Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

கொரோனா நெருக்கடி: நிவாரணம் கோரும் செய்தித்தாள் நிறுவனங்கள்!

இந்திய செய்திதாள் துறை கடுமையான இழப்புகளை சந்தித்து வருவதால் நிவாரணத் தொகை அறிவிக்கும்படி மத்திய அரசிடம் இந்திய செய்திதாள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. செய்தித்தாள் துறை ஏற்கெனவே ரூ.4,000 கோடி இழப்பை சந்தித்துவிட்டதாகவும், நிவாரணம் வழங்காவிட்டால் அடுத்த ஆறு மாதங்களில் மேற்கொண்டு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்திய செய்திதாள் சங்கம்  எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலாளருக்கு இந்திய செய்தித்தாள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா ஊரடங்கால் செய்தித்தாள் தொழில்துறை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள் விற்பனையிலும், விளம்பரங்கள் வாயிலாகவும் கிடைக்கும் வருவாய் சரிந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் செய்தித்தாள் தொழில்துறை ரூ.4,000 - 4,500 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

பொருளாதார செயல்பாடுகள் முடங்கியுள்ளதாலும், தனியார் துறையிலிருந்து விளம்பரங்கள் குறைந்துள்ளதாலும் இதே வேகத்தில் அடுத்த 6-7 மாதங்களுக்கு இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக அரசு நிவாரணத் தொகை அறிவிக்காவிட்டால், இந்த வேகத்தில் 6-7 மாதங்களில் ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பு ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி அச்சுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு சுங்க வரியையும் விலக்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 800 செய்தித்தாள் நிறுவனங்களின் பிரதிநிதியாக இந்திய செய்தித்தாள் சங்கம் இயங்கி வருகிறது. செய்தித்தாள் துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பால் பத்திரிகையாளர்கள், அச்சகர்கள், விநியோகர்கள் என சுமார் 30 லட்சம் ஊழியர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளாலும், நெருக்கடியாலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதுகூட கடினமாகியுள்ளதாக இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தித்தாள் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டுமெனவும், அரசு விளம்பரங்களை 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமெனவும், அச்சு ஊடகத்திற்கான பட்ஜெட் செலவினத்தை 100 விழுக்காடு உயர்த்த வேண்டுமெனவும் இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக