Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

வீட்டிலிருந்தே வேலை... போட்டி போடும் ஊழியர்கள்!

கொரோனா கொள்ளை நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம், முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. மறுபுறம், கொரோனா ஊரடங்கால் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கேயே சிக்கியுள்ளனர். இந்நிலையில், வீட்டிலிருந்தே பார்க்கக்கூடிய வேலைகள் (Work from Home), தொலைதூரத்தில் இருந்துகொண்டே பார்க்கக்கூடிய வேலைகள் (remote working) ஆகியவை இணையதளங்களில் அதிகம் தேடப்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
வேலைவாய்ப்பு தேடல் இணையதளமான இண்டீட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிப்ரவரி மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தொலைதூரத்தில் இருந்துகொண்டே பார்க்கக்கூடிய வேலைகளுக்கான தேடல்கள் 377 விழுக்காடு அதிகரித்துள்ளன. வேலை தேடும் நபர்கள் இந்த வகை வேலைவாய்ப்புகளில் அதிக ஆர்வம் காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், remote, work from home போன்ற தேடல்கள் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதேபோல, வீட்டிலிருந்தே வேலைபார்க்கக்கூடிய வேலைவாய்ப்புகளுக்கான தேடல்கள் 168 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதுகுறித்து இண்டீட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசி குமார், “நாம் வேலை பார்க்கும் விதத்தை கோவிட்-19 பாதிப்பு பல வகைகளில் மாற்றியுள்ளது. இதனால், வீட்டிலிருந்தே வேலைபார்க்கக்கூடிய வேலைவாய்ப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்தத் தேவை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப பணிச் சூழலை மேம்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டியது தொழில்துறையின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

வேலை தேடும் நபர்களில் 83 விழுக்காட்டினர், தொலைதூரத்திலிருந்தே வேலை பார்க்கக்கூடிய வசதியை விரும்புவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதுமட்டுமல்லாமல், தொலைதூரத்தில் இருந்துகொண்டே வேலை செய்வதற்காக சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள 53 விழுக்காட்டினர் தயாராக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக