ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்த எறும்பு கூட்டங்களில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் இருவரும் இரை தேடிச் சென்றன. எங்கே தேடியும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த கொய்யா மரத்தைப் பார்த்தன. அதில் நிறைய கொய்யாக்கனிகள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.
இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் கொய்யா மரத்தில் ஏறி ஒரு பழுத்த கொய்யாக்கனியின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. அப்போது திடீரென ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அந்த காற்றில் கொய்யாக்கனி குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் அந்த கொய்யாக்கனியுடன் சேர்ந்து தண்ணீரில் தத்தளித்தன.
செவ்வெறும்பு, கட்டெறும்பிடம் நண்பா! நாம் இருவரும் இப்படி வந்து தண்ணீரில் விழுந்து விட்டோமே. இப்பொழுது என்ன செய்வது என்று கேட்டது. அதற்கு கட்டெறும்பு நிச்சயம் நமக்கு ஏதாவது உதவி கிடைக்கும். நமக்கு உதவி கிடைக்கும் வரை நாம் நீந்திக் கொண்டே இருப்போம் என்றது.
வெகு நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. செவ்வெறும்பு கட்டெறும்பிடம், நண்பா! இவ்வளவு நேரம் நான் நீந்தியதில் கை, கால்கள் எல்லாம் சக்தி இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. நான் தண்ணீரில் மூழ்கி இறக்கத்தான் போகிறேன் என்றது செவ்வெறும்பு.
இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்சம் நேரம் தண்ணீரில் போராடு நிச்சயம் நமக்கு ஏதாவது உதவி கிடைக்கும் என்றது கட்டெறும்பு. இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நாம் இறக்கத்தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி தன் உயிரைவிட்டது செவ்வெறும்பு.
ஆனால் கட்டெறும்பு நிச்சயம் ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது. அப்போது அந்த வழியே சென்ற எறும்புகள் கூட்டம், இந்த குளத்தில் விழுந்து மாட்டிக் கொண்டாயா? இதற்கு முன் இந்த குளத்தில் விழுந்த யாருமே இதுவரை பிழைத்தது இல்லை என்று சொல்லிவிட்டு சென்றன.
எறும்புகள் கூட்டம் சொன்னதைக் கேட்ட கட்டெறும்பு, இனி நாம் பிழைக்கப்போவதில்லை என்று தன்மேல் இருந்த நம்பிக்கையை இழந்தது. உடனே சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரைவிட்டது. இறந்த கட்டெறும்பு மேல் உலகம் சென்றவுடன் கடவுளை பார்த்து, கடவுளே என் உயிரை ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க? என்று கேட்டது. அதற்கு கடவுள் நான் உன் உயிரை எடுக்கவில்லை. நீயே தான் உன் உயிரைவிட்டாய் என்றார். என்ன சொல்லுறீங்க. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றது கட்டெறும்பு.
கடவுள்! கட்டெறுப்பைப் பார்த்து, நீ குளத்தில் விழுந்தபோது அடுத்தவர்கள் சொன்னார்கள் என்பதற்காக நீ உன்மேல் உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போராடுவதை விட்டுவிட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டாய். நீ மட்டும் அன்று இன்னும் கொஞ்சம் நேரம் போராடிருந்தால் நிச்சயம் நான் ஏதாவது ஒரு வகையில் உனக்கு உதவி செய்து உன்னைக் காப்பாற்றியிருப்பேன் என்றார். கடவுள் இறுதியாக கட்டெறும்பிடம், பொதுவாகவே வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவன் எல்லாவற்றையும் இழந்து விடுவான் என்றார்.
தத்துவம் :
எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடக் கூடாது. நம்முடைய இலக்கை அடையும்வரை நம்பிக்கையோடு முயன்றால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நம்பிக்கையை இழந்தால் தோல்வி தான் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக