Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஏப்ரல், 2020

இரண்டாம் நாள் போர் !

போர்க்களத்தில் பீஷ்மருக்கும், பீமனுக்கும் போர் நடந்தது. இருவருக்கும் நடந்த போரில் சுவேதன் போலவே பீமனும் பீஷ்மரின் வில்லை ஒடித்து, அவர் நின்ற தேரைச் சிதைத்து விட்டான். பிறகு கலிங்க வேந்தனும் மற்ற படைவீரர்களும் பீஷ்மருக்கு உதவிபுரிய வந்தார்கள். 

பீமன், கலிங்க வேந்தன் திரும்பி வருவதைப் பார்த்தவுடன் பீஷ்மரிடம் போர் செய்வதை நிறுத்திவிட்டு கலிங்க வேந்தனுடன் போரிட்டான். கலிங்க வேந்தன் படையை முற்றிலுமாக அழித்த பிறகுதான் பீமன், பீஷ்மரிடம் போர் புரிய ஆரம்பித்தான். 

பீமனுக்கு துணையாக அபிமன்யுவும் பீஷ்மரை எதிர்க்க ஆரம்பித்தான். இதைக் கண்ட துரியோதனன் பல வீரர்களை ஒன்று திரட்டி பீஷ்மருக்கு துணையாக அனுப்பினான். பீஷ்மருக்கு துணையாக இருந்த வீரர்கள் அனைவரும் பீமனையும், அபிமன்யுவையும் வளைத்துக் கொண்டார்கள்.

பீமனும், அபிமன்யுவும் ஆபத்தில் இருப்பதை அறிந்த அர்ஜூனன் அவர்களுக்கு உதவுவதற்காக வில்லோடு வந்தான். திடீரென்று அர்ஜூனன் வந்ததும் பீஷ்மரும், அவரது படைகளும் நிலை தடுமாறி போயின. அர்ஜூனன், விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.

சூரியன் மறைவுக்கு பின்பு இரண்டாம் நாள் போர் முடிவு பெற்றது. இரண்டாம் நாள் போரில் அதிகமான நஷ்டமும், தோல்வியும் தன் பக்கம்தான் என்று உணர்ந்த துரியோதனன் வருத்தம் அடைந்தான்.

மூன்றாவது நாள் காலையில் போர் தொடங்கும்போது இருசாராருமே தத்தம் படைகளைப் புது வியூகங்களில் அணிவகுத்து நிறுத்தினார்கள். கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் கௌரவ சேனைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. 

துஷ்டத்துய்ம்மன் கண்ணன் கூறிய ஆலோசனைப்படி பாண்டவ சேனையைப் பிறைச் சந்திரன் வடிவில் அணிவகுத்து நிறுத்தினான். முதல் நாள் விடுபட்ட இடத்திலிருந்து போர் தொடங்கியது. அர்ஜூனனையும், அபிமன்யுவையும் எதிர்த்து பீஷ்மர், துரோணர் முதலியவர்கள் வளைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். 

பீமனை, கௌரவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். சகுனி, கௌரவர்களுக்கு துணையாக இருந்தான். இருபடைகளுக்கிடையே போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. பீமனின் மகன் கடோத்கஜன் போரில் பாண்டவர்களுக்கு துணையாக நின்றான்.

போரில் துரியோதனன் மேல் பாய்ந்த அம்புகள் கவசத்தை பிளந்து அவன் மார்பில் துளைத்தது. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும், வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் போர்களத்தில் மயக்கமடைந்து விழுந்தான். 

அபிமன்யு துரியோதனனின் தேரோட்டியை அம்புகள் எய்து கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தான். துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி பீஷ்மருக்கு படைவீரர்கள் தெரிவித்தனர். பீஷ்மர், உடனே துரியோதனனின் உடலைத் தனியாக தேரின் மேல் வைத்து போர்க்களத்தின் ஓரமாக கொண்டு வந்து சிகிச்சை அளித்து துரியோதனனுக்கு சுய நினைவை வரவழைத்தார்.

துரியோதனன் தெளிவு பெற்ற பின்பு அவனை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்பி விட்டு பீஷ்மர் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மீண்டும் பீமனிடம் போரைத் தொடர்ந்தார். பீஷ்மர் கோபத்துடன் செய்த விற்போரில் அர்ஜூனன், பீமன் முதலியவர்கள் அவரை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினார்கள். 

பீஷ்மரை எதிர்த்துப் போர் செய்வதை மறந்து அர்ஜூனன் பீஷ்மரை பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். அர்ஜூனனை கண்டு கிருஷ்ணர் சினம் கொண்டார். உடனே அர்ஜூனனின் தேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். கிருஷ்ணர் கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரின் தேரை நோக்கி பாய்ந்தார்.

கிருஷ்ணர், பீஷ்மரை தேரின் மேல் இருந்து கீழே தள்ளிக் கழுத்தில் சக்கராயுதத்தால் அறுத்துத் துளைக்கத் தொடங்கினார். அந்த சமயம் கிருஷ்ணர் கைகளை பிடித்து அர்ஜூனன் தடுத்து நிறுத்தினான். அனைத்தும் அறிந்த உங்களுக்கு இத்தகைய கோபம் எதற்கு என்று கேட்டான். பீஷ்மரும் கிருஷ்ணரை நோக்கி வணங்கினார். 

பலவாறு கிருஷ்ணரை புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினார். நீண்ட நேர வேண்டுகோளுக்குப் பிறகு கிருஷ்ணர் பீஷ்மர் மேல் இரக்கம் வைத்து சக்கராயுதத்தை அவர் கழுத்திலிருந்து எடுத்தார். அர்ஜூனன், கிருஷ்ணரிடம் நீங்கள் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். என் கடமையை நான் செய்கிறேன்! என்னை எதிர்ப்பவர்கள் இன்று மடிந்தார்கள்! என்று கோபத்துடன் கூறினான். கிருஷ்ணரும், தேரில் ஏறிச் சென்று தேரைச் செலுத்தினார். அர்ஜூனன் தேரில் ஏறி நின்று கடுமையான போரை மேற்கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக