும், அர்ஜூனன் வில் வித்தையிலும், பீமனும், துரியோதனனும், துச்சாதன்னும் கதை சுழற்றுவதிலும், நகுலன், சகாதேவன் இருவரும் வாள் வீச்சிலும் தேர்ந்தனர். இளவரசர்களின் பயிற்சிகளை சோதிக்க விரும்பிய துரோணர், அவர்களுக்கு போட்டியை அறிவித்தார்.
பீஷ்மரும், இளவரசர்கள் எவ்வாறு பயிற்சிகளை கற்றுள்ளனர் என்பதை அறிய விரும்பினார். இவர்களுக்கு அனைவர் மத்தியிலும் போட்டி நடைப்பெற முடிவு செய்தார். போட்டிக்கான களத்தில் அஸ்தினாபுரத்தில் உள்ள அனைவரும், மக்களும் இளவரசர்களின் திறமை காண அங்கு கூடினர்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக