முடி சூட்டுதல் :
மண்டபத்தின் மத்தியிலேயே மேரு மலையை போன்ற ஒரு உயர்ந்த ஆசனம் ஒன்றை அமைத்து அந்த ஆசனத்தில் நந்தியை அமரவைத்து நந்திதேவருக்கு பல அழகிய உடைகள் மற்றும் வஜ்ர குண்டலங்களில் நவரத்தின கிரீடம் ஆகியவற்றை அணிவித்து வஜ்ராயுதம் போன்ற ஆயுதங்களையும் அவரிடம் அளித்து தேவர்கள் அனைவரும் நந்திக்கு நிழல் குடைபிடிக்க வெண்சாமரம் வீச... பிரம்மதேவர் புனித நதியான கங்கை நதியில் நந்திக்கு அபிஷேகம் செய்ய... திருமாலோ நந்தியை சிவகணங்களுக்கு தலைவராக முடி சூட்டினார்.
தேவர்கள், யஷர்கள், கின்னரர், கிம்புருடர், கந்தவர்கள் மற்றும் தேவர்களின் சகோதரர்களான அசுரர்கள் போன்றோர் இசை வாத்தியங்களான மிருதங்கம், சங்கு, பேரிகை, குழல், வீணை முதலிய வாத்தியங்களை முழங்கச் செய்து தங்களது மகிழ்ச்சியை பிரபஞ்சம் முழுவதும் அனைத்து ஜீவராசிகளும் உணரும் வகையில் கார்மேகங்கள் சூழ கர்ஜனை போன்ற கம்பீரமான நாதத்தை உருவாக்கி தங்களது மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்தளித்தனர்.
எம்பெருமானின் விருப்பம் :
இவ்விதமாக நந்திதேவர் சிவ கண அதிபதியாக பதவி ஏற்றதும் நந்திதேவருக்கு ஒரு தேவ கன்னிகையை திருமணம் செய்து வைக்க எம்பெருமான் விருப்பம் கொண்டார். தனது விருப்பத்தை அங்கிருந்த தேவர்களிடம் தெரிவித்து நந்திக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்குமாறு கூறினார். எம்பெருமானின் கூற்றுகளை கேட்ட தேவர்கள் அனைவரும் ஒருவிதமான தயக்கத்துடன் எம்பெருமானிடம் தங்களது விருப்பங்களை தங்களது தலைவரான தேவேந்திரனின் மூலம் தெரிவித்தனர்.
அதாவது, அனைத்து தேவர்களிலும் முதன்மையானவர் தாங்களே என்றும், அனைவருக்கும் உபதேசம் செய்யக்கூடிய தட்சிணாமூர்த்தியாகவும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து அளிக்கக்கூடிய கைலாசநாதரும் ஆகிய தாங்கள் அறியாத ஏதாவது உண்டா? இந்த பிரபஞ்சம் முழுவதும் தன்னுள் கொண்டிருக்கும்... மதியையும், கங்கையையும் தனது முடியில் கொண்ட எம்பெருமானே தங்களுடைய கூற்று எங்கள் அனைவருக்கும் ஒருவிதமான வினோதமாக இருப்பினும் தங்களின் கட்டளைக்கு அடிப்பணிகின்றோம் என்றும், தங்களது விருப்பங்களையும் தங்களது மகிழ்ச்சியையும் ஒருசேர தங்களுக்கு அருள்புரியும் தேவனாகிய எம்பெருமானிடம் எடுத்துரைத்தனர்.
மணப்பெண்ணை தேர்வு செய்தல் :
பின்பு தேவர்கள் அனைவரும் ஒருசேர இணைந்து கணாதிபதியான நந்திதேவருக்கு மணப்பெண்ணை தேர்ந்தெடுத்தனர். அப்பெரும் பாக்கியமானது எம்பெருமானின் அருகில் வீற்றிருக்கும் நந்தியின் மனைவியாக திகழக்கூடிய உன்னதமான நிலையானது மருதத்தின் மகளாகிய கயசை என்ற கன்னிக்கு வரமாக கிடைத்தது. தேவர்கள் அனைவரும் கயசையே நந்தியின் குணங்களுக்கு பொருத்தமானவர் என்று எடுத்துரைக்க அவ்வாறே கயசையுடன் நந்திதேவரின் திருமணமானது நிச்சயம் செய்யப்பட்டது.
திருமணச் சடங்குகள் :
திருமணச் சடங்கானது அனைத்து தேவர்களும் ஒருங்கே இணைந்து சிறந்த முறையில் சிறப்பாக செயல்பட்டு ஆடல் பாடல்களுடன் கூடிய மகிழ்ச்சியான சூழலில் நிகழ்த்தப்படுவதற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டன.
திருமணச் சடங்கில் பிரம்மதேவர் புரோகிதராக அமரவும், கந்தர்வர்கள் இசை வாத்தியங்களை வாசிக்கவும், ரம்பை, ஊர்வசி, கிருதாசி மற்றும் திலோத்தமை முதலிய அப்சர மங்கைகள் வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப பரதநாட்டியம் நிகழ்த்த இவ்வுலகில் எங்கும் காணக்கிடைக்காத அனைத்து வகையான ஒலி-ஒளி வகையிலும் ஒருசேர அமையப் பெற்று, அங்கு இருப்போரை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில், அதே வேளையில் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் திருமணச் சடங்கானது என்றும் எவர் மனதிலும் இருந்து நீங்காமல் இருக்க அனைவரும் ஒருசேர இருந்து திருமணச் சுபவினைகளை நிகழ்த்திக்கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள்.
ஆசிப்பெறுதல் :
திருமண விழாவில் திருமண தம்பதியரான நந்திதேவரும் அவர் மனைவியான கயசையும் திருமணம் முடிந்த பின்பு எம்பெருமானையும் உமாதேவியாரையும் கண்டு வணங்கி ஆசிப்பெற்றனர். இந்நிகழ்ச்சிகளை தனது இரு கண்களால் கண்ட சிலாத முனிவர் தன் மனதில் எல்லையில்லா பரவசமும், ஆனந்தமும் கொண்டார். தனது மகனுக்கு கிடைத்த பெருமையானது இவ்வுலகில் எவருக்கும் கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷமாகவே சிலாதர் கருதினார். எம்பெருமானிடம் ஆசிப்பெற்ற நந்திதேவரை நோக்கி எம்பெருமான், திருமண தம்பதிகளே உங்களுக்கு வேண்டும் வரத்தினை கேட்பீர்களாக... என்று கூறினார்.
நந்திதேவர் சிவபெருமானை துதித்து எம்பெருமானே... தாங்கள் எங்களுக்கு வரம் அளிப்பதாக இருக்குமேயானால், நாங்கள் என்றும் உங்களின் மீது பக்தி கொண்டவராக இருக்க வேண்டும் என்றும், என் தந்தை மற்றும் என் முன்னோர்களுக்கு தாங்கள் திருவருள் செய்தருள வேண்டுமென்றும் வேண்டினார். எம்பெருமானும் நந்தியின் வரத்தை ஏற்று அவ்வாறே ஆகுக என்று கூறி நந்திக்கு வேண்டும் வரத்தை அளித்தார். நந்தியின் தந்தையான சிலாதருக்கும், அவர்களின் பித்ருக்களுக்கும் சிவ பதவிகள் எம்பெருமானின் அருளால் கிடைத்தன. பின்பு, நந்திதேவர் கைலாயத்திற்கு சென்று தனது கரங்களில் பொற்பிரம்பு மற்றும் ஆயுதங்களுடன் சிவகணங்களுக்கு தலைவராக அமர்ந்து தனது பணிகளை செவ்வனே செய்து நிர்வாகித்து வந்து கொண்டிருக்கின்றார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக