பொதுவாக இடம், பொருள் அறிந்து பேச வேண்டும் என்று சொல்லும் வழக்கம் உண்டு. யாரிடம் எப்படி பேச வேண்டும் என இக்கதை மூலம் பார்க்கலாம்.
ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அந்த காட்டில் சிங்கம் இருப்பது எல்லா மிருகங்களுக்கும் தெரியும்.
ஒரு சமயம் அந்த சிங்கம் காட்டில் உள்ள ஒரு ஆட்டை அழைத்தது. அந்த ஆடு மிகுந்த பயத்துடன் அந்த சிங்கத்திடம் சென்றது.
சிங்கம் அந்த ஆட்டை பார்த்து என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல், என்று கேட்டது.
அதற்கு அந்த ஆடு சிங்கத்தை முகர்ந்து பார்த்துவிட்டு, ஆமாம், நாறுகிறது, என்று கூறியது. உடனே சிங்கம், கோபத்துடன் முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால் இவ்வாறு கூறுவாய் என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து, அதனுடைய கருத்தைக் கேட்டது. உடனே ஓநாயும் சிங்கத்தை முகர்ந்து பார்த்துவிட்டு, கொஞ்சம் கூட நாறவில்லை, என்று கூறியது.
உடனே சிங்கம், ஓநாயை கோபத்துடன் மூடனே, பொய்யா சொல்கிறாய்? என்று கூறி அடித்துக் கொன்றது.
பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது, நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை என்றது. சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
தத்துவம் :
ஒருவரிடம் பேசும் போது இடமறிந்து பேச வேண்டும். புத்திசாலிகள் எப்பொழுதும் யாரிடம் எப்படி பேச வேண்டும் என அறிந்து இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக