Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

நேர்மைக்கு கிடைத்த பரிசு!


வெகு காலத்திற்கு முன் பழமுதிர் சோலை என்ற நாட்டை மன்னன் பழவர்த்தன் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர். அவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தைகள் இல்லை. தனக்கு பின் தன் நாட்டை ஆள வாரிசுகள் இல்லாததால், தன் நாட்டு மக்களில் நீதியும், நேர்மையும் தவறாத உண்மையான ஒரு இளைஞனைக் கண்டுபிடித்து, அவனை மன்னனாக்க வேண்டும் என்று விரும்பினார். நாட்டில் உள்ள வீரமிக்க இளைஞர்களை அழைத்து வில் போட்டி நடத்தினார். அதில் வென்றவர்களை அழைத்து, வாள் போட்டி நடத்தி கடைசியாக, பத்து இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அவர்களை மன்னர் அழைத்து, அவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக ஒரு செடியின் விதையைக் கொடுத்தார்.

இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து, கவனமுடன் கண்காணித்து, ஆறு மாதம் சென்ற பிறகு, வளர்த்த செடியுடன் என் முன் வரவேண்டும். இதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய இறுதி கட்டச் சோதனை, என்றார். பத்துப் பேரும் அதனை வாங்கிக் கொண்டனர். அதில், சாந்தனு என்ற வாலிபன் ஒருவனும் இருந்தான். எல்லோரும் மன்னர் சொன்னபடி அந்த விதையைத் தொட்டியில் போட்டு வளர்க்க ஆரம்பித்தனர். அனைவரின் விதையும் முளைத்து செடியாக வளர்ந்திருந்தது. ஆனால் சாந்தனுவிற்கு கொடுத்த விதை மட்டும் செடியாக வளரவில்லை எல்லா விதமான முயற்சிகளையும் செய்தான். ஆனால், அந்த விதை முளைக்கவில்லை.

முளைக்காத விதையை ஒரு வேளை மன்னர் தனக்கு தந்திருப்பாரோ? என்று எண்ணினான். அப்படி இருக்காது எல்லோருக்கும் கொடுத்தது போல தான் எனக்கும் கொடுத்தார். என் விதை முளைக்கவில்லை என்றால், அது என் துரதிருஷ்டம். மற்றவர்கள் விதை எல்லாமே முளைத்திருப்பது அவர்களுடைய அதிர்ஷ்டம் என்று நினைத்தான். ஆறு மாதம்வரை பொறுத்திருந்து பார்ப்போம். அப்போதும் விதை முளைக்காவிட்டால், அரசே, என் விதை மட்டும் முளைக்கவில்லை! என்று உண்மையைக் கூறி விடுவோம். அதற்காக மன்னர், நான் சரியாக செடியைப் பராமரிக்கவில்லை என்று கருதி எனக்குத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்! என்று கருதினான் சாந்தனு.

ஆறு மாதம் கழித்து வெற்றிப் பெருமிதத்துடன் ஒன்பது பேரும் தங்கள் கையில் தொட்டியை ஏந்தி வந்தனர். அதில் இரண்டடி நீளத்துக்குச் செடி வளர்ந்திருந்தது. மன்னர் எல்லோருடைய தொட்டிகளையும் பார்த்துக் கொண்டே வந்தார். சாந்தனுவிடம் வந்ததும் அவன் காலித்தொட்டியுடன் நிற்பதைக் கண்டவுடன் மன்னர் முகம் மாறியது. அரசன் அவனையே எதிர்கால மன்னனாக அறிவித்தார். அதற்காகவே இந்த போட்டியை வைத்ததாகவும் கூறினார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும் அரசே, செடியை வளர்க்காத இவன் மன்னனா? என்று கேட்டனர்.

அதற்கு அரசர் நான் பத்து இளைஞர்களுக்கும் செடி வளர்க்கக் கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேக வைக்கப்பட்டு உலர்த்தப்பட்ட விதைகள். அதில் எந்தச் செடியும் முளைக்காது. என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோ பெறுவதற்காக மற்ற இளைஞர்கள் வேக வைக்கப்பட்ட விதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே போன்ற நல்ல விதைகளை வாங்கிப் பயிரிட்டுச் செடிகளாக்கிக் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் சாந்தனு அப்படி செய்யாமல் உண்மையாக நடந்துக் கொண்டான். ஆகவே அவனால் நிச்சயம் நாடு செழிக்கும் என்றுதான் அவனை மன்னனாக அறிவித்தேன் என்று கூறினார். மன்னரின் அறிவுக் கூர்மையை எண்ணி அனைவரும் வியந்து பாராட்டினர். மற்ற இளைஞர்கள் அரசனிடம் மன்னிப்புக் கேட்டனர். அரசனும் அவர்களை மன்னித்தார்.

தத்துவம் :

ஒரு செயலை செய்யும்போது அதில் நேர்மையும், உண்மையும் மிக அவசியம். இதுவே உங்களை அடுத்தக்கட்ட பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக