Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஏப்ரல், 2020

கோவில் யானை

ஒரு ஊரில் இருந்த ஒரு கோவிலின் அருகே ஒருவர் ஒரு தையல் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அந்த தையல் கடைக்கு அருகில் இருந்த அந்த கோவிலில் கோவில் யானை ஒன்று இருந்தது. அந்த யானை தினமும் குளிக்கச் செல்லும் முன் தையற்கடையின் முன்பாக வந்து நிற்கும். தையல் கடைக்காரரும் அந்த யானை உண்பதற்கு பழங்கள், தேங்காய் முதலியவற்றை கொடுப்பார்.

தையல் கடைக்காரர் கொடுத்தப் பழங்களை சாப்பிட்டு முடித்ததும் யானை அந்த தையல் கடைக்காரருக்கு ஆசி வழங்கிவிட்டு குளிக்க செல்லும். மேலும், அந்த யானை, அந்த தையல் கடைக்காரருக்கு பல வேளைகளில் உதவியும் செய்து வந்தது. ஒரு நாள் அந்த தையற்கடைக்காரருக்கு மனதில் தீய எண்ணம் தோன்றியது. ஒரு நாள் வழக்கம்போல் அந்த கோவில் யானை அந்த தையல் கடைக்காரரின் கடை முன்பு வந்து நின்றது. அந்த தையல் கடைக்காரர் யானைக்கு சாப்பிட பழங்கள் எதையும் கொடுக்காமல், தான் துணி தைப்பதற்கு வைத்திருந்த ஊசியால் யானையின் தும்பிக்கையில் நறுக்கென்று குத்திவிட்டார்.

யானையும், தையற்காரனின் செய்கையை மனதில் பதிய வைத்துக் கொண்டு குளிக்கச் சென்றது. அது ஆற்றில் குளித்து முடித்த பின்பு சேறு நிரம்பிய பகுதிக்குச் சென்று, சேற்றை தனது தும்பிக்கையில் நன்றாக உறிஞ்சி வைத்துக் கொண்டது. குளித்துவிட்டு யானை திரும்பி வரும் வழியில் அந்த தையற்கடைக்காரரின் முன்பாக வந்து நின்றது. அந்த தையற்கடைக்காரரோ துணிகளைத் தைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அது பண்டிகைக் காலமாக இருந்ததால் அவர் நிறைய புதிய துணிகளைக் கடைக்குள் வைத்திருந்தான். யானை தன் கடையின் முன்பு வந்து நிற்பது கூடத் தெரியாமல் துணிகளை மும்மரமாகத் தைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது தையற்காரர் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் யானை தனது தும்பிக்கையிலுள்ள சேற்றை, கடையிலுள்ள துணிகளில் எல்லாம் வாரி இறைத்து விட்டு, அங்கிருந்து யானை சென்று விட்டது. தையல்காரரின் துணிகள் எல்லாம் சேறு பட்டு வீணாகிப் போனது. உண்ண பழங்கள் தருவான் என்று நம்பி வந்த யானைக்கு தான் செய்த தவறுக்கு தண்டனை தான் இது என்று தையற்கடைக்காரர் புரிந்து கொண்டார்.

மேலும் யானை நினைத்திருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்திருக்க முடியும். அப்படி செய்யாமல் நான் செய்த தவறுக்கு தண்டனை அளித்து விட்டு செல்லும் யானையின் நல்ல மனதைப் புரிந்து கொண்டார். மேலும், அந்த யானையிடம் இருந்து ஒருவருக்கு நாம் நன்மை செய்தால், அவரிடம் இருந்து நன்மைக் கிடைக்கும் என்றும், ஒருவருக்கு தீமை செய்தால் தீமைதான் விளையும் என்பதையும் புரிந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தான் யானைக்கு செய்த செயலை எண்ணி வெட்கி தலைக் குனிந்தார்.

தத்துவம் :

வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப, நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை தான் கிடைக்கும். அதனால் எல்லோருக்கும் நன்மை செய்து நலமுடன் வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக