நாட்டில்
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், லாக்டவுன் மே 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்களது வேலைகளை இழந்து வீட்டினுள்
முடங்கிக் கிடக்கின்றனர்.
இதெல்லாம்
ஒரு புறம் எனில், மறுபுறம் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் தவித்து
வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக, ரிசர்வ்
வங்கி வங்கிகளுக்கு 3 மாத இஎம்ஐ (EMI) அவகாசம் கொடுக்க கடந்த மார்ச் இறுதியில்
அனுமதி கொடுத்தது.
இதன்
காரணமாக இந்த சலுகை மக்கள் பெற்று வந்த நிலையில் மே 31க்கு பிறகு இதனை கட்ட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்ற
நிலையே நீடித்து வருகிறது.
3 மாத இஎம்ஐக்கு கால அவகாசம்
ரிசர்வ்
வங்கி அறிவிப்பின் காரணமாக மூன்று மாதங்களுக்கு பொதுத்துறை வங்கிகளும், தனியார்
வங்கிகளும் இஎம்ஐ தாமதமாக செலுத்த அனுமதி கொடுத்தன. இது குறித்து கடந்த மார்ச் 27
அன்று அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், மார்ச் 1 முதல் தொடங்கி மே 31,2020 வரை இந்த
அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்
தான் முடங்கிக் கிடக்கின்றனர். அதிலும் சிவப்பு மண்டல பகுதிகளில், இன்னும்
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
3 மாத அவகாசம்
நீட்டிப்பு இருக்குமா?
ஆக இத்தோடு இந்த லாக்டவுன்
முடிவடைவதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் தான் எஸ்பிஐ ஆய்வறிக்கையானது, ரிசர்வ்
வங்கி அளித்த 3 மாத இஎம்ஐ அவகாசம் மே 31 -வுடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும்
நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அனுமதி
கிடைக்குமா?
இதே நிறுவனங்களும் தங்களது இஎம்ஐகளை
செலுத்த அவகாசம் எதிர்பார்க்கின்றன. ஆக இது இன்னும் 3 மாதங்களுக்கு
நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது செப்டம்பர் மாதத்தில்
செலுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை கடன்களை நிறுவனங்கள்
திரும்ப செலுத்தாவிட்டால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி அவை வாராக்கடன்களாக
வகைப்படுத்தப்படலாம். இதனால் நிறுவனங்களும் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடலாம்.
சலுகை
கிடைக்குமா?
முன்னதாக ரிசர்வ் வங்கி
இஎம்ஐக்களுக்கான சலுகையை மட்டுமே அறிவித்தது. ஆனால் வட்டியை செலுத்தியே ஆக
வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. ஆக இந்த அனுமதி கால அவகாசத்தினை மட்டும்
கொடுக்கும். ஆனால் வட்டி குறைப்பு சலுகைகள் ஏதும் இல்லை என்று மக்களிடையே
கூறப்பட்டு வந்தது. ஆக இந்த முறையாவது வட்டி சலுகைகள் அறிவிக்கப்படுமா? இல்லை
முன்பு அறிவித்ததைப் போல இஎம்ஐகளுக்காவது அவகாசம் நீட்டிக்கப்படுமா? என
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக