Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

பெரிய சோம்பேறி யார்?

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவன் எப்பொழுதும் மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக நடந்து கொள்வான்.

மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்து, உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்த்தான். அது நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் இருப்பான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். 

காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கும், உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கும் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.

அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தான் அவன். பின், அமைச்சர்கள் ஐந்து பேரையும் வரவழைத்து, இளவரசிக்குத் திருமணம் செய்ய நினைக்கிறேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல வீரன், அறிவுள்ளவன், நல்ல பண்புள்ளவன், அழகானவன் இப்படி யாரும் எனக்கு மருமகனாக வேண்டாம். சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும் என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான் அரசன். அதன்பின், ஐந்து அமைச்சர்களும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றனர்.

ஓராண்டு கழிந்ததும், ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களைப் பார்த்ததும், முதல் அமைச்சரிடம் உங்கள் அனுபவங்களைச் சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.

அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பின் ஒரு பெரிய சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது என்று பதில் கூறினான் என்றார்.

இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.

இரண்டாம் அமைச்சர், அரசே! நானும் ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைப் பார்த்தேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.

சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் இருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். அவன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான் என்றார். நல்ல சோம்பேறிதான் என்றார் அரசன்.

அரசன்! மூன்றாம் அமைச்சரைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல் என்று கேட்டான். அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைப் பார்த்தேன்.

கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. அவன் இடத்தைவிட்டு அசையவில்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள் என்றான்.

உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான் என்ற அரசன் நான்காம் அமைச்சரைப் பார்த்தான். அரசே! நான் ஒரு சோம்பேறியைக் கண்டேன். அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப் படுத்திருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச்செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட சோம்பேறியாக இருந்தான். மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் மட்டும் தான் உண்பான் என்றார் அமைச்சர்.

அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான் என்று சொன்னார் அமைச்சர். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன்தான் என்ற அரசன் ஐந்தாம் அமைச்சரைப் பார்த்தான்.

உடனே அந்த அமைச்சர், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். ஆர்வத்துடன் அவன் என்ன செய்தான்? என்று கேட்டான். அரசன்.

அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன்.

அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்திருந்தான். பேசாமல் இருப்பதற்கு அவன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக்கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல்.

பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன். வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன் என்று மகிழ்ச்சியுடன் சொன்ன அரசன், ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.

நீதி :

சோம்பேறியாக இருத்தல் மிகவும் தவறான செயல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக