Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 மார்ச், 2020

கலிபுருஷன் நளனுடன் சேருதல்...!


ளன் தமயந்தி திருமணம் வெகுவிமர்சையாக நடந்தது. பின்னர் அவர்களுக்கு இந்திரசேனன் மற்றும் இந்திரசேனா என இரு குழந்தைகள் பிறந்தனர். நளன் திறம்பட ஆட்சி புரிந்து வந்தான். நிஷத் அரசர் இறந்தவுடன், நளன் அரசனானான். பல்வேறு ராஜ்யங்களை கைப்பற்றி புகழை அடைந்தான். தன் சகோதரனான புஷ்கரனுக்கு இது பொறாமையை ஏற்படுத்தியது. நித்ய சந்தியாவந்தனம், எல்லா உயிர்கள் மீதும் அன்பு, தர்மம் என வாழ்ந்து வந்த நளனை கலிபுருஷனால் பீடிக்க முடியவில்லை. கலிபுருஷன், நளனை பிடிப்பதற்காக 12 வருடங்கள் காத்திருந்தான். ஒரு நாள், நளன் சந்தியாவந்தனம் செய்தவதற்காக கால்களை கழுவினான். ஒரு காலை சரியாக கழுவாமல் சந்தியாவந்தனம் செய்தான். இதை கவனித்த கலிபுருஷன், கால்களின் வழியாக அவனுள் சென்றான்.

கலிபுருஷன்

அசுத்தம் என்பதன் மூலம் கலிபுருஷன் நம்மை தொற்றிக் கொள்வான். கண்களுக்குப் புலனாகாத சக்திகள் நடந்து வரும் சமயம் எளிதாகக் காலைத் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு மிகுதி. சரியாக கழுவாத நிலையில், தொற்றிய சக்தி விறுவிறுவென நம்முள் ஏறி விடும். முதலில் இது மனதை ஆக்கிரமிக்கும். இதனால் விழிப்புணர்வு குறையும். செயல்பாடுகளில் அரைகுறை தன்மையைத் தோற்றுவிக்கும். இப்படிப்பட்டவர்களை, கலிபுருஷன் ஆக்கிரமித்துக் கொள்வான். தீய குணங்களில் ஒன்று நம்மிடம் இருந்தாலும், கலிபுருஷன் நம்மை ஆட்டி வைப்பான்.

கலிபுருஷன் நளனை அடைந்தவுடன், அவன் முற்றிலும் மாறுபட்டான். தன் சகோதரன் மீது பொறாமைக் கொண்ட புஷ்கரன், நளனை சூதாட அழைத்தான். நளனும் சூதாட சம்மதம் தெரிவித்தான். புஷ்கரனுடன் சூதாடிய நளன், நாடு, நகரம், மனை, பொன், பொருள் என அனைத்தையும் இழந்தான். புஷ்கரன், நளனை நாட்டை விட்டு துரத்தினான். இதனால் நளன் காட்டிற்கு செல்ல வேண்டியதாற்று. நளன், தமயந்தியிடம், குழந்தைகளும், நீயும் உனது தந்தையின் நாட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினான். ஆனால், தமயந்தி, என்னால் தங்களை விட்டு பிரிந்திருக்க இயலாது. கணவனோடு வாழ்பவளே உத்தமி. அதனால் நானும் தங்களுடனே வருவேன் எனக் கூறினாள். தன் மனைவியின் அன்பை உணர்ந்த நளன், அணிந்திருந்த ஆடையுடன் காட்டிற்கு சென்றான். தனது குழந்தைகளை, தந்தையின் நாட்டிற்கு அனுப்பி வைத்தாள் தமயந்தி.

இருவரும் காட்டிற்குச் சென்றனர். அங்கும் அவர்களுக்கான சோதனை காலம் காத்துக் கொண்டிருந்தது. காட்டில் இருவரும் மிகுந்த பசியால் வாடினர். அப்பொழுதும் கூட நளன், தமயந்தியிடம், நீ தந்தையிடம் சென்று விடு. நீ என்னுடன் இருந்து இவ்வளவு துன்பப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றான். தமயந்தி, நான் தங்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகின்றேன். தங்களின் கஷ்டத்தை நானும் பகிர்ந்து கொள்வது தான் சிறந்தது எனக் கூறினாள். நளன், ஆணுக்கு பெண் துணையாக இருப்பது அவனது கஷ்டத்தை குறைக்கும் என்பது உண்மை தான் என்றான். அப்பொழுது மரத்தில் பறவைகள் இருப்பதை கண்டான். இந்த பறவைகளை பிடித்து விற்றால் பொன் கிடைக்கும், அதன் மூலம் நாம் பசியாறலாம் என்றான்.

உடனே நளன், தான் அணிந்திருந்த ஆடையை பறவைகளை நோக்கி தூக்கி எறிந்தான். பறவைகள் அந்த ஆடையை இழுத்துக் கொண்டு பறந்தன. இதை பார்த்த தமயந்தி தன் புடவையை பாதியாக கிழித்து நளனுக்கு கொடுத்தாள்.

அதன் பிறகு இருவரும் அங்கிருந்து வேறோரு இடத்திற்குச் சென்றனர். இரவானதால் இருவரும் அங்கேயே தங்க முடிவு செய்தனர். நளன் மறுபடியும், நீ என்னுடன் இருந்து இவ்வளவு துன்பங்களை அனுபவிப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. அதனால் நீ உன் தந்தையின் இருப்பிடத்திற்கு செல். அதற்கான வழியை நான் காண்பிக்கிறேன் என்றான். நான் எப்போதும் தங்களுடன் தான் இருப்பேன். நான் என் வீட்டிற்கு செல்வதை நீங்கள் விரும்பினால், நாம் இருவரும் சேர்ந்து போய், அங்கே ஒன்றாக வாழலாம் என்றாள். இதற்கு மேல் நளனால் ஒன்றும் பேச முடியவில்லை. அதன் பிறகு இருவரும் தூங்கச் சென்றனர். தமயந்தி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். நளன் கண் விழித்தான். தமயந்தியை பார்த்து வருந்தினான். மனதிற்குள் தமயந்தியிடம் மன்னிப்பு கேட்டான். நளன் தமயந்தியை விட்டுவிட்டு காட்டிற்குள் சென்றான்.

பொழுது விடிந்தது. நளனை காணாமல் தமயந்தி அங்குமிங்கும் தேடினாள். காடு முழுவதும் தேடியும் நளனைக் காணவில்லை. நளனை தேடிக் கொண்டு காட்டு வழியே சென்றாள். போகும் வழியில் மகரிஷிகள் தவம் செய்திக் கொண்டிருப்பதை அவள் கண்டாள். மகரிஷிகள் தங்களுடன் தங்க அவளுக்கு அனுமதி அளித்தனர். தமயந்தியின் நிலைமையை மகரிஷிகள் கேட்டு தெரிந்துக் கொண்டனர். மகரிஷிகள், அம்மா! இது உங்களுக்கான சோதனை காலம்! விரைவில் இந்த சோதனைகளிலிருந்து விடுபட்டு, உன் கணவனோடு சேர்ந்து நல்வாழ்வு பெறுவாய். நம்பிக்கையோடு இரு என்றனர். அதன் பிறகு தமயந்தி மகரிஷிகளிடமிருந்து விடைப்பெற்று சேதி நாட்டை நோக்கி பயணம் செய்தாள்.

தமயந்தியின் ஆடை கிழிந்து இருந்ததால், அவளை கண்டவர்கள் இவள் பைத்தியம் போலும் என நினைத்து அவள் மேல் கற்களை தூக்கி எறிந்தனர். அப்பொழுது சேதி நாட்டின் அரசி பல்லக்கில் வந்துக் கொண்டிருந்தாள். தமய்ந்தியின் நிலையை கண்டு மனமுருகிய அரசி, அவளை தன்னுடன் அழைத்துச் சென்றாள். தமயந்தியிடம் நீ யார்? எனக் கேட்டாள். தமயந்தி, தான் விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகள் என்றோ, நிஷத நாட்டு மன்னன் நளனின் மனைவி என்றோ சொல்லாமல் கணவனைத் தேடி அலையும் அபலை என்று கூறினாள்.

சேதி நாட்டினரசி, தமயந்திக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமின்றி தனது மகள் சுனந்தாவின் தோழியாக இருக்கும்படி கூறினாள்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக