ரத, கஜ, துரக, பதாதி படைகள் என அனைத்து படைகள் வரை வியாக்கிரக, சிம்ஹ விமான, சர்ப்ப பட்சி, கனக வாகனங்களில் வீற்றிருக்கக் கூடியவர்களும் அவ்விடம் வந்து இறங்கினர். பலவிதமான கணங்களை சேர்ந்தவர்களும் சங்குகளை ஒலிக்கும் இசைக்கருவிகளை வாசித்து பறைகளை முழங்கச் செய்தும், நாதங்களை ஊதியும், வீணை... குழல் என பல இசைக்கருவிகளை இசைத்து அனைவரும் மகிழ்ச்சி கொண்டும், ஆடல் பாடலுடன் அவ்விடத்தில் இவ்வுலகில் உள்ளவரை காட்டிலும் வீரர்கள் யாவரும் நிறைந்திருக்க ஒன்றிணைந்து குழுமி நின்று கொண்டிருந்தனர்.
சத்தியலோகத்தில் வீற்றிருக்கக்கூடிய பிரம்மதேவரும் அவருடைய அன்ன வாகனத்தில் அமர்ந்து வருகைத்தர, அவரை சூழ்ந்து சித்த கணங்கள் யாவும் வந்து கொண்டிருந்தன. தென்புறத்தில் இருந்து கமண்டல உருவத்தில் ரிக்வேதமும், மேற்புறத்திலிருந்து பற்பல உருவங்களில் சாமவேதமும், வட திசையிலிருந்து அக்னியைப் போன்ற மிகுந்த பிரகாசத்துடன் விளங்கும் அதர்வண வேதமும், கிழக்குப் புறத்தில் இருந்து யஜூர் வேதமும் அவ்விடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன.
திருமால் தனது கருட வாகனத்தில் வீற்றிருந்து நந்தி இருக்கும் இடத்தை நோக்கி வருகை தந்து கொண்டிருந்தார். தேவர்களின் வேந்தனான தேவேந்திரனும் ஐராவத யானையின் மீது அமர்ந்து பல தேவர்கள் சூழ அவ்விடம் நோக்கி வந்தார்.
அவ்விடத்தை காணும் போது பல லட்சம் கோடி சூரியன்கள் யாவரும் ஒரே இடத்தில் இருந்து ஒளி வீசுவது போல, மிகப்பெரிய பிரகாசத்துடன் கூடிய பலவிதமான இருளைப் போக்கக்கூடிய மற்றும் காண்பதற்கு அரிய மற்றும் எண்ணிலடங்கா வண்ணம் எடுத்துரைக்க இயலாத வகையில் அவ்விடத்தில் அனைத்து தேவர்களும் சூழ மத்தியில் நந்தியோ வீற்றிருந்தார்.
திருமால் தலைமை ஏற்றல் :
மதிச்சூடிய எம்பெருமான், திருமாலை நோக்கி சகல தேவர்களில் அனைவராலும் வணங்கக்கூடியவராக இவ்வேளையிலே நந்திக்கு கணபத்தியம் கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும், அதைப்பொறுத்து அவருக்கு அபிஷேகம் செய்ய இருக்கின்றேன். இதில் தங்களுக்கு விருப்பம் தானே உங்களுக்கு விருப்பம் எனில் நந்திக்கு தாங்களே அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறினார்.
திருமாலும் எம்பெருமானின் எண்ணங்களை ஏற்று அவரை கண்டு புன்னகை மலர்ந்து எம்பெருமானே!... இங்குள்ள அனைத்து தேவர்களும், ஏன்... நான் உட்பட அனைவரும் தங்களின் எண்ணங்களாகவே செயல்பட காத்திருக்கின்றோம். இதில் தங்களின் எண்ணம் எதுவென்றாலும் அதை நிறைவேற்றி வைப்போம் என்று கூறினார். அவ்வேளையில் எம்பெருமானின் கண்ணசைவிற்காக காத்துக்கொண்டு இருந்த மற்ற படைவீரர்களும், தலைவர்களும் எம்பெருமானை கண்டு வணங்கி, பெருமானே!! தாங்கள் ஆணையிட்டால் தங்கள் விருப்பம் போல் அனைத்தும் செய்ய காத்திருக்கின்றோம் என்று திடமாக கூறினார்கள்.
எம்பெருமானின் எண்ணங்களை அறிந்து அசுர வீரர்களும், அசுரப்படைகளும் தேவர்கள் இருக்கும் இடமான அவ்விடத்திற்கு, எம்பெருமான் வழிநடத்திச் செல்லும் கணப் படைகளின் தலைவரான நந்தியை காண அனைவரும் தங்களது பகைமையை மறந்து எம்பெருமானின் அருளுக்காகவே அவ்விடத்தில் குழுமி நின்று கொண்டிருந்தனர்.
ஆனால், எம்பெருமான் அவர்கள் அனைவரையும் கண்டு புன்னகைத்து நீங்கள் அனைவரும் எனது உத்தரவுக்காக காத்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன் என்றும், அதாவது நந்திதேவரை கணங்கள் அனைவருக்கும் நாயகனாக கொள்ள எல்லோரும் விருப்பம் கொண்டுள்ளனர் என்றும், அதற்கு யாமும் சம்மதித்து இருக்கின்றேன் என்றும் கூறினார். நீங்களும் அதற்கு இசைந்து உங்கள் எல்லோர்க்கும் அவரை சேனாதிபதி ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும், இன்று முதல் நந்தியே உங்கள் அனைவருக்கும் தலைவனாக இருந்து உங்களை வழிநடத்திச் செல்வார் என்றும் கூறினார்.
உணவு மற்றும் மண்டபம் தயாராகுதல் :
எம்பெருமானின் திருவாயிலிருந்து இச்செய்தியைக் கேள்வியுற்ற பார்வதி தேவியின் தோழிகள் அனைவரும் சமையற் பண்டங்களை எடுத்து வந்து, அங்கு குழுமியிருந்த அனைத்து தேவர்கள் மற்றும் கணவீரர்களுக்கு அன்ன பானங்களை தயார் செய்ய தேவையான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தனர்.
கணவீரர்கள் அனைவரும் பொன் நகைகளால் இழைக்கப்பட்ட ஒரு மணிமண்டபத்தை அமைத்து விண்வெளியில் இருந்த நட்சத்திரங்களை முத்துக்களாக கொண்டும் உருவாக்கப்பட்ட சரங்களை தொங்கவிட்டு, நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட பலவிதமான தூண்களையும் அமைத்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான எழில் யாவற்றையும் ஒரு சிறு குடையின் கீழ் கொண்டு வர இயலுமா? என்ற கற்பனைக்கு எட்டாத பலவிதமான அதிசயங்கள் உடனே மண்டபத்தை வடிவமைத்து அங்கு குழுமியிருந்த அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்கள்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக