திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் தலம்.
மூலவர் : நாகநாதர்
அம்மன்ஃதாயார் : பிறையணி வானுதலாள்
தல விருட்சம் : செண்பகம்
மாவட்டம் : தஞ்சாவூர்
தலவரலாறு :
சிவன் மீது சிறந்த பக்தி கொண்ட கிரகமாகிய ராகு பகவான், ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் (நாகவல்லி, நாககன்னி) மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும், அருளையும் தருவது சிறப்பு.
சுசீல முனிவரால், ராகு பகவானுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்தில் உள்ள இறைவன் 'நாகநாதர்" எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.
சிவனின் அருள் நாகத்திற்கு கிடைத்த தலம் என்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தன் தேவியருடன் வந்தவர். சிவனின் தரிசனம் தினமும் பெற வேண்டி தன் மனைவியருடன் இங்கேயே தங்கி விட்டார்.
பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம்.
தல சிறப்பு :
இது சேக்கிழாரின் அபிமான ஸ்தலம் மற்றும் சேக்கிழாரால் திருப்பணி செய்யப்பட்ட ஸ்தலம் ஆகும். இராகு பகவான் சுசீல முனிவரால் ஏற்பட்ட சாப விமோட்சனம் பெறுவதற்காக மகாசிவராத்திரி அன்று நாகநாத சுவாமியை வழிபட்ட ஸ்தலம் ஆகும்.
இத்திருக்கோவிலில் இராகு பகவான் மங்கள ராகுவாக நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் சமேதராய்க் காட்சி அளிக்கிறார். இராகு பகவானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாக மாறுகிறது. இராகுவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் அகல இராகுவுக்குப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
இத்தலத்தில் இறைவி கிரிகுஜாம்பாள், லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் அருள் பாலிக்கிறார். அம்பாளுக்குப் புனுகு மட்டுமே சாத்தப்படும். நவக்கிரகத் தலத்தில் இது இராகுத் தலமாகும். இராகு தோஷ பரிகாரத்திற்காக மக்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
திருவிழா :
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகையில் பிரமோற்சவம், ராகு பெயர்ச்சி, ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு காலத்தில் ராகு பகவான் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக