திங்கள், 20 ஏப்ரல், 2020

திரிசடையின் கனவுகள்!!

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை சுற்றி பல அரக்கர்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு திரிசடை என்னும் அரக்கி மட்டும் சீதையிடம் அன்பாக பேசுவாள். அங்கு திரிசடையை தவிர்த்து மற்ற அரக்கர்கள் மயக்க நிலையில் வீற்றிருந்தனர். 

அங்கு மற்ற அரக்கர்கள் தூங்கிவிட்டதால் சீதை திரிசடையிடம் பேச ஆரம்பித்தாள். திரிசடை நீ என்னிடம் அன்பாக இருப்பதால் நான் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் என்றாள். பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு இருக்கிறது. 

இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாக போகிறதா? இல்லை, துன்பத்திற்கும் மேல் துன்பம் வர போகிறதா? எனக் கேட்டாள்.

அதுமட்டுமில்லை, இராமர் விசுவாமித்திர முனிவரிடம் மிதிலைக்கு வரும்போது எனது இடக்கண் துடித்தது. இன்றும் அதேபோல் என் இடக்கண் துடிக்கிறது. 

இராமர் நாட்டை விட்டு வனம் செல்லும்போது என் வலக்கண் துடித்தது. பிறகு இராவணன் என்னை கவர்ந்து வரும்போதும் என் வலக்கண் துடித்தது. ஆனால் இன்று என் இடக்கண் துடிக்கிறது. 

இதனால் ஏற்படும் விளைவு என என்னிடம் சொல் எனக் கூறினாள். சீதை சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த திரிசடை, சுபம் உண்டாகும். உன் இடக்கண் துடிப்பதால், நீ நிச்சயம் உன் கணவரை அடைவாய் என்றாள்.

பிறகு திரிசடை, சீதையே! நான் என் கனவில் ஒளி மிகுந்த ஒரு பொன் வண்டு ஒன்று உன் காதருகே பாடிச் சென்றதை கண்டேன். இவ்வாறு ஒரு பொன் வண்டு காதருகே வந்து பாடினால், நிச்சயம் உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் உன்னை வந்து சந்திப்பான். 

குலமகளே! உனக்கு தூக்கம் என்பதே இல்லாததால் உனக்கு கனவு வரவில்லை. மேலும் நான் கண்ட கனவுகளை கூறுகிறேன், கேள் என்றாள். இராவணன் தன் வீட்டில் அக்னி ஹோத்ரம் செய்வதற்காக அக்னியை பாதுகாத்து கொண்டு வருகிறான். 

அந்த அக்னி அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் என் கனவில் அந்த அக்னி அணைந்துவிட்டது. மேலும் அந்த அக்னி இருந்த இடத்தில் செந்நிறத்தில் கரையான்கள் தோன்றின.

அதே போன்று, மாளிகையில் நெடுங்காலமாக மணி விளக்குகள் ஒளி வீசி கொண்டு இருந்தன. திடீரென்று வானத்தில் வீசிய பேரிடியால் அவ்விளக்குகள் எல்லாம் அணைந்து போயின. 

தோரணங்கள், கம்பங்கள் என அனைத்தும் முறிந்து விழுந்தன. பொழுது விடியும் முன்பே கதிரவன் தோன்றியது. 

அரக்க பெண்களின் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாக அறுந்து விழுந்தது. அதுமட்டுமின்றி இராவணனின் மனைவி மண்டோதரி தலைவிரி கோலமாக தோன்றினாள். இவை அனைத்தும் அரக்கர் குலம் அழிவதற்கான தீய சகுனங்கள்.

நான் கடைசியாக கண்ட கனவு, இரண்டு ஆண் சிங்கங்கள், தங்கள் புலிக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு யானைகள் மிகுந்த காட்டிற்கு சென்று யானைகளை எதிர்த்து போரிட்டனர். 

அங்கு கணக்கற்ற யானைகளை கொன்று வீழ்த்திவிட்டு, இறுதியில் அவர்களுடன் ஓர் மயிலை அழைத்துக் கொண்டு சென்றனர். அதுமட்டுமின்றி இராவணனின் மாளிகையில் இருந்து ஓர் அழகிய பெண், ஆயிரம் திரிகளை கொண்ட ஓர் விளக்கை தன் கையில் ஏந்திக் கொண்டு விபீஷணனின் மாளிகைக்கு சென்றாள். 

விபீஷணனின் பொன் மாளிகையில் அப்பெண் நுழைந்த நேரத்தில் விபீஷணன் உறக்கத்தில் இருந்து எழுந்தான். அதற்குள் தாங்கள் என்னை எழுப்பி விட்டீர்கள் என்றாள் திரிசடை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்