Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

திண்டுக்கல் அருகே சித்தர்களின் தவக்கூடம் - அரிகேசபர்வதம் எனும் கன்னிவாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அ/மி சோமலிங்க சுவாமி ஆலயம் மற்றும் தெத்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அ/ மி இராஜகாளியம்மன் ஆலயங்களை பற்றி ஒரு பதிவு:

அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தான் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன..

 கன்னிவாடி கிராமம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரம் அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது சோமலிங்கசுவாமி  கோவில். 

சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்திருப்பது இம்மலையின் தன்னிகரில்லா சிறப்பு ஆகும் .

 இம்மலையின் அற்புத திருக்காட்சியை கண்ட கோரக்க சித்தர் திருவாய் மலர்ந்து அரிகேசபர்வதம் என்று அழைக்க அதுவே இம்மலைக்கு பெயரானது .

மேலும் கோரக்கர் எழுதிய மலைவாகடம் எனும் நூலில் இருந்து இம்மலையில் அனேக சித்தர்கள் வாசம் செய்து இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது ..

மலைக்கோவில் , குகைக்கோவில் , தரைக்கோவில் எனும் மூன்று சிறப்பினையும் ஒருங்கே பெற்ற புண்ணிய பூமிதான் சோமலிங்கபுரம்..

இங்கு எழுந்தருளிய இறைவனின் திருநாமம் சோமலிங்கசுவாமி . பாறையை ஒட்டிய சன்னதியில் இறைவன் காட்சி தருகிறார். 

இக்கோவிலில் அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள் கிடையாது.

கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும் இருக்கிறார். 

விநாயகருக்கு எதிரே தந்தைக்குரிய நந்தி வாகனம் இருப்பது விசேஷமான அமைப்பு.

பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் நவபாசனத்தில் பழனி - முருகன் சிலையை உருவாக்கிய இடம் இது தான் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். 

போகர் நவபாசானத்தை அரைத்த உரல் இங்கு இன்றும் உள்ளது .

மேலும் போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் இங்கு வந்து கன்னிபூஜை செய்ததாக வரலாறு .. 

 சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். 

இதற்காக இங்கு வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார்.

 கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. 

பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது. வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர்.

மெய்கண்டார் தவம் செய்த தீப வடிவ குகை: 

சோமலிங்கசுவாமி சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம் செய்த தீப வடிவ குகை உள்ளது.
.
பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது.

இங்குதான் மெய்கண்ட சித்தரின் ஜீவ சமாதி உள்ளது என்றும் இவர் பரஞ்சோதி முனிவரின் சீடராக இருந்தவர் என்றும், கன்னிவாடி கிரமத்தில் வாழ்ந்து பல ஆன்மீக பணிகள், சித்த மருத்துவ சேவைகள் செய்து இதே பகுதியில் ஜீவ சமாதியானதாகவும் கூறப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர்.

மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கின்றது.

 திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச் செல்கிறார்கள். 

சஓமலிங்க சுவாமி ஆலயத்திற்கு எப்படி செல்வது?

திண்டுக்கல் மாவட்டம் - திண்டுகல்லில் இருந்து ஓட்டன்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தெலைவில் கன்னிவாடி எனும் கிராமம் அமைந்துள்ளது.

இங்கிருந்து ஒருவழி சாலையாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றால் சோமலிங்கபுரம் எனும் ஊரை அடையலாம் . 

சோமலிங்கசுவாமி திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 

ஆலய முகவரி:
அருள்மிகு சோமலிங்கசுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம், கன்னிவாடி – 624 705. திண்டுக்கல் மாவட்டம்.

கருவூரார் ஜாலத்திரட்டு எனும் நூலின் மூலம் இந்த சோமலிங்க சுவாமி ஆலயம் மற்றும் கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இராஜகாளியம்மன் கோவில்கள் பற்றி தெரிய வரும் ஒரு அரிய செய்தி:

போகரின் கன்னி பூசையும் , சாப நிவர்த்தியும் :

பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூசை செய்துள்ளார். 

அப்பொழுது, தன் தவ சக்தியால், ஒரு கல்லின் மீது கமண்டல நீரைத் தெளித்து, கல்லுக்கு உயிர் கொடுத்து, கன்னிவாடி...! என எழுப்பி அந்த

 கன்னிப்பெண்ணை பூசை செய்யத் துவங்கியுள்ளார்.

 பூசையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேசுவரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளித்ததுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். 

சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.

அவர் செய்த தவப்பயனால், அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருகப் பெருமானை வழிபட்டுள்ளார். 

முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்தார். 

அதன் பிறகு, போகர் மற்ற சித்தர்களுடன் நவபாசாணத்தால் ஆகிய முருகன் சிலையை வடித்துள்ளார். 

இராஜகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

இது வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் ஒருங்கே அமைந்த கோவில். 

பழமை வாய்ந்த இக்கோவிலில் 1971 ஆம் ஆண்டு இராஜகாளி போகர் பீடம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. 

தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு அத்தி மரத்தில் ஆன இராஜகாளியம்மன் மூலவர் சிலை நிறுவப்பட்டது. 

இறுதியாக 1984 ஆம் ஆண்டு கருவறையில் கல்லில் வடிக்கப்பட்ட இராஜகாளியம்மன் சிலை செங்கோலுடன் நிறுவப்பட்டது.

இராஜகாளியம்மன் பற்றி போகரின் ஓலைச்சுவடிக் குறிப்பு

 போகர் ஓலைச்சுவடிக் குறிப்புகளின் படி மதுராபதி தெய்வம் என்று அறியப்படும் மதுரை காளி, கோவலன் கொலையுண்டது கண்டு பாண்டியன் அரண்மனை நோக்கிச் சென்று அங்கே செங்கோல் ஏந்திய பாண்டியனைக் கண்டாள்.

 மதுராபதியாகிய இராஜகாளியம்மன் பாண்டியன் செங்கோலைத் தொட்டு நீதி கேட்ட போது, பாண்டிய மன்னன் மீனாட்சி சொக்கநாதர் ஆகிய தெய்வங்களின் பெயரை உச்சரித்து அபயம் கேட்டு கூக்குரலிட்டது கேட்டு மீனாட்சியும் சொக்கநாதரும் பாண்டியன் முன் தோன்றினர். 

இத்தெய்வங்கள் மதுரை காளியுடன் வாதிடத் தொடங்கினர்.

மதுரை காளி தன கடமையிலிருந்து எவ்வாறு தவறினாள் என்பது வாதம். 

மதுரை நகரின் காவல் தெய்வம், பாண்டிய வம்சத்தின் குல தெய்வம் ஆகிய இரண்டு பொறுப்புகளை ஏற்றுள்ள மதுரை காளி மதுரை நகரை தீயினின்று காக்கத் தவறியது தான் பிழை என்பது மீனாட்சி சொக்கநாதர் வைத்த வாதம்.

பாண்டியன் அரண்மனை உள்ளே நுழையும் வரை கண்ணகி மானிடப்பெண்.

பாண்டிய மன்னன் ஊழ்வினைப் பயனாலும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் காளியாகவே மாறிவிட்டதால் மதுரையை தீயினின்று காக்க இயலவில்லை' என்பது இதற்கு மதுர காளி வைத்தபதில் வாதம். 

சொக்கனாதனாகிய சிவன் இறுதியாக தொகுத்து சொன்ன தீர்ப்பு என்னவெனில், பாண்டிய மன்னன் தன கடமை தவறி கண்ணகி என்ற கற்புகரசியின் வாழ்வை அழித்தது மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொண்டுள்ளான். எனவே அவனுக்கு மறுபிறவி உண்டு. 

 மன்னன் தன கடைசி பிறவியில் காளி கோவில் கட்டி சாப நிவர்த்தி அடைவான். 

இது காலம் வரை மதுராபதி தெய்வமாகிய நீ குடியிருக்க கோவிலின்றி மதுரை மீனாட்சி கோவில் மேற்கு கோபுரத்தில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன், என தீர்ப்பு கூறினார். 

கடவுளின் தீர்ப்பின்படி துயில் கொண்டிருந்த மதுராபதி அம்மன் சாபநிவர்த்தியாக மகா போகர் தவம் செய்த இடத்தில் அரூப சக்தியாக உள்ளாள். 

பழநி மலை முருகனை தரிசிக்க வருபவர்கள் கன்னிவாடியில் உள்ள சோமலிங்க சுவாமி மற்றும் கன்னிவாடி அருகில் தெத்துபட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள அ/மி இராஜகாளியம்மன் ஆலயத்தையும் மறக்காமல் தரிசித்து வாருங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக