திங்கள், 16 மார்ச், 2020

கார்கோடன் பாம்பை காப்பாற்றும் நளன்...!

ளன், தமயந்தியை விட்டு பிரிந்து சென்ற பின், காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு உதவி வேண்டி ஒரு குரல் கேட்டது. அக்குரல் வரும் திசையை நோக்கி நடந்தான். 

சற்றுத் தொலைவில் காற்றில் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அத்தீக்குள் இருந்து யாரேனும் இருந்தால் என்னை வந்து காப்பாற்றுங்கள் என்னும் குரல் கேட்டது. அக்குரலை கேட்டு நளன் திடுக்கிட்டான். முன்பு தேவர்களில் அக்னி கொடுத்த வரம், தனக்கு தீயினால் எந்த ஆபத்தும் வராது என்பது நினைவுக்கு வந்தது. 

உடனே அந்த தீயிக்குள் புகுந்தான். அதில் ஒரு பாம்பு, மனித குரலில் உதவிக் கேட்டது தெரிந்தது. நான் தான் கார்கோடன், பாம்புகளின் அரசன். என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றவும் என்றது. நளன், அந்த பாம்பை காப்பாற்றினான். பாம்பு தன்னை காப்பாற்றிய நளனுக்கு, கோடி வணக்கங்கள் கூறியது.

 பாம்பு நளனை பார்த்து நீ நளன் மகாராஜன் தானே? எனக் கேட்டது. நளன், ஆச்சர்யத்துடன் ஆமாம் எனக் கூறினான். நான் நளன் என்பது உனக்கு எப்படி தெரியும் என பாம்பிடம் கேட்டான். 

பாம்பு, நளன் அரசே! நான் நாரத முனிவரின் சாபத்தால் சக்தியற்றவனாக இவ்விடத்திலேயே படுத்துக் கிடந்தேன். முனிவர், நளன் அரசன் உன்னை எப்பொழுது தீண்டுறானோ அப்பொழுது உனது சாபம் நீங்கி விடும் என்றார். அது போலவே, எனது சாபமும் நீங்கி விட்டது என்றது.

 நளன், நானோ அனைத்தையும் இழந்து காட்டில் அங்கும் இங்கும் திரிந்துக் கொண்டிருக்கிறேன். என்னால் உனக்கு நன்மை கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் என் வாழ்க்கையில் விதி என்னை இந்நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது எனக் கவலையுடன் கூறினான்.

 நளனை உற்று பார்த்த பாம்பு, அரசே! நீ கலிபுஷனின் வலையில் மாட்டிக் கொண்டுள்ளாய். அதனால் தான் உனக்கு இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதைக் கேட்ட நளன், நான் கலியிடம் இருந்துவிடுபட ஏதேனும் வாய்ப்புள்ளதா? எனக் கேட்டான். 

பாம்பு, இருக்கிறது, ஆனால் அதற்கு நீ கோரமான உருவம் தாங்க வேண்டும் என்றது. நளன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டான். பாம்பு, நீ என்னை பார்த்து கடி என்று கூறு என்றது. இதைக் கேட்டு நளன் பயந்தான். நீ கடித்து நான் இறந்து விட்டால் என்ன செய்வது? என்றான். 

பாம்பு, அரசே! நீ என்னை பார்த்து பயம் கொள்ள தேவையில்லை. என் விஷம் தீங்கை தராது. நான் கடிப்பதால் நீ இறக்க மாட்டாய் என்றது. அதன் பிறகு நளன் பயம் தெளிந்து, என்னைக் கடி என்றான். கார்கோடன் பாம்பு நளனை கடித்தது.

 பாம்பின் விஷம் நளனின் உடம்பில் ஏறியதால், நளன் உடம்பு கருநிறமாக மாறியது. அருவருப்பான தோற்றத்துடன் காட்சி அளித்தான் நளன். பாம்பு, அரசே! பிறருக்கு அடையாளம் தெரியக்கூடாத காரணத்தினால் தான் உம்மை இப்படி மாற்றினேன். 

இதன்மூலம் உங்கள் எதிரியை சுலபமாக வெல்லலாம். உன் தோற்றமே உனக்கு கவசமாகும். அதன் பிறகு ஒரு ஆடையை நளனிடம் கொடுத்தது. அரசே! இந்த ஆடையை என்னை நினைத்து தாங்கள் அணிந்தால் தங்களின் பழைய உருவத்தை திரும்பவும் பெறுவீர்கள் என்றது. நீங்கள் உடனே அயோத்தி சென்று சூதாடுவதில் வல்லவனான ரிதுபர்ணன் என்னும் அரசனிடம் பாஹீகா என்னும் தேர் பாகனாக செல்லுங்கள்.

 அவனிடம் தாங்கள் சூதாட்ட வித்தையை கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் இழந்த செல்வம் மனைவி, மக்கள் என அனைவரையும் அடைவீர்கள் எனக் கூறிவிட்டு பாம்பு அங்கிருந்து சென்றது. கார்கோடன் சொன்னது போலவே ரிதுபர்ணனின் தேரோட்டியாக ஆனான், நளன்.

 தன் மகளின் நிலையை அறிந்த பீம ராஜன், தன் மகளை தேடி கண்டுபிடிப்போருக்கு பொன் பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தான். தமயந்தியை தேடி சுதேவன் என்னும் அந்தணன் சென்றார். ஒரு முறை அவன் சேதி நாட்டிற்கு சென்றான்.

 அங்கு அரண்மனையில் அரசனின் மகள் சுனந்தாவுடன் தமயந்தி இருப்பதை கண்டார். உடனே தமயந்தியை அங்கிருந்து விதர்ப்ப நாட்டிற்கு அழைத்து வந்தார். தன் மகளை கண்ட பீமன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தான். 

அதன் பின் தமயந்தி நளனை பிரிந்து வந்தததை பற்றிக் கூறினாள். உடனே நளனை தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறினாள். தமயந்தியை கண்டுபிடித்து அழைத்து வந்த சுதேவனுக்கே இந்த பொறுப்பு அளிக்கப்பட்டது. தமயந்தியை கண்டுபிடித்து அழைத்து வந்ததற்காக பொன்னும் பொருளும் தானமாக வழங்கினார்.

 அயோத்தியில் ருதுபர்ணனும், நளனும் உற்ற நண்பர்களாக ஆகிவிட்டனர். ருதுபர்ணன் எங்கு சென்றாலும் தன்னுடன் நளனை அழைத்து சென்றான். அந்தணன் சுதேவன், நளனை தேடிச் சென்றான். பல நாடுகளில் நளனை தேடினான். எங்கும் நளன் கிடைக்கவில்லை. 

ஒரு நாள் அயோத்திக்கு வந்து ருதுபர்ணன் அரண்மனைக்கு சென்றான். சுதேவன் நான் இங்கு நளனை தேடி வந்திருப்பதாக கூறினான். இதைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாறுவேடத்தில் நளன் அங்கு இருப்பதை சுதேவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அப்பொழுது நளனை தனியாக சந்திக்கும் வாய்ப்பு சுதேவனுக்கு ஏற்பட்டது. நளன், அந்தணரே! ஒரு குல மகளின் அவநிலையை உங்களால் இன்று நான் அறிந்தேன். தனக்கு இவ்வளவு துன்பங்கள் ஏற்பட்ட நிலையிலும் தன் கணவனுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் அப்பெண்ணை நினைக்கும் போது என் மனம் கலங்குகிறது.

தன் மனைவியை பிரிந்து சென்ற அவன், தன் மனைவிக்கு தன்னால் எந்த துன்பமும் ஏற்படக் கூடாது என்னும் நோக்கில் அல்லவா அவன் பிரிந்து சென்றிருப்பான். தன்னை விட்டு பிரிந்து சென்றால் தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று எண்ணியல்லவா அவன் பிரிந்திருப்பான். 

இப்பொழுது அவன் நினைத்தப்படி தந்தையுடன் இருக்கிறாள் அல்லவா? எனக் கூறினான். அதன் பிறகு சுதேவன் அங்கிருந்து விதர்ப்ப நாட்டிற்கு சென்று தமயந்தியிடம் அயோத்தியில் நளனிடம் பேசியதை அப்படியே கூறினான். இதைக் கேட்ட தமயந்தி, இவர் தன் மணாளன் நளன் என்பதை அறிந்துக் கொண்டாள்.

 தனக்கு மறு சுயம்வரம் வைத்தால், நிச்சயம் நளன் வருவான் என நினைத்தாள். உடனே தன் தந்தையிடம் சுயம்வரத்திற்கான ஏற்பாட்டை செய்யுமாறு கூறினாள். தன் மகளின் யூகத்தை அறிந்த மன்னர் சுயம்வரத்திற்கான ஏற்பாட்டை செய்தார்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்