Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

பாசுபதாஸ்திரத்தை பெறும் அர்ஜூனன்...!


 ர்ஜூனன், சகோதரர்களிடம் இருந்து விடைப்பெற்று இமயமலை நோக்கிச் சென்றான். அங்கு சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொண்டான். ஆனால் சிவபெருமான் அர்ஜூனனுக்கு காட்சி அளிக்கவில்லை. இதனால் அர்ஜூனன் மிகவும் வருத்தம் கொண்டான். அங்கிருந்த முனிவர்கள் அர்ஜூனனிடம், நீ சிவபெருமானை காண வேண்டும் என்றால் பல விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் எனக் கூறி தவ விதிமுறைகளை எடுத்து கூறினர். அதன் பிறகு அர்ஜூனன் எதற்கும் தயங்காமல் தவத்தை மேற்கொண்டான். வெயில், குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் சிரத்தையுடன் தவத்தை மேற்கொண்டான். இந்திரன், தன் மகனின் தவத்தை சோதிக்க நினைத்தார். அதனால் தேவலோகத்து அரசிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை மற்றும் மன்மத அம்பையும் அனுப்பி அர்ஜூனனின் தவத்தை கலைக்க அனுப்பினார். ஆனால் அர்ஜூனன் எதற்கும் அசையாமல் தன் தவத்தில் மட்டுமே சிரத்தையாக இருந்தான்.

 இதனை கண்ட இந்திரன், அர்ஜூனனின் தவத்தை நினைத்து மெச்சினான். அதன் பிறகு இந்திரன், அர்ஜூனன் முன் தோன்றினார். அர்ஜூனா! நான் உனது வீரத்தையும், திறமையும் அறிவேன். உன் தவத்தை கண்டு நான் பெருமை அடைகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்பதை கேள்? என்றார். அர்ஜூனன், நானும், எனது சகோதரர்களும் சகலத்தையும் இழந்து நிற்கதியாய் இருக்கிறோம். நாங்கள் எதிரிகளை வெல்ல வேண்டும். எனக்கு மிகச்சிறந்த அஸ்திரங்களையும், வெல்ல முடியாத ஆயுதங்களையும் தாங்கள் தந்து அருள் புரிய வேண்டும் என்றான். இந்திரன், அர்ஜூனா! எனது ஆசிகள் உனக்கு எப்பொழுதும் இருக்கும். நீ முக்கண்ணனான சிவபெருமானின் ஆசியை பெற்று அவரிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற வேண்டும். அந்த அஸ்திரத்தை பெற்று விட்டால் உன்னை வெல்ல எவராலும் முடியாது எனக் கூறி மறைந்தார்.

 அதன் பின் அர்ஜுனன் தன் தவத்தை தொடர்ந்தான். பல மாதங்கள் கழிந்தன. மழை, காற்று, குளிர், வெயில் என வந்த அத்தனை இடையூறுகளையும் அர்ஜூனன் கடந்தான். அர்ஜூனனின் தவம் தேவர்கள் மூலம் சிவனுக்கு தெரியவந்தது. பார்வதி தேவி சிவனிடம், தாங்கள் அர்ஜுனனுக்கு காட்சி அளிக்க வேண்டும் எனக் கூறினாள். சிவபெருமான், தேவி! அர்ஜூனனின் தவத்தை அறிந்த துரியோதனன், தவத்தை கலைப்பதற்காக முகாசூரன் என்னும் அசுரனை அனுப்புவான். அந்த அசுரனை என்னால் மட்டுமே கொல்ல முடியும். நான் வேடனாக சென்று அர்ஜூனனை காப்பாற்றுவேன் என்றார். துரியோதனன், பாண்டவர்கள் தங்கள் வலிமையை பலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அதற்காக அர்ஜூனன் தவத்தை மேற்கொள்ள இமயமலை சென்றுள்ள செய்தியையும் அறிந்தான்.

 இதை அறிந்து கோபம் கொண்ட துரியோதனன், முகாசூரன் என்னும் அசுரனை அனுப்பி அர்ஜூனனின் தவத்தை கலைக்குமாறு கூறினான். அவ்வாறே முகாசூரன், காட்டுப்பன்றி உருவம் எடுத்து அர்ஜூனன் இருக்கும் இடத்திற்கு சென்றான். அர்ஜூனன் ஒரு வனத்தில் சிவனை காண கடும் தவம் புரிந்தான். அவ்வனத்தில் வேடர்கள் கூட்டம் ஒன்று இருந்தது. வேடர்கள், காட்டுப்பன்றியை கண்டு அலறிக் கொண்டு ஓடினர். வேடர்களின் சத்தத்தினால் அர்ஜூனனின் தவம் கலைந்தது. பயத்தில் ஒடிய ஒரு வேடனை பார்த்து, எதற்காக இப்படி ஓடுகிறீர்கள் எனக் கேட்டான். அவ்வேடன், வனத்தில் காட்டுப்பன்றி வந்துள்ளதால் அதைக் கண்டு ஓடிகிறேன் எனக் கூறினான்.

 அர்ஜூனன், வேடர்களை காப்பாற்ற நினைத்தான். அப்பொழுது சிவபெருமான் வேடவன் உருவத்தில் வந்தார். அர்ஜூனன் காட்டுப்பன்றியை நோக்கி அம்பை எய்தான். சிவபெருமானும் காட்டுப்பன்றியை நோக்கி அம்பை எய்தார். ஆனால் சிவபெருமான் எய்த அம்பு காட்டுப்பன்றியை தாக்கியது. முகாசூரன் அந்த இடத்திலேயே மாண்டான்.

 இதைப் பார்த்து அர்ஜூனன் மிகவும் கோபம் கொண்டான். வேடனே! நான் அம்பு செலுத்தும்போது நீ எதற்காக அம்பு செலுத்தினாய் எனக் கேட்டான். வேடன் வடிவில் இருந்த சிவபெருமான், காட்டுப் பன்றி எங்களை துரத்தி வந்தது. எங்களை காக்கும் பொருட்டே நான் அம்பை செலுத்தினேன் என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விற்போரில் சிறந்தவர் யார் என்பதை அறிய போட்டியிட்டனர். அர்ஜுனன் சிவபெருமானை நோக்கி அம்பை எய்தினான். சிவபெருமான், அந்த அம்பை பொடியாக்கினார். அர்ஜூனன் விடாமல் அம்புகளை தொடுத்தான். சிவப்பெருமான் அந்த அம்புகளை பொடியாக்கினார். காண்டீபம் என்னும் வில்லை எடுத்து, காண்டீபம் இருக்கும்வரை யாரும் வெல்ல முடியாது எனக் கூறி அதை தொடுத்தான். சிவபெருமான் அந்த அம்பையும் பொடியாக்கினார்.

 இதைப் பார்த்த அர்ஜூனன் அதிர்ச்சி அடைந்தான். காண்டீபத்தை முறியடித்த இந்த வேடன் இத்தகைய ஆற்றல் கொண்டவனா? என ஆச்சர்யம் அடைந்தான். அதன்பிறகு சிவபெருமான், அர்ஜூனனை நோக்கி ஒரு அம்பை ஏவினார். அந்த அம்பினால் அர்ஜூனன் மயக்கம் அடைந்தான். மயக்கம் தெளிந்த அர்ஜூனன், ஒரு வேடனிடம் நான் தோற்றுவிட்டேனே என வருந்தினான். நான் துரோணரின் சீடன், வில்வித்தையில் கைதேர்ந்தவன். என்னை வில்லைவித்தையில் தோற்கடிக்கக் கூடியவர் பிதாமகர் பீ;மர், துரோணர், வாசுதேவன் மற்றும் சிவன். பிதாமகர், துரோணர், வாசுதேவன் இங்கு வந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியென்றால் என் கண்முன் நிற்பவர் மூவுலகையும் ஆட்கொண்ட சிவபெருமான் என்பதை அறிந்தான்.

 இதை உறுதிபடுத்திக் கொள்ள மண்ணாலான சிவலிங்கம் ஒன்றை செய்தான். அந்த சிவலிங்கத்திற்கு மலர்மாலையிட்டு பூஜை செய்தான். இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது, சிவலிங்கத்திற்கு அணிந்த மாலை, வேடன் கழுத்தில் இருப்பதை கண்டு அதிசயித்தான். அதன் பிறகு அர்ஜூனனுக்கு புரிந்தது, வேடன் உருவத்தில் வந்திருப்பவர் சிவபெருமான் என்பதை தெரிந்துக் கொண்டான். சிவபெருமானை பணிந்து தொழுதான்.

பெருமானே! தங்களை கண்டு எனது பிறவி பயனை நான் அடைந்துவிட்டேன். நான் தங்களிடம் போரிட்டத்தை என்னால் நம்ப முடியவில்லை எனக் கூறி தொழுதான். சிவபெருமான், அர்ஜுனா! உன் தவத்தின் சிறப்பை கண்டு உன்னை காண வந்தேன் எனக் கூறி தன் விஸ்வரூப காட்சியை காண்பித்தார். நீ அடைய நினைத்த பாசுபதாஸ்திரத்தை உனக்கு அருள்கிறேன் எனக் கூறி வழங்கினார். அதன் பின் சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார். இதனைக் கண்ட தேவர்கள் அர்ஜூனனுக்கு பல்வேறு அஸ்திரங்களை கொடுத்து ஆசி வழங்கினர். தனது மகனின் தவப்பயனை எண்ணி மகிழ்ச்சி அடைந்த இந்திரன், அர்ஜூனன் முன் தோன்றி, மகனே! உன்னை பெற்றதில் நான் பெருமிதம் அடைகிறேன். நீ என்னுடன் தேவலோகத்திற்கு வா என அழைத்தார். அதன் பின் இந்திரனின் தேரோட்டி மாதலி, அர்ஜூனனை தன் தேரில் தேவலோகத்திற்கு அழைத்து வந்தான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக