நோய் கிருமிகளைக் கொள்ளும் என்று சானிடைசர்களில் மோசடி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமாக
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நோய் கிருமிகளை கொல்லும் வகையிலான
சானிடைசர்கள் கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலைப்
பயன்படுத்தி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போலி சானிடைசர்கள் விற்கப்பட்டு பெரும்
மோசடி நடந்துள்ளது.
இதுபற்றி தகவலறிந்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(FDA) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கண்டிவிலியை சேர்ந்த விநியோகஸ்தர் ரித்தி சித்தி என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போலி சானிடைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசாரிக்கையில் பிவந்தி நிறுவனத்தில் இருந்து சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே லைசன்ஸை திரும்பி அளித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.டி.ஏ துணை ஆணையர் டி.ஆர்.கஹானே கூறுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக சானிடைசர்களை தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. அவற்றை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்தகங்களுக்கு விற்று வந்துள்ளனர்.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியுள்ளனர். அதற்கு உரிய அபராதம் விதிக்கப்படும். தற்போது வரை போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை என்றார்.
மேலும் கூறுகையில் Biotel Cosmetics and Wiz என்ற பெயரில் சானிடைசர்களை விற்று வந்துள்ளனர். அவை முற்றிலும் போலியானவை. அப்படியொரு நிறுவனமே இல்லை என்று கூறினார்.
இதேபோல் வகோலா நிறுவனம், சன்ஸ்கர் ஆயுர்வேதம் ஆகியவற்றின் பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த போலி சானிடைசர்களையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் Safe Hands என்ற பெயரில் போலியான ஆன்டி-பாக்டீரிய சானிடைசர்களை தயாரித்து வந்ததும் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக