Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது மிகவும் ஆபத்தானது

மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவுக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் குருபிரசாத் மகோபாத்ரா எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், மக்களின் கைகளில் பணம் புழங்குவதை உறுதி செய்யவும் உர ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகள் உள்ளிட்ட 16 வகையான  தொழிற்சாலைகளை இயக்க வசதியாக ஊரடங்கு ஆணையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்  என்று கூறியிருக்கிறார். தொழில் மற்றும் வணிகம் சார்ந்த பெரும்பான்மையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றும் யோசனை வழங்கியுள்ளார். இவை தவறான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகத் தவறான யோசனைகள் ஆகும். இந்த கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது.

ஏற்றுமதி வாய்ப்பு கொண்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும்; 16 வகையான கனரக ஆலைகள் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தொழில்துறை கோரியிருக்கிறது. இதேதுறை கடந்த காலங்களில் வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை  35 கோடி ஆகும். அவர்களின் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 9 கோடி பேர் ஊரடங்கிலிருந்து வெளியில் வந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எந்த நோக்கத்திற்காக ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைக்கப்பட்டு விடும்.

ஊரடங்கு ஆணையை பிறப்பித்து கடந்த மார்ச் 24-ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘‘வீட்டுக்கு வெளியே ஓரடி எடுத்து வைத்தால் கூட கொரோனா வைரஸ் நோயை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று தான் பொருள். எனவே, அனைவரும் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். பிரதமர் கூறியதை விட மோசமான சூழல் இப்போது இருக்கும் நிலையில், 9 கோடி  தொழிலாளர்களை வீடுகளை விட்டு வெளியேறி தொழிற்சாலைகளுக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று கோருவது நியாயமற்றதாகும்.

இந்தியாவில் முதற்கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்டமாக முதலில் இரு வாரங்களுக்கும், பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கும், அதாவது மே மாத முதல் வாரம் வரையிலும்  ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் நாட்டில் மொத்தமுள்ள 736 மாவட்டங்களில் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட 300 மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் மே முதல் வாரத்திற்கு பிறகு ஊரடங்கை படிப்படியாக தளர்த்தலாம்.

அவ்வாறு செய்வதற்கு பதிலாக அவசரப்பட்டு 16 வகையான தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்தால்,  அதன் மூலம் எந்த அளவுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைக்குமோ, அதை விட 5 மடங்குக்கும் கூடுதலான பொருளாதார வீழ்ச்சி நோய்ப்பரவல் காரணமாக ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்தியாவுக்கு இன்றைய சூழலில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தான் மிகவும் அவசியமாகும். பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிந்திப்ப்பதற்கான தருணம் இன்னும் கனியவில்லை. எனவே, உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி மற்றும் வினியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர மீதமுள்ள எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக