Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் படை ஏற்பாடுகள்..!

பாண்டவர்கள் களப்பலியை முடித்துவிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். அடுத்தபடியாக போரை தொடர வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது. அதற்காக மறுநாள் அரசர்களும், படைகளும் தங்கியிருந்த இடத்தில் பாண்டவர்களும், கிருஷ்ணரும் மற்ற மன்னர்களும் கூடிப் படைகளைப் பிரித்து அணிவகுப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தனர். 

பாண்டவர்களும், கௌரவர்களும் போர் புரிய போர்களமாகக் குருச்சேத்திரம் என்ற மிகப்பெரிய போர்களத்தை தேர்ந்தெடுத்தனர். பின்பு நால்வகைப் படைகளையும் போருக்கேற்ற முறையில் வரிசையாக அணிவகுத்துப் போர்களத்துக்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை கிருஷ்ணர், படைத்தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த சுவேதனிடம் ஒப்படைத்தார்.

முன்னணி தேர்ப்படையினராக சுவேதன், பீமன், அர்ஜூனன், அபிமன்யு ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டனர். அடுத்து பெருந்தேர்களில் இருந்து போர் புரியக்கூடியவர்களாக சிகண்டி, சாத்துகி, விராடன், தர்மன் ஆகியவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு அடுத்த வரிசையில் நின்று போர் புரிவதற்கு நகுலன், சகாதேவன், கடோத்கஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இவ்வாறு போர் ஏற்பாடுகளும் அணிவகுப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அப்பொழுது அங்கு வந்த பலராமர், நான் இருவர் பக்கமும் சேரப் போவதில்லை. அதனால் இந்தப் போர் முடியும் வரை நானும் விதுரனோடு, தீர்த்த யாத்திரை சென்று வரத் தீர்மானித்திருக்கிறேன் என்று கூறிவிட்டு விதுரனுடன் புறப்பட்டார்.

தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என்று நான்கு வகையாகப் பிரித்து அணி வகுக்கப்பட்ட பாண்டவர்களின் சேனை ஏழு அக்குரோணிகளாக இருந்தது. அணிவகுப்பு, வரிசை முறைப் பிரிவுகள், எல்லாம் முடிந்த பின்பு சுவேதன் படைகளை ஆராவாரத்துடன் கடல் பெருகி புரண்டு செல்வது போல பேரோசையுடன் போர்க்களம் நோக்கி நடத்திச் சென்றான்.

முரசொலி, சங்குகளின் ஒலி என்று படைவீரர்களிடமிருந்து கிளம்பிய வாத்தியங்களின் ஓசை விண்வெளியை அதிரச் செய்தது. அந்தப் படையின் பிராணன் கிருஷ்ணர்! மார்பு தர்மன்! முகம் சுவேதன்! அர்ஜூனனும், பீமனும் தோள்கள்! நகுலனும் சகாதேவனும் கண்கள்! படையாக வரும் மற்ற அரசர்கள் அனைவரும் அந்தப் உருவத்தின் மற்ற உறுப்புகளாக விளங்கினர். யானைகளும், குதிரைகளும், தேர்களும் சேர்ந்த பாண்டவர்களின் படை ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

ஆனால் துரியோதனன் விதுரரும், பலராமரும் போரில் துணையாக இல்லாமல் தீர்த்த யாத்திரை சென்றதால் ஏமாற்றம் அடைந்தான். பிறகு களப்பலிக்கு சம்மதித்திருந்த அரவானை முதல்நாளே பாண்டவர்கள் களப்பலி கொடுத்துவிட்டதால் இரண்டாவதாகவும் ஏமாற்றம் அடைந்தான். துரியோதனன் ஏமாற்றம் தாங்க முடியாமல் பீஷ்மரை நோக்கி, இந்தப் பாண்டவர்கள் களப்பலிக்காக அரவானை நமக்கு முன்பே வஞ்சகமாகப் பலி கொடுத்து விட்டார்கள்! இதில் நாம் ஏமாற்றம் அடைந்து விட்டோம். இனி நாம் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். பிறகு பீஷ்மரிடம் நம்முடைய படைகளைத் தக்க முறையில் அணிவகுத்துப் புறப்படச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டான்.

பீஷ்மரும், உடனே படைகளை முறைப்படி அணிவகுத்து நிறுத்தத் தொடங்கினார். முன்னணித் தேர்ப்படையினராக, பீஷ்மர், துரோணர், அசுவத்தாமன், பூரிசிரவா ஆகியோர் நின்றனர். அடுத்த வரிசையில் சோமவரதத்தன், பகதத்தன், துன்மருஷணன் ஆகியவர்கள் நின்றனர். அடுத்து கிருதவன்மனும், கிருடனும், சகுனியும் நின்றனர். இவ்வாறு பீஷ்மர் படைகளை அணிவகுத்துக் கொண்டிருந்தபோது கர்ணன், தன்னையும் தன்னுடைய வீரத்தையும் மதித்து முன்னணித் தேர்ப்படையில் ஒருவராக பீஷ்மர் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்ப்பார்த்தான். ஆனால் பீஷ்மர் கடைசியில் மிகவும் பின்னணிப் படைகளில் கர்ணனை முதல்வனாக நியமிக்க கட்டளை பிறப்பித்தார்.

இதைக் கேட்டு கர்ணன் மிகவும் கோபம் கொண்டான். துரியோதனன் கர்ணனை சமாதானப்படுத்தினான். அதன் பின் துரியோதனனின் படைகள் போருக்கு ஆயத்தமாக அணிவகுத்து நின்றன. அப்பொழுது பீஷ்மர் போர் விதிமுறைகளை பற்றிக் கூறினார்.

கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.

போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.

மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.

போரிடாத வீரனை தாக்கக் கூடாது.

கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.

போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.

மகாரதர்கள், மகாரதர்களுடனும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் மற்ற படைகளும் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.

போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

பீஷ்மரின் இந்த போர் விதிகளை பாண்டவர்களும், கௌரவர்களும் ஏற்றுக் கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக