மூக்கில் சளி வரும்போதே அதை சிந்திவிடவேண்டும். சாதாரணமாக சளி பிடித்தால் அவை விரைவில் சரியாகிவிடும். ஆனால் மார்பு சளி அதிகமாகும் போது அதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இருமல், மூக்கடைப்பு சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம் அடர்ந்த மஞ்சள் அல்லது வெளிர் பச்சையாக வரும் போது நெஞ்சு சளி அதிகம் இருப்பதை உணரலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் இவை அதிகமாக காணப்படுகிறது.
கைக்குழந்தைகளும் நெஞ்சு சளியால் அவதிப்படுவதுண்டு. மருந்து மாத்திரைகளில் இவை தற்காலிகமாக குணமடைந்தாலும் அவை முழுதும் கரைந்து வெளியேறாத வரை அவ்வபோது மார்பு சளியை உண்டாக்கவே செய்யும். பாட்டி கால கைவைத்தியத்தில் இதை படிப்படியாக கரைத்து வெளியேற்றலாம்.
தேங்காயெண்ணெய் + கற்பூரம்
பெரும்பாலானவர்கள் இந்த வைத்தியம் செய்வது தான். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை பயன்படுத்தலாம்.
தேவை :
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சிறு வில்லை கொண்ட கற்பூர கட்டிகள் - 2
சிறிய வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடேறியது அதில் கற்பூர வில்லைகள் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு ஆறியதும் முகம், நெற்று, மூக்கு, மூக்கை சுற்று. முதுகுப்பகுதி, கழுத்திலிருந்து மார்பு வரை என்று இலேசாக தடவுங்கள். கைக்குழந்தைகளுக்கு தடவும் போது அதிக எண்ணெய் வேண்டாம். அதிக சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் 4 ல் இருந்து 6 முறை இதை தடவி வந்தால் நெஞ்சுக்கூட்டில் இருக்கும் சளி எவ்வளவு கெட்டியாக இருந்தாலும் கரைந்து வெளியேறிவிடும்.
ஒரு நாளில் இந்த மேஜிக் நடக்காது. ஒரு வாரம் வரையாவது இதை தொடர்ந்து செய்தால் சளி வெளியேறுவதை பார்க்கலாம். உடல் உஷ்ணத்தை சற்று கூட்டும் தன்மை கொண்டது என்பதால் இதை பயன்படுத்தும் போது அவ்வபோது மிதமான சூட்டில் வெந்நீர் குடித்துவரவேண்டும்.
வெற்றிலை + நல்லெண்ணெய்
சிறுகுழந்தைகளுக்கு கைகண்ட கைமருந்து இது. பக்கவிளைவுகள் இல்லாததும் கூட. மண் அகல் விளக்கை வாங்கி நல்லெண்ணெய் கொண்டு வாழைத்திரி இட்டு விளக்கேற்ற வேண்டும். பிறகு வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அதை விளக்கில் காண்பிக்க வேண்டும். வெற்றிலை சூடேறும் போது பொறுக்கும் சூட்டில் மார்பில் பற்று போட வேண்டும். கருப்பு வெற்றிலையை பயன்படுத்த வேண்டும்.
கைக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நான்கு வெற்றிலை வரை பற்று போடலாம். பெரியவர்களுக்கு பொறுக்கும் சூட்டில் வேண்டிய அளவு மார்பை சுற்றி போட வேண்டும். இயன்றால் நெற்றி மற்றும் மூக்கு பகுதியை மூடும் படியும் போடலாம்.
வெற்றிலை மிக இறுக்கமான சளியையும் கரைத்து வெளியேற்றக்கூடியது. மேலும் இதில் நல்லெண்ணெய் சேர்க்கும் போது பலனும் இரட்டிப்பாக கிடைக்கும். ஆனால் அதிகமாக மார்பு சளி இருக்கும் போது உடனடியாக இவை பலன் தராது. மிக பொறுமையாக ஆனால் சளியை முற்றிலும் கரைத்து வெளியேற்றும்.
நெஞ்சு சளிக்கு நல் மருந்தாக இருக்கும் ஆடாதோடை இலை, வேர் இரண்டுமே. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாக கிடைக்கும். சிறுவர்களுக்கு தேனில் கால் டீஸ்பூன் அளவு பொடியை குழைத்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கும் தேனில் குழைத்து நாக்கில் தடவலாம் பெரியவர்கள் கஷாயம் போன்று நீரை கொதிக்க வைத்து இலை அல்லது இதன் வேர் பொடியை கலந்து குடிக்கலாம்.
சிறப்பான தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் யூகலிப்டஸ் இலை - 10, ஆடாதோடை இலை கைப்பிடி சேர்த்து அரைத்து இரவு படுக்கும் போது பற்று போட்டு வரவேண்டும். அப்படி செய்து வந்தால் மறுநாள் சளி கரைந்து மூக்கில் வடிவதை காணலாம். பக்கவிளைவில்லாத எளிய மருத்துவம் இது.
நெஞ்சு சளி கரைய குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படும். இவை விரைவில் சரியாக உள்ளுக்குள் எடுத்துகொள்ளும் உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். பூண்டு பால் சளியையும் கரைக்கும் தன்மை கொண்டது. ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டவர்கள் அதிக சளி காய்ச்சலுக்கு உள்ளாகமல் இருந்தது தெரியவந்தது.
துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி மூன்று இலைகளையும் தலா சிறிது எடுத்து கொதிக்க வைத்து தேன் சேர்த்து குடிக்க வேண்டும். பெரியவர்களுக்கு தரும் போது மிளகு சேர்த்துகொள்ளலாம். பிள்ளைகளுக்கு பால் தரும் போது சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து கொடுக்கலாம். இப்படி உள்ளுக்கு கொடுக்க வேண்டியவை தனியாக பார்க்கலாம்.
கை வைத்தியத்தோடு உள்ளுக்குள் இதையும் எடுத்துகொள்ளும் போது மார்புசளி எளிதில் கரைந்து வெளியேறும். இதை கண்கூடாக பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக