பழங்களில் ஃபேஸ் பேக் புதுசில்லை. ஆனால் பயன்படுத்தும் பொருள்களை பொறுத்து சருமமும் உரிய பளபளப்பையும் அழகையும் தருகிறது.
அழகிலும் அதிசயம் நடக்குமா என்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தினால் உணர்ந்துவிடுவார்கள்.
உடல் ஆரோக்கியத்துக்கு பழ உணவு என்பது போல சரும பளபளப்புக்கும் அழகு உதவுகிறது. பழக்கலவைகள் பலவும் சருமத்துக்கு நன்மை செய்கிறது என்பதை மறுக்கமுடியாது.
ஆனால் ஒவ்வொரு பழங்களிலும் ஒன்றோ இரண்டோ இணைந்து சருமத்துக்கு அழகு தந்தால் ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சத்துகள் சருமத்துக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. அப்படி என்ன இருக்கு ஸ்ட்ராபெர்ரியில் தெரிந்துகொள்வோம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சாலிசிலிக் அமிலமானது முகப்பருக்களை நீக்க உதவுகிறது. இறந்த செல்கள் முகத்தில் தேங்கியிருக்கும் போது முகத்தின் பளபளப்பு குறைகிறது. இந்த இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
கொலாஜன் உற்பத்தி குறைவால் சருமத்தில் சுருக்கங்களும் இளவயதில் முதுமை தோற்றமும் உண்டாகிறது. இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது. அழகான நிறத்தை கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி சத்து நிறைந்தது. இவற்றில் இருக்கும் ஒமேகா 3 கூடுதலாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.
முகப்பரு இருப்பவர்கள்
பருக்களால் முகத்தின் அழகு கெடுகிறது என்று நினைப்பவர்கள் பயன்படுத்தும் முறை இது. ஸ்ட்ராபெர்ரி, தயிர், தேன் - தேவைக்கேற்ப
மூன்றையும் சேர்த்து முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும், இவை முகப்பருவை குறைப்பதோடு முகத்தையும் பொலிவாக்க உதவும்.
தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலமானது முகத்தின் வறட்சி தன்மையை போக்கி முகத்தை மிருதுவாக வைக்க உதவுகிறது. சருமத்தின் மூன்று அடுக்கிலும் சென்று அழுக்கை அகற்றி பளிச்சென்று வைக்க உதவுகிறது. சுத்தமான தேன் அதன் இயல்பு போன்று முகத்தையும் பளபளப்பாக காட்டுகிறது. இவை முகப்பருக்களை தடுக்கிறது. வாரம் ஒருமுறை இந்த பேக் போடுவதன் மூலம் முகப்பருக்களை விரைவாக குறைக்க முடியும்.
வறண்ட சருமத்துக்கு
ஸ்ட்ராபெர்ரி பழமசியல் , கற்றாழை ஜெல், பாலேடு -தேவைக்கேற்ப
மூன்றையும் நன்றாக கலந்து குழைத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவுங்கள். பிறகு இலேசாக மசாஜ் செய்து விடவும். 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம்.
கற்றாழை ஜெல் முகத்தில் இருக்கும் வறட்சியை தடுத்து எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கற்றாழை பயன்படுத்துவதால் அவை சருமத்துளைகளை அடைக்காமல் முகத்தை சுத்தம் செய்து வெளியேறும். சருமத்தில் கரும்புள்ளிகள். பருக்களால் வடு போன்றவற்றையும் மறைய செய்யக்கூடியது. இதனோடு ஸ்ட்ராபெர்ரி கலந்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.
எண்ணெய் சருமத்துக்கு
எண்ணெய் சருமம் கொண்டிருப்பவர்கள் முகத்தில் வடியும் எண்ணெய் பசையை நீக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்கள் ஸ்ட்ராபெர்ரியை மசித்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். பிறகு 20 நிமிடங்கள் வரை காத்திருந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவினால் எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.
எலுமிச்சை சாறு எண்ணெய் பசையை கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு சருமத்தையும் சுத்தம் செய்து இயற்கை ப்ளீச் போல் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
மென்மையான சருமத்துக்கு
ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து காய்ச்சாத பால் ஒரு டீஸ்பூன் கலந்து மிக்ஸியில் அடிக்கவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும். முகம் பொலிவு பெறும்.
நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்தின் மென்மைதன்மையை பாதுகாக்கும். இவை இரண்டுமே முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கும் இயற்கை ப்ளீச்சீங் ஆக செயல்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக