ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும் இராணுவம் வரப்போகிறது என்றும் உலவும் செய்திகள் பொய் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இது ஏற்கனவே முடங்கிப்போயிருந்த மக்களிடையே மேலும் மனச்சோர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் இந்த அவசரநிலை பிறப்பிக்கப்படலாம் என்றும் அதன் பின்னர் தெருக்களில் ராணுவத்தினர் நடமாட்டம் இருக்கும் என்றும் கூடுதல் தகவல்கள் வெளியாகி வந்தன.
அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏதும் அறிவிப்புகள் இல்லாத நிலையில், இது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணமு மக்களிடம் ஏற்படத்தொடங்கியது. ஆனால் இது முற்று முழுதாகப் பொய் என்று இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ கீச்சகப் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத் தகவல் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், “கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலால் ஏப்ரல் மாத மத்தியில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாகவும், கொரோனா நோய்த்தொற்று சூழலில் அரசுக்கு உதவிட ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றோா், தேசிய மாணவா் படையினா், நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டோா் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொய்யான, தீங்கிழைக்கக்கூடிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா வகையிலும் மக்கள் நலனுக்காகத்தான். இதற்கிடையில் எந்த விதத்திலும் மக்களை அச்சமூட்டும் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்பதே இந்த சமயத்தில் எல்லோருடைய கோரிக்கையுமாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக