Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

ஆறாம் நாள் போர்.!

ஆறாம் நாள் போரில், துருஷ்டத்துய்மன் பாண்டவர் படைகளை மகரமீன் வடிவமாகவும், பீஷ்மர் கௌரவர் படைகளை அன்றில் பறவையின் வடிவமாகவும் வகுத்து நிறுத்தியிருந்தார்கள். 

போர் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை நேருக்கு நேர் போர் புரியாத பீமனும், துரோணரும் நேருக்கு நேர் போர் புரிய நின்றார்கள். துரோணரையும் அவருடன் சேர்ந்த மற்ற வீரர்களையும் பீமன் தாக்கிக் கொண்டிருக்கும்போது சல்லியன் குறுக்கிட்டு, நான் போருக்கு தயாராக உள்ளேன் என்னுடன் போருக்கு வா! என்று பீமனை அழைத்தான். 

பீமன், சல்லியனைப் பார்த்து ஏளனமாக நகைத்துக் கொண்டே என்னுடன் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய உனக்கு எந்த தகுதியும் இல்லை. நீ ஏற்கனவே பல முறை என்னுடன் தோற்றுப்போனவன்! என்று இகழ்ந்து கூறிப் போரைத் தொடங்கினான்.

சல்லியனுக்கும், பீமனுக்கும் நடந்த போரில் பீமன் சல்லியனுடைய வில்லை முறித்து வீழ்த்தி விட்டு அவனைத் தேரோடு தூக்கித் தரையில் வீழ்த்தினான். 

இதனால் சல்லியனுடைய வலிமை முற்றிலும் அடங்கிவிட்டது. சல்லியனுக்கு துணையாக துரியோதனன் சில வீரர்களோடு பீமனை எதிர்க்க வந்தான். துரியோதனனும், மற்ற வீரர்களும் சேர்ந்து பீமனை தாக்கினர். 

அதை சமாளிப்பதற்காகத் திருஷ்டத்துய்மன், கடோத்கஜன் முதலியவர்கள் பீமனுக்கு உதவியாக வந்தனர். பீமன் கடுமையாக செய்த போரில் கௌரவர்களில் சிலர் பீமன் கைகளால் இறந்தார்கள். பீமனின் போர்த் திறமையை தேவர்கள் அனைவரும் பாராட்டினர்.

விகர்ணனும், அபிமன்யுவும் களத்தின் வேறோர் புறத்தில் போர் செய்து கொண்டிருந்தனர். அபிமன்யு தனக்கு எதிரே வந்த வேகத்திலேயே விகர்ணனின் தேரை முறியடித்தான். விகர்ணன் தேர் ஒடிந்ததும் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த சித்திரசேனன் என்பவனுடைய தேரில் ஏறிக் கொண்டு போர்புரிய தொடங்கினான். 

அபிமன்யுவை சயத்திரதன், பகதத்தன் ஆகியவர்களும் எதிர்த்து அம்புகளை தொடுத்தனர். ஆனால் அபிமன்யு தன்மேல் செலுத்திய அம்புகளைத் தந்திரமாக விலக்கி விட்டு, அவர்கள் மேல் அம்புகளை குறிவைத்து எய்தினான். விகர்ணன், அபிமன்யுவின் அம்புகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினான். 

அற்புதமாகப் போர் புரிந்த அபிமன்யுவைப் பாண்டவர்கள் பாராட்டிக் கொண்டாடினார்கள். சூரியன் மறைவுக்கு பின்பு ஆறாம் நாள் போர் முடிவடைந்தது.

ஏழாம் நாள் போர் :

ஏழாம்நாள் காலையில் போர் தொடங்கிய போது பாண்டவர்கள் சேனை சர்ப்ப வியூகமாகவும், கௌரவர் சேனை சக்கரவியூகமாகவும் நிறுத்தப்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்திருந்த பாண்டிய மன்னன் துரோணரை எதிர்த்துப் போர் செய்தார்.


கௌரவர்களுக்கு துணையாக இருந்த சுதாயு என்பவன் சாத்தகியை எதிர்த்து போர் புரிந்தான். பீமனை எதிர்த்து சல்லியனும், சகுனியும் போரிட்டனர். ஆனால் பீமன் அவர்களை தோற்கடித்து விட்டான்.

பிறகு அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் கடுமையான விற்போர் நடந்து கொண்டிருந்தது. பீஷ்மர் எய்த அம்புகளை ஒன்றுகூடத் தன்மேல் விழாமல் சாமர்த்தியமாக அர்ஜூனன் தடுத்தான். அதேபோல் அர்ஜூனன் எய்த அம்புகளை ஒன்றுகூடத் தன்மேல் விழாமல் பீஷ்மரும் தடுத்தார்.

இதுபோல் ஒருவர் அம்பு மற்றவரை தாக்காமல் நீண்ட நேரம் இருவரும் சாதுர்யமாகப் போர் செய்து கொண்டிருந்தனர். பீஷ்மரும், அர்ஜூனனும் சிறப்பாக போர் செய்தார்கள். 

போர்க்களத்தில் துரோணருக்கும் விராடனுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டிருந்தது. மற்றோர் பக்கம் துரியோதனன் திருட்டத்துயும்னன் கடுமையாக போர் செய்தனர். நகுலனும், சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர்.

சல்லியன் வில் வித்தையிலும் போர்முறைகளிலும், தேரோட்டத்தில் வல்லவன். சல்லியனை வீழ்த்த குலனும், சகாதேவனும் கடுமையாக போரிட்டனர். 

சகாதேவன் தன் ஈட்டியால் சல்லியனின் தேரை தாக்கினான். சல்லியன் நகுலனை நோக்கி அம்புகளை எய்தான். நகுலன், சகாதேவனும் அம்புகளை தங்கள் மேல் படாதவாறு போர் புரிந்தான். 

சல்லியன், நகுலன் மற்றும் சகாதேவனின் போர் திறமையைக் கண்டு வியந்தான். இவர்களின் போரினால் குதிரைகள் மிரண்டு ஓடின. இறுதியில் நகுலன் மற்றும் சகாதேவனின் தாக்குதலா சல்லியன் மயக்கம் அடைந்தான்.

கடோத்கஜன் பகதத்தனை எதிர்த்து போரிட்டான். இருவரும் தங்கள் திறமைகளை காட்டி கடுமையாக போர் புரிந்தனர். பீமன், சித்திரசேனன் மற்றும் விகர்ணனை எதிர்த்து போரிட்டான். போரில் பல காயங்களும், இரத்தங்களும் நிறைந்து இருந்தன. ஏழாம் நாள் போரின் முடிவில் துரோணருக்கும், விராடனுக்கும் கடுமையாக நடந்த போரில் துரோணர் விராடனின் தேரை வீழ்த்தினான். 

அத்தேரின் தேரோட்டியையும் தன் அம்புக்கு இரையாக்கினார். இதைக் கண்ட சங்கன் (விராடனின் மகன்) தேரில் விரைந்து வந்து ஏறினான். ஓரே தேரில் தந்தையும், மகனும் துரோணரை எதிர்த்து போரிட்டனர். அப்பொழுது துரோணர் பாம்பு போன்ற ஒரு கணையை சங்கனை நோக்கி ஏவினார். 

அக்கணை சங்கனின் மார்பில் துளைத்து வெளி வந்தது. அடுத்த நொடியே சங்கன் உயிரிழந்தான். இதைக் கண்ட விராடன் அதிர்ச்சி அடைந்தான். அதன் பின் துரோணருடன் எதிர்த்து போர் புரியாமல் அங்கிருந்து சென்றான்.

துரோணர் தன்னை எதிர்த்து வந்த பாண்டவ படைகளை தடுத்து நிறுத்தினார். சூரிய மறைவுக்கு பின் ஏழாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின் படைகள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்றன. 

போரில் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு இளைபாறினர். கிருஷ்ணர் தன்னுடைய புல்லாங்குழலை எடுத்து, வாசிக்கத் தொடங்கினார். அந்த வேணுகானத்தில், வீரர்கள் அனைவரும் தங்கள் களைப்பை மறந்து மகிழ்ச்சி அடைந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக