ஒரு காட்டில் புறாக்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்த புறாக்கள் கூட்டத்தில் ஒரு வயதான புறாவும் இருந்தது. மற்ற புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும் போது அங்கிருக்கும் வயதான புறா தன் அனுபவங்களை மற்ற புறாக்களுக்கு அறிவுரையாக கூறும். ஆனால் வயதான புறா கூறும் அறிவுரையை மற்ற புறாக்கள் கேட்காமல், எங்களுக்கும் அறிவு இருக்கிறது என்று கூறி உதாசினப்படுத்தினார்கள்.
ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடிச் சென்றன. அப்போது ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான். அங்கு வரும் பறவைகளை பிடிப்பதற்காக வலையின் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான். புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன. ஆனால் வயதான புறா அது வேடன் விரித்த வலை, நாம் அங்கு சென்று நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம். எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்று கூறியது.
மற்ற புறாக்கள் நாங்கள் வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன. வயதான புறாவைப் பார்த்து மற்ற புறாக்கள் கேலி செய்தன. அந்த சமயம் திடீரென்று ஒரு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழுந்தது. உடனே அனைத்து புறாவும் சரிந்து கீழே விழத் தொடங்கின. கீழே விழும் போது நிலை குலைந்து புறாக்களின் கால்கள் வலையில் பின்னிக் கொண்டன.
உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன. அதற்கு வயதான புறா என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது. ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது.
வயதான புறாவும் மற்ற புறாக்களுக்கு யோசனைக் கூறியது, இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான். அவன் வரும்போது நீங்கள் அனைவரும் மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.
அவனும் இறந்து போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான். கடைசி புறாவை போடும் வரை அமைதியாக இருக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்கள் என்றது. அனைத்து புறாக்களும் வயதான புறா சொன்னது போல் இறந்தது போல் நடித்தன. அங்கு வந்த வேடனும் அனைத்தும் இறந்து கிடப்பதைக் கண்டு, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான்.
இறுதியாக வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது. வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டான். அனைத்து புறாக்களும் தப்பி பறந்தோடின. பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின. இனிமேல் உங்கள் அறிவுரைப்படியே நடப்போம் என்று உறுதி அளித்தன.
தத்துவம் :
பெரியவர்களின் சொல் கேட்டு நடந்தால் இன்பமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக