Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 மார்ச், 2020

இரும்பு மழை பொழியும் விசித்திரமான கோள் கண்டுபிடிப்பு! இந்த கோள் எங்கிருக்கிறது தெரியுமா?


மனிதர்கள் வாழ்வதற்கு கிரகம் தேடும் விஞ்ஞானிகள்
பூமியிலிருந்து சுமார் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 'மீனம் நட்சத்திர குழுவில்' (Constellation of Pisces) ஒரு கோளில் இரும்பு மழை பொழிகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏன் இந்த கோளில் மட்டும் இரவு நேரங்களில் இரும்பு மழை பொழிகிறது என்றும், இதற்கான காரணம் என்ன என்றும் விளக்கியுள்ளனர். விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த கோளின் இன்னும் சில விசித்திரமான உண்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
மனிதர்கள் வாழ்வதற்கு கிரகம் தேடும் விஞ்ஞானிகள்
மனிதர்கள் பூமி மட்டுமல்லாமல் பிற கிரகங்களிலும் வாழ முடியுமா என்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே தான் இருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான தட்பவெப்பம், வாயுக்கள் மற்றும் இதர சுற்றுச்சூழல் கொண்ட பிற கிரகங்களுக்கான தேடல் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போது வரை செவ்வாய் மற்றும் நமது சந்திரனில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டபிள்யூ.ஏ.எஸ்.பி.-76பி கோள்
மனித வாழ்விற்கான புதிய கோள்களைத் தேடும் பணியில் விஞ்ஞானிகள் பல விசித்திரமான கிரகங்களையும், கோள்களையும் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒரு விசித்திரமான கிரகம் தான் டபிள்யூ.ஏ.எஸ்.பி.-76பி (WASP-76b). பூமியிலிருந்து சுமார் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘மீனம் நட்சத்திர குழுவில்' (Constellation of Pisces) இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அதிகளவு வெப்பநிலையா?
டபிள்யூ.ஏ.எஸ்.பி.-76பி (WASP-76b) என்று இந்த கோள் வாயுக்களால் நிறைந்த ஒரு மிகப்பெரிய கோள். இந்த புறக்கோள் அதன் நட்சத்திரத்தை வெறும் 1.8 நாட்களில் சுற்றி வருகிறது. இந்த கோளின் வெப்பமானது பகல் நேரத்தில் சுமார் 2400 செல்சியஸ் ஆகவும் இரவு நேரங்களில் சுமார் 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனை விட பெரிய நட்சத்திரம்
இந்த அதிகமான வெப்பநிலைக்கு காரணம் சூரியன் போன்று அதை விட பெரிதாக இருக்கும் இதன் நட்சத்திரம் தான். சூடான வெப்பத்தைக் கக்கும் தன்னுடைய நட்சத்திரத்திலிருந்து வெறும் 5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த புறக்கோள் சுற்றி வருகிறது. சூரியனைவிட 1.5 அதிகமான நிறை மற்றும் 1.8 மடங்கு அளவில் பெரியதாக இருக்கும் இந்த புறக்கோளின் நட்சத்திரத்தின் வெப்ப அளவு சுமார் 6,329 கெல்வின் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 5,778 கெல்வின் அளவு வெப்பநிலை
நமது சூரியன் சுமார் 5,778 கெல்வின் அளவு மட்டுமே வெப்பநிலை கொண்டது, அதைவிட அதிக வெப்பநிலை கொண்ட இந்த நட்சத்திரத்தின் வெப்பத்தினால் இந்த கோளில் உள்ள இரும்புகள் ஆவியாக மாறும் அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் இரும்பு மழை
இரவு நேரங்களில் இதன் வெப்பநிலை கணிசமான அளவுக்குக் குறையும் காரணத்தினால் ஆவியாக மாறிய இரும்பை குளிர வைத்து திரவமாக மாற்றி, இரும்பு மழையாக இந்த கோளில் விழச்செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாழன் வகையை சேர்ந்தது
கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலாகக் கண்டு பிடிக்கப்பட்ட இந்த புறக்கோள், சூடான வியாழன் (hot Jupiter) எனும் கோள் வகையைச் சார்ந்த ஒரு புறக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, வியாழன் கிரகத்தைவிடச் சற்றே குறைவான நிறை கொண்ட இந்த புறக்கோளின் அளவு, வியாழன் கிரகத்தைவிட சுமார் 1.8 மடங்கு அதிகம் என்கிறார் வானியற்பியலாளர் மரியா ரோசா சபாட்டீரோ.
ஆர்வத்துடன் ஆராய்ச்சியைத் தொடரும் ஆராய்ச்சியாளர்கள்
மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகம் எது என்று தேடும் பணியில் வானியற்பியலாளர்கள் இதுவரை சிவப்புக்கல் மற்றும் நீலக்கற்களால் ஆன மேகங்கள் கொண்ட புறக்கோள்களையும், இரும்பு மழை பொழியும் இந்த (WASP-76b) புறக்கோள்களையும் கண்டுபிடித்துள்ளனர். இனி வரும் காலங்களில் எந்தவிதமான புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்படும் என்று சுவாரசியமான ஆர்வத்துடன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக