Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

உதட்டு சுருக்கத்தை போக்கி பளபள உதட்டை பெற என்ன செய்யணும்?


லிப்ஸ்டிக் இல்லாமல் இருந்தாலே உதடுகள் களையிழந்து தான் தெரியும் என்றுதான் பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால்..
 
முகத்தில் கண்கள், கண்களை சுற்றி இருக்கும் இடங்களில் மென்மை, உதடு என அனைத்துமே அழகாய் இருந்தால் தான் முகத்தில் அழகு அதிகரிக்கும். தினமும் உதட்டை அலங்கரிக்கும் லிப்ஸ்டிக் வகையறாக்கள் எல்லாமே உதட்டை பளிச்சென்று பளீரென்று காட்டும் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு உதட்டில் எதையும் பயன்படுத்தாவிட்டால் பிறகு உதட்டில் வெடிப்புகள் உண்டாகி உதட்டின் அழகை கெடுத்துவிடக்கூடும். அதனால் இயற்கையாகவே உதட்டை எப்படி பராமரிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்

தேன்

தேன் வறட்சியிலிருந்து எப்போதும் மீட்கும் குணத்தை கொண்டவை. சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் மென்மையாகவும் வைத்திருக்க தேனை பயன்படுத்துவதுண்டு. குறிப்பாக சருமத்தை காட்டிலும் மென்மையான உதட்டை வறட்சியிலிருந்து மீட்க தேனால் மட்டுமே முடியும்.

சுத்தமான தேனை தினமும் உதட்டில் தடவி விடுங்கள். இதனால் உதட்டின் வறட்சியை போக்கி உதட்டில் ஈரப்பதம் இருக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது லிப்ஸ்டிக்கால் உண்டாகும் கருமையும் நீங்கும். உதட்டில் ஒரு மினுமினுப்பை காணவும் தொடங்குவீர்கள்​.

நெய் அல்லது வெண்ணெய்

பார்க்கவே வழவழவென்று இருக்கும் இந்த பொருள் உதட்டையும் வழவழப்பாக வைத்திருக்க நிச்சயம் உதவும். உதட்டில் எப்போதும் வறட்சியில்லாமல் இருக்கவும் வெடிப்புகள் இல்லாமல் செய்யவும் வெண்ணெய் தடவலாம்.

உதடு மென்மையாக இருக்கவும். வசீகரமான உதட்டை பெறவும் தினமும் தூங்குவதற்கு முன்பு நெய் அல்லது வெண்ணெய் தடவி தூங்குங்கள். வெண்ணெய் அல்லது நெய் தடவுவதற்கு முன்பு உதட்டில் லிப்ஸ்டிக் இல்லாமல் அவை இருந்த தடம் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தேங்காயெண்ணெய்

வீட்டில் நிச்சயம் தேங்காய் எண்ணெய் இருக்கும். அதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் தேங்காயெண்ணெயை உதட்டின் மீது தடவி வரலாம். சருமத்துக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது போன்று தேங்காயெண்ணெய் இயற்கையாகவே உதட்டுக்கு சிறந்த மாய்சுரைசர் என்று சொல்லலாம்.

சுத்தமான தேங்காயெண்ணெயை தினமும் 3 லிருந்து 4 முறை வரை உதட்டின் மீது பயன்படுத்துங்கள். இதனால் உதடு வெடிப்பையும் சந்திக்காது, வறட்சியையும் சந்திக்காது. எப்போதும் லிப் பாம் போடாமலே பளபளவென்று இருக்கும். எண்ணெய் உள்ளுக்குள் சென்றாலும் எதுவும் ஆகாது. ஆனால் எண்ணெய் சுத்தமானதாக இருக்கவேண்டும்.

ரோஸ்வாட்டர்

முகத்துக்கு பேக் போடும் போது இதை பயன்படுத்துவதுண்டு. முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க க்ளென்சிங் செய்ய இதை பயன்படுத்துவதுண்டு. நீண்டகாலம் லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு உதட்டில் கருப்பு நிறம் படர்ந்திருக்கும். சிலர் அடர்ந்த நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தி இருப்பார்கள். அவர்கள் உதட்டில் கருமை நிற கோடுகளும், உதட்டில் சுருக்கங்களு சேர்ந்து தனியாக தெரியும். இதை சரி செய்யாத நிலையில் உதடு மேக் அப் போடாமல் பார்க்கவே நன்றாக இருக்காது.

இவர்கள் ரோஸ் வாட்டரில் சுத்தமான காட்டனை நனைத்து உதட்டின் மீது தடவி வர வேண்டும். அதிகப்படியான சுருக்கம் இருந்தால் அதில் சமளவு கிளிசரின் கலந்து உதட்டுக்கு தடவினால் விரைவில் உதட்டை இயற்கையாகவே அழகாக்கமுடியும்.

உதட்டில் இருக்கும் கருமையோடு படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்ற சர்க்கரையில் பாதாம் ஆயிலை கலந்து அதை உதட்டில் மென்மையாக தேய்த்துவர வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி செய்துவந்தால் போதும். உதடு வறட்சியில்லாமல் இருக்கும்.

மேற்கண்ட எல்லாமே உதட்டை இயற்கையாகவே அழகுபடுத்தும் பொருள்கள். இராசயனங்கள் கலக்காமல் லிப்ஸ்டிக் எதுவுமே இல்லை. இவை உதட்டுக்குள் போகும் போது அவை கெடுதலையே உண்டாக்கும். ஆனால் இங்கு கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களும் உதட்டுக்குள் போனாலும் அவை பாதிப்பை தராது. வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் லிப்ஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இதை செய்தால் உதட்டின் மென்மையும் பளபளப்பும் வெடிப்பில்லாத அழகையும் விரைவில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக