ஒரு நாள் ராகுல், ரவி என்ற இரண்டு நண்பர்கள் வயல் வழியாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது ரவி அங்கிருந்த பண்ணையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு விவசாயியைப் பார்த்தான். அவர் உடைகளை ஒரு ஓரத்தில் சுத்தமாக அடுக்கி வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த ரவி ராகுலிடம், அவர் காலணிகளை ஒளித்து வைத்து வேடிக்கைப் பார்க்கலாம். வேலை முடிந்த பிறகு காலணியைத் தேடும் பொழுது, அவரின் உணர்வு வெளிப்பாடு விலை மதிப்பற்றதாக இருக்கும்! என ரவி கேலி செய்தான்.
ராகுல் ஒரு நிமிடம் சிந்தித்து, அந்த விவசாயி ஏழையாகத் தெரிகிறார். அவரின் உடைகளை சற்று பார். இப்படி வேண்டுமானால் செய்யலாமே! ஒவ்வொரு காலணியிலும் ஒரு வெள்ளிக் காசை ஒளித்து வைத்து, நாம் அருகில் இருக்கும் புதர்களில் ஒளிந்துக் கொள்ளலாம். அவர் வேலையை முடித்த பின், அந்த வெள்ளி காசுகளைப் பார்க்கும் பொழுது, அவரின் உணர்வு வெளிப்பாடு எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாமே! என கூறினான்.
அதைக் கேட்ட ரவி சரி என்று ஒப்புக் கொண்டான். அதன்படி அவர்கள் இருவரும் அவரின் காலணி அடியில் வெள்ளிக் காசுகளை வைத்தனர். மிகக் களைப்புடன் வேலையை முடித்து விட்டு வந்த விவசாயி காலணியை அணியும் போது, அடிக்காலின் கீழே வெள்ளிக் காசை கவனித்தார்.
விரல்களுக்கு நடுவில் அந்த வெள்ளிக் காசை வைத்துக் கொண்டு, யார் அதை வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் சுற்றிப் பார்த்தார். கண்ணுக்கு யாரும் தென்படவில்லை. அவநம்பிக்கையுடன் அந்தக் காசை உற்றுப் பார்த்தார்.
குழப்பத்தோடு, மற்றொரு காலை காலணிக்குள் நுழைத்த போது, இரண்டாவது வெள்ளிக் காசை பார்த்தார். இப்போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக, கடவுளுக்கு நன்றி கூறினார். இரண்டு நண்பர்களுக்கும், அவர் கடவுளுக்கு கூறிய நன்றி காதில் விழுந்தது. அந்த ஏழை விவசாயி எதிர்பாராத உதவியை எண்ணி மன நிறைவோடு ஆனந்தக் கண்ணீரை வெளிப்படுத்தினார்.
படுத்த படுக்கையாக இருந்த அவரின் மனைவி மற்றும் உணவிற்காக ஏங்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைத்ததைப் பற்றி கடவுளிடம் கூறி கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி கூறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு நண்பர்களும் புதரிலிருந்து வெளியே வந்து, வீட்டுக்கு நடக்கும் பொழுது, நெருக்கடி நிலைமையில் இருந்த விவசாயிக்கு உதவி செய்ததை நினைத்து சந்தோஷமாக சென்றனர்.
தத்துவம் :
ஒரு சிறிய உதவி, மற்றவர்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது கொடுப்பவருக்கும் சரி, வாங்கிக் கொள்பவருக்கும் சரி மனநிறைவை உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக