Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

எல்லா இடத்திலும் புத்திசாலித்தனம் அவசியம் !

ஒரு செயலில் ஈடுபடும் முன் புத்திசாலித்தனம் அவசியம். புத்திசாலித்தனம் இருந்தால் எல்லா செயலிலும் வெற்றி பெறமுடியும். இங்கு ஒரு புறா இரை தேட மேற்கொள்ளும் புத்திசாலித்தனத்தை பற்றி பார்ப்போம்.

ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய்புறா உணவு கொண்டு வந்து கொடுக்கும். நாட்கள் கடந்து சென்றது. இரண்டு புறாக்களும் பருவ வயதினை அடைந்தது. தன் குஞ்சுகளின் திறமையை பரிசோதிக்க நினைத்த தாய்புறா, இரண்டு புறாக்களையும் அழைத்து, உங்களுக்கு இரை தேடிச் செல்லும் அளவுக்கு இறகுகள் வளர்ந்துவிட்டது. இனி நீங்கள் தனியாக சென்று இரையை தேடி கொண்டு வரவேண்டும்.

நீங்கள் தேடிச் செல்லும் இரகசியத்தை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளக்கூடாது என்றது. தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புறாக்களும் இரையை தேட ஆரம்பித்தன. இரண்டில் ஒரு புறா தேடுவதற்கு முன் சேற்றில் விழுந்து தன்னை அழுக்காக்கி கொண்டபின் இரை தேடச் செல்லும். போதிய அளவு இரை தேடிய பின் ஆற்றில் சேற்றை கழுவிக் கொண்டு இருப்பிடத்திற்கு செல்லும்.

இதைப்பார்த்த மற்றொரு புறா, நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்கு கேவலமாக இருக்கிறது. உன்னை பார்க்கும் மனிதர்கள் உன்னை ஒதுக்கி விடுகின்றார்கள், என்னை பார்க்கும் மனிதர்கள் என் அழகை ரசிக்கின்றார்கள். நீ முட்டாளைப்போல நடந்துகொள்ளாதே என தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். இரண்டு வாரங்கள் கழிந்தது. தாய்புறா தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து சோதனை செய்தது. அதில் ஒரு புறா நன்றாக கொழுத்துப்போய் இருந்தது. மற்றொரு புறா எலும்பும் தோலுமாய் இருந்தது.

உடனே தாய்புறா, கொழுத்துப்போய் இருந்த புறாவை அழைத்து, நீ இவ்வளவு கொழுத்துப்போய் நன்றாக இருக்கின்றாய். ஆனால் உனது சகோதரன் மட்டும் ஏன் இப்படி எலும்பும் தோலுமாய் இருக்கிறான் எனக் கேட்டது. அதற்கு அந்த புறா, அம்மா! நான் தினமும் காலையில் இரை தேடுவதற்கு சேற்றில் குளித்துக்கொண்டு இரைதேடச் செல்வேன். நான் அழுக்காக இருப்பதால் மனிதர்கள் யாரும் என்னை கண்டு கொள்ளமாட்டார்கள். நான் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் எனது வயிறு நிறைய இரைகளை பெற்றுக்கொள்வேன்.

ஆனால், அண்ணன் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அவனால் நிம்மதியாக இரை தேட முடிவதில்லை. மனிதர்கள் அவனது அழகை கண்டு, அவனை பிடிப்பதற்கு துரத்துகின்றார்கள். அதனால் அவன் அதிக இரை தேட முடிவதில்லை. குறை வயிற்றோடு தினமும் இருப்பிடத்திற்கு திரும்பி விடுவான். இதனால்தான் அவன் பசியால் மெலிந்து போய் உள்ளான் எனக் கூறியது.

இதைக் கேட்ட தாய்புறா, தன் குஞ்சின் புத்திக்கூர்மையினை நினைத்து மெய்சிலிர்த்தது. மற்றொரு புறாவை அழைத்து, உனது தம்பி இரை தேட புத்திக்கூர்மையை பயன்படுத்தி இருக்கிறான். அதனால் இனி நீ உன் தம்பி எவ்வாறு நடந்துகொள்கின்றானோ அவ்வாறே நீயும் நடந்துகொள். அது உன்னையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும். நீயும் குறைவில்லாமல் இரை தேடலாம் என அறிவுரை கூறியது.

தத்துவம் :

நாம் எவ்வளவுதான் அழகு, அறிவோடு இருந்தாலும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்போது தான் வாழ்வில் முன்னேற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக