Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 பிப்ரவரி, 2020

இரு பெண் புலிகள் (இரண்டாம் பாகம் : சுழற்காற்று)


ற்றனைப் பிடித்துக் கட்டி வீதியில் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியைத் தாதி ஓடிவந்து தெரிவித்ததும் அங்கிருந்த மூவரின் உள்ளங்களும் பரபரப்பை அடைந்தன. குந்தவையின் உள்ளம் அதிகமாகத் தத்தளித்தது.

'தேவி! நாம் போய் அந்தக் கெட்டிக்கார ஒற்றன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாமா?" என்றாள் நந்தினி.

குந்தவை தயக்கத்துடன், 'நமக்கென்ன அவனைப்பற்றி?" என்றாள்.

'அப்படியானால் சரி!" என்று நந்தினி அசட்டையாய் கூறினாள்.

'நான் போய் பார்த்து வருகிறேன்" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி எழுந்தான்.

'வேண்டாம். உம்மால் நடக்க முடியாது, விழுந்துவிடுவீர்!" என்றாள் நந்தினி.

குந்தவை மனதை மாற்றிக் கொண்டவள் போல், 'இவருடைய அருமையான சிநேகிதன் எப்படியிருக்கிறான் என்று நாமும் பார்த்துத்தான் வைக்கலாமே! இந்த அரண்மனை மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியுமல்லவா?" என்று கேட்டாள்.

'நன்றாய் தெரியும். என்னுடன் வாருங்கள்!" என்று நந்தினி எழுந்து நடந்தாள்.

கந்தன்மாறன், 'தேவி! அவன் என் சிநேகிதனாயிருந்தால், மாமாவிடம் சொல்லி, நான் அவனைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்!" என்று சொன்னான்.

'அவன் உமது சிநேகிதன்தானா என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றாள் நந்தினி.

'அப்படியானால், நானும் வந்தே தீருவேன்!" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி நடந்தான்.

மூவரும் அரண்மனை மேன்மாடத்தின் முன் முகப்புக்குச் சென்றார்கள். சற்றுத் தூரத்தில் ஏழெட்டுக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் நடந்து வந்தான். அவன் கைகளை முதுகுடன் சேர்த்துக் கயிற்றினால் கட்டியிருந்தது. அந்தக் கயிற்றின் இரு முனைகளை இரு பக்கத்திலும் வந்த குதிரை வீரர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

வீரர்களுக்குச் சற்றுத் தூரத்தில் வேடிக்கை பார்க்கும் கும்பல் வந்து கொண்டிருந்தது.

அரண்மனை மாடத்திலிருந்து பார்த்தவர்களுக்குக் குதிரைகளுக்கு நடுவில் நடந்து வந்த மனிதனின் முகம் முதலில் தெரியவில்லை.

ஊர்வலம் அருகில் வரும் வரையில் அந்த அரண்மனை மேன்மாடத்தில் மௌனம் குடி கொண்டிருந்தது.

குந்தவையின் ஆவலும், கவலையும், ததும்பிய கண்கள் நெருங்கி வந்த ஊர்வலத்தின்மீது லயித்திருந்தன.

நந்தினியோ வீதியில் எட்டிப்பார்ப்பதும் உடனே குந்தவையின் முகத்தைப் பார்ப்பதுமாயிருந்தாள்.

கந்தன்மாறன் அங்கே குடி கொண்டிருந்த மோனத்தைக் கலைத்தான்.

'இல்லை. இவன் வந்தியத்தேவன் இல்லை!" என்றான்.

குந்தவையின் முகம் மலர்ந்தது.

அச்சமயம் அந்த விநோதமான ஊர்வலம் அரண்மனை மாடத்தின் அடிப்பக்கம் வந்திருந்தது. கயிற்றினால் கட்டுண்டு குதிரை வீரர்களின் மத்தியில் நடந்து வந்தவன் அண்ணாந்து பார்த்தான். வைத்தியர் மகன் அவன் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.

குந்தவை தன் மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொள்ளாமல் 'இது என்ன பைத்தியக்காரத்தனம்? இவனை எதற்காகப் பிடித்து இழுத்து வருகிறார்கள்? இவன் பழையாறை வைத்தியர் மகன் அல்லவா?" என்றாள்.

அண்ணாந்து பார்த்தவன் ஏதோ சொல்ல எண்ணியவனைப் போல் வாயைத் திறந்தான். அதற்குள் அவனை இருபுறமும் பிணைத்திருந்த கயிறு முன்னால் தள்ளிக் கொண்டு போய்விட்டது.

'ஓ! அப்படியா? என் மைத்துனரின் ஆட்கள் எப்போதும் இப்படித்தான். உண்மைக் குற்றவாளியை விட்டுவிட்டு யாரையாவது பிடித்துக்கொண்டு வந்து தொந்தரவு செய்வார்கள்! என்றாள் நந்தினி.

இதற்குள் கந்தன்மாறன், 'வந்தியத்தேவன் இவர்களிடம் அவ்வளவு இலகுவில் அகப்பட்டுக் கொள்வானா? என் சிநேகிதன் பெரிய இந்திரஜித்தனாயிற்றே? என்னையே ஏமாற்றியவன் இந்த ஆட்களிடமா சிக்கிக் கொள்வான்?" என்றான்.

'இன்னமும் அவனை உம்முடைய சிநேகிதன் என்று சொல்லிக் கொள்கிறீரே!" என்றாள் நந்தினி.

'துரோகியாய் போய்விட்டான். ஆனாலும் என் மனத்தில் அவன் பேரில் உள்ள பிரியம் மாறவில்லை!" என்றான் கந்தமாறன்.

'ஒருவேளை உம்முடைய அழகான சிநேகிதனை இவர்கள் கொன்று போட்டிருக்கலாம். இரண்டு ஒற்றர்களைத் தொடர்ந்து கோடிக்கரைக்கு இந்த வீரர்கள் போனதாகக் கேள்விப்பட்டேன்" என்று நந்தினி சொல்லிவிட்டு, குந்தவையின் முகத்தைப் பார்த்தாள்.

'கொன்றிருக்கலாம்" என்ற வார்த்தை குந்தவையைத் துடிதுடிக்கச் செய்தது என்பதை அறிந்து கொண்டாள். அடி கர்வக்காரி! உன் பேரில் பழி வாங்க நல்ல ஆயுதம் கிடைத்தது! அதைப் பூர்வமாக உபயோகப்படுத்தாமற் போனால் நான் பழுவூர் இளைய ராணி அல்ல! பொறு! பொறு!

குந்தவை தன் உள்ளக் கலக்கத்தை கோபமாக மாற்றிக் கொண்டு, 'ஒற்றர்களாவது ஒற்றர்கள்! வெறும் அசட்டுத்தனம்! வர வர இந்தக் கிழவர்களுக்கு அறிவு மழுங்கிப் போய் விட்டது! யாரைக் கண்டாலும் சந்தேகம்! இந்த வைத்தியர் மகனை நான் அல்லவா கோடிக்கரைக்கு மூலிகை கொண்டு வருவதற்காக அனுப்பியிருந்தேன்? இவனை எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள்? இப்போதே போய் உங்கள் மைத்துனரைக் கேட்கப் போகிறேன்!" என்றாள்.

'ஓகோ! தாங்கள் அனுப்பிய ஆளா இவன்? தேவி! சந்தேகம் என்று சொன்னீர்களே? எனக்குக்கூட இப்போது ஒரு சந்தேகம் தோன்றியிருக்கிறது. மூலிகை கொண்டு வருவதற்கு இவனை மட்டும் அனுப்பினீர்களா? இன்னொரு ஆளையும் சேர்த்து அனுப்பினீர்களா?" என்று நந்தினி கேட்டாள்.


குந்தவை, 'வைத்தியர் மகனுடன் இன்னொருவனையுந்தான் அனுப்பினேன். இரண்டு பேரில் ஒருவனை இலங்கைத்தீவுக்குப் போகும்படி சொன்னேன்."

'ஆகா! இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது! நான் சந்தேகித்தபடிதான் நடந்திருக்கிறது!"

'எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சந்தேகித்தீர்கள்? என்ன நடந்திருக்கிறது?"

'இனிச் சந்தேகமே இல்லை. உறுதிதான், தேவி! தாங்கள் இவனோடு சேர்த்து அனுப்பிய ஆள் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவனா? புதிய மனிதனா?"

குந்தவை சற்றுத் தயங்கி, 'புது மனிதனாவது? பழைய மனிதனாவது? காஞ்சிபுரத்திலிருந்து ஓலை கொண்டு வந்தவன். என் தமையனிடமிருந்து வந்தவன்" என்றாள்.

அவனேதான்! அவனேதான்!

எவனேதான்?

அவன்தான் ஒற்றன்! சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்ததாகத்தான் இங்கேயும் அவன் சொன்னானாம்.

;என்ன காரணத்தினால் அவனை ஒற்றன் என்று இவர்கள் சந்தேகித்தார்களாம்?

எனக்கென்ன தெரியும், அதைப்பற்றி? அதெல்லாம் புருஷர்கள் விஷயம்! பார்க்கப்போனால், அந்த ஒற்றனும் சந்தேகப்படும்படியாகத்தான் நடந்திருக்கிறான். இல்லாவிட்டால் இரகசியமாக இரவுக்கிரவே ஏன் தப்பி ஓட வேண்டும்? இந்தச் சாது மனிதருடைய முதுகிலே எதற்காகக் குத்திவிட்டுப் போக வேண்டும்?

இவருடைய முதுகில் அவன்தான் குத்தினான் என்பதையும் நான் நம்பவில்லை. குத்தியிருந்தால் இவரை மறுபடி தூக்கிக் கொண்டுபோய் அந்த ஊமையின் வீட்டில் ஏன் சேர்த்து விட்டுப் போகிறான்?

கூட இருந்து பார்த்ததுபோல் சொல்கிறீர்களே, தேவி! என்னமோ அந்த ஒற்றன் பேரில் உங்களுக்கு அவ்வளவு பரிவு தோன்றியிருக்கிறது. அவனிடம் ஏதோ மாய சக்தி இருக்க வேண்டும். இவர்கூட அவனை இன்னும் தம் சிநேகிதன் என்று சொல்லிக்கொள்கிறார் அல்லவா? எப்படியானால் என்ன? போன உயிர் திரும்பிவரப் போவதில்லை. அவனை இந்த வீரர்கள் கொன்றிருந்தால்.

குந்தவையின் முகத்தில் வியர்வை துளித்தது. கண்கள் சிவந்தன. தொண்டை அடைத்தது, நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. 'அப்படி நடந்திராது! ஒருநாளும் நடந்திராது" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

'இவர் சொல்லுகிறபடி அந்த ஒற்றன் அவ்வளவு கெட்டிக்காரனாயிருந்தால்..." என்றாள்.

'ஆம், இளவரசி! வந்தியத்தேவன் இந்த ஆட்களிடம் ஒரு நாளும் அகப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான்!" என்றான் கந்தமாறன்.

'இப்போது அகப்பட்டிராவிட்டால் இன்னொரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான்!" என்றாள் நந்தினி.

குந்தவை பற்களைக் கடித்துக் கொண்டு, 'நாளை நடக்கப் போவது யாருக்குத் தெரியும்?" என்றாள்.

பின்னர் ஆத்திரத்துடன், 'சக்கரவர்த்தி நோயாகப்படுத்தாலும் படுத்தார். இராஜ்யமே தலைகீழாகப் போய் விட்டது! மூலிகை கொண்டு வருவதற்கென்று நான் அனுப்பிய ஆட்களைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம்? இதோ என் தந்தையிடம் போய்க் கேட்டு விடுகிறேன்" என்றாள்.

'தேவி! நோயினால் மெலிந்திருக்கும் சக்கரவர்த்தியை இது விஷயமாக ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? என் மைத்துனரையே கேட்டுவிடலாமே? தங்கள் விருப்பம் ஒரு வேளை அவருக்குத் தெரியாமலிருக்கலாம். தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்கிறார். இந்தச் சோழ ராஜ்யத்தில் இளைய பிராட்டியின் விருப்பத்துக்கு மாறாக நடக்க யார் துணிவார்கள்?" என்றாள் நந்தினி.

அந்த இரண்டு பெண் புலிகளுக்கும் அன்று நடந்த போராட்டத்தில் நந்தினியே வெற்றி பெற்றாள். குந்தவையின் நெஞ்சில் பல காயங்கள் ஏற்பட்டன. அவற்றை வெளிக்காட்டாமலிருக்க இளவரசி பெரு முயற்சி செய்ய வேண்டியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக