கொரோனாவின் தாக்கத்திலிருந்து தப்பித்துகொள்ள அனைத்து மக்களையும் முகக்கவசம் அணியும் படி வலியுறுத்துகிறார்கள். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முகக்கவசத்தை அணிந்திருப்பவர்களுக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தை தயாரித்துவருகிறார்கள்.
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கொரோனாவுக்கான பங்களிப்பில் இறங்கியது. இவர்கள் முகக்கவசத்தின் தேவையை உணர்ந்து அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் சிறந்த முறையில் தரமான முகக்கவசத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் விலையும் மிக குறைவு என்பது ஆறுதல் தரும் விஷயம்.
முகக்கவசங்கள் பற்றாக்குறையால் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில் தரமான விலை மலிவான அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முகக்கவசம் 25அல்லது 30 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் இந்த முகக்கவசத்தை 20 முறை சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஜவுளி பேராசிரியர் எஸ். சுப்ரமணியம் முகக்கவசம் குறித்து கூறும் போது இந்த முகக்கவசம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தை விட பன்மடங்கு பாதுகாப்பாக செயல்படும். வடிகட்டும் துகள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த மாஸ்க்- ஆனது 0.3 மைக்ரோ மட்டத்தில் 30% வடிகட்டுதலையும், 2 மைக்ரான் மட்டத்தில் 80% காற்றை வடிகட்டும் அளவுக்கு திறனையும் கொண்டிருக்கும் சுவாசமும் எளிதாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் இந்த மாஸ்க் சிறப்பாக செயல் பட 300 வகையான துணிகளை சோதித்த பிறகு பாலியஸ்டர் துணியில் உருவாக்கியுள்ளனர். இந்த மாஸ்க் அணியும் போது அவை பாதுகாப்பும், சுவாசத்தையும் சீராக வைத்திருக்கும். பாலியஸ்டர் துணி மாஸ்க் அணியும் போது வியர்வையால் ஈரப்பதம் வந்தாலும் இவை எளிதில் ஆவியாகிவிடுவதால் கிருமிகள் பாதிப்பு இருக்காது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முகக்கவசத்தை காட்டிலும் இவை சற்று தடிமனாக இருக்கிறது. ஆனால் அதனால் காற்று உள்ளே செல்வதும் சுவாசமும் சிரமம் என்று சொல்ல முடியாது. காற்று உள்வாங்கி எளிதாக கிடைக்கிறது. இதற்கான சோதனையும் செய்து பார்க்கப்பட்டது. தற்போது இதன் தடிமன் அளவை குறைத்து வடிகட்டுதல் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் இன்னும் எளிதாக பாதுகாப்பாக முகக்கவசத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதும்.
இந்த முகக்கவசத்தை துணிகளை போன்று சோப்பு கொண்டு சுத்தம் செய்து சூரிய ஒளியில் வைத்து உலர்த்தி பயன்படுத்தலாம். தற்போது சுகாதாரத்துறையினர் பயன்படுத்த இந்த முகக்கவசம் வழங்கியுள்ளது. முகக்கவசம் பற்றாக்குறையில் இருந்தாலும் தற்போது உற்பத்தி திறன் குறைவாக இருப்பதால் எங்களுடன் இணைந்து தயரிக்க வருபவர்களுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்கிறார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சரப்பா.
எல்லாம் சரி எப்போது எங்களுக்கு கிடைக்கும் என்கிறீர்களா, அனைத்து கட்ட சோதனைகளையும் முடித்து அரசு ஒப்புதலுடன் விரைவில் கடைகளில் கிடைக்கும். அதுவரை பொறுத்திருப்போம். பாதுகாப்பாக இருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக