காசிக்கு நிகரான சிவத்தலங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஈரோடு அருகே குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆலயம்.
இந்து சமயத்தவர்கள், தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிக்கு சென்று கங்கையில் நீராடி அங்குள்ள விசுவநாதரை தரிசிப்பதை கடமையாக கொண்டுள்ளனர். ஏனெனில் இந்த நகரம் சிவபெருமானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. காசிக்குச் சென்றுவர உடல்பலம், மனபலம், பொருள் பலம் ஆகிய மூன்றும் தேவை.
அத்துடன் அந்த காலத்தில் இங்கு செல்ல பயணக் காலமும் அதிகம். இத்தகைய காரணங்களால் காசிக்கு செல்ல இயலாதவர்கள் தமிழகத்திலேயே காசிக்கு நிகராக விளங்கும் சிவத்தலங்களைத் தரிசித்து, காசி விஸ்வநாதரைத் தரிசித்து புண்ணியப் பலனைப் பெற்று வருகின்றனர்.
காசிக்கு நிகரான இத்தகைய சிவத்தலங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, ஈரோடு அருகே குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் ஆலயம். இந்த ஆலயம் காவிரி நதியின் கிழக்குக் கரையில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு காவிரி நதியானது, வடக்கில் இருந்து தெற்காக பாய்கிறது.
நம் நாட்டில் கங்கையும், தாமிரபரணியும் மட்டும் தான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கின்றன. இவ்விரு நதிக்கரைகளிலும் ஏராளமான சைவ - வைணவ ஆலயங்கள் அமைந்து அணி சேர்க்கின்றன. அந்த வரிசையில் அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு நதியான காவிரி, வடக்கு - தெற்காகப் பாய்ந்தோடும் வடுகபாளையம் பகுதியில் சிவாலயம் அமைந்திருப்பது சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த திருத்தலம் காசிக்கு இணையாகக் கருதப்படுகிறது.
இந்த திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ் சிறப்புகள் கொண்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. இங்கு அருளும் இறைவனை தரிசித்தால், காசிக்கு சென்று வந்த மெய்யுணர்வு ஏற்படும். சிறப்புமிக்க இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர், மாமன்னன் ராஜராஜ சோழன்.
காவிரி நதியில் வெள்ளம் வந்தாலும், வராவிட்டாலும் பாதிப்படைவது சோழநாடுதான். அதே நேரம் காவிரியில் வெள்ளம் வந்தாலும், வராவிட்டாலும் சேரநாடு செழிப்பாகவே விளங்கியது. இருப்பினும் அந்த நிலப் பகுதியை குறுநில மன்னர்கள் பலரும் சீரற்ற முறையிலேயே ஆட்சி செய்தனர். மேலும் தங்களுக்கு போட்டி பொறாமையில் சண்டையிட்டும் வந்தனர்.
இதனையறிந்த ராஜராஜசோழன், அடர்ந்த வனமாக இருந்த கொங்கு மண்டலத்தின் மீது, ‘பெருத்த நாட்டு ஆணையாட்கள்’ என்ற படைப்பிரிவு கொண்டு படையெடுத்தான். சிற்றரசர்கள் அனைவரையும் எளிதில் வெற்றி கொண்டான். தாம் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் அணைகள் கட்டி, காட்டைத் திருத்தி நாடாக்கி, வேளாண்மையை செழிப்படையச் செய்துவிட்டு நாடு திரும்பினான். ஆனாலும், அவன் கைப்பற்றி ஆட்சிபுரிந்த பகுதிகளில் சிறுசிறு குழுக்களிடையே கிளர்ச்சி நடைபெற்று வந்தது.
‘பொங்கிவரும் காவிரி பாய்ந்தோடும் நாட்டிலா சண்டை, சச்சரவு’ என்று வியந்த ராஜராஜசோழன், ஒற்றர்களை அனுப்பி அதற்கான காரணத்தை அறிய முற்பட்டான். காவிரி நதி பாய்ந்தோடினாலும், அதன் அருகே மறுபுறம் உள்ள பகுதிகள் வறட்சியாகக் காணப்பட்டன. கலகத்திற்கு காரணம் வறட்சிதான் என்பதை அறிந்து, மீண்டும் கொங்கு மண்டலத்திற்கு வந்து தங்கினான். அங்கே வறட்சியைப் போக்கும் விதமாகவும், தம்முடைய வெற்றிச் சின்னமாகவும் ‘சோழ கங்கை’ என்ற பெயரில் ஒரு பெரிய ஏரியை வெட்டினான் (தற்போது இந்த ஏரி ‘பொய்யேரி’ என்ற பெயரில் உள்ளது). இதனால் வேளாண்மை சிறந்து விளங்கியது. அப்பகுதியில் கலகம் நீங்கி அமைதி பிறந்தது.
தொடர்ந்து தான் தங்கியிருந்த இடம், வெற்றி பெற்ற ஊர் என ஒவ்வொரு பகுதியிலும், காவிரி நதிக்கரையில் சிவாலயம் அமைத்து, அவற்றைப் பராமரிக்கவும், நித்ய பூஜைகளுக்காகவும் மானிய நிலங்களை வழங்கினான். இவ்வாறு கொங்கு மண்டல காவிரிக் கரையில் ராஜராஜசோழன் 108 சிவாலயங்களை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாலயங்கள் கரைகளின் இருபுறமும் நேர் எதிரே அமைக்கப்பட்டன. அப்போது, இந்தப் பகுதியில் இருந்த சைவ சமய இயக்கம் ஒன்று, ராஜராஜ சோழனுக்கு ‘சோழ சிரோன்மணி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. மன்னுக்கு பட்டம் வழங்கப்பட்ட இடம் தற்போது, ‘சோழ சிரோமணி’ என அழைக்கப்படுகிறது.
இப்படியாக ராஜராஜ சோழன் நிர்மாணித்த ஆலயங்களுள் குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையம் பகுதியில் காவிரிக் கரையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயமும் ஒன்று. முன் காலத்தில் இந்த ஆலயம் குரும்பலமகாதேவி சமேத மணிபுரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. காலப்போக்கில் இவ்வாலயம் முற்றிலும் சிதில மடைந்து, ஒரே ஒரு சன்னிதி மட்டும் இடிந்துவிழும் நிலையில் எஞ்சியது. அரசு ஆவணங்களில் ‘சுப்ரமணிய ஆலயம்’ என்று குறிக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தை, இந்த கிராம மக்கள் ‘சிவன் கோவில்’ என்றழைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் மூலஸ்தான கருவறையும் சிதிலமடையத் தொடங்கியது. இதையடுத்து இந்த ஆலயத்தை புனரமைக்கும் பணி தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம், விநாயகர், பாலதண்டாயுதபாணி ஆகியோர் விக்கிரகங்களுடன், புதிதாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உள்பட அனைத்து பரிவார தெய்வச் சிலைகளும் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள ஈசனுக்கு ‘காசி விசுவநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘காசி விசாலாட்சி’ என்றும் திருவுளச்சீட்டு மூலம் புதிதாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது.
வழிபாட்டு பலன்
இத்தலத்திற்கு நேரில் வந்து அம்மையப்பரை தரிசிப்போருக்கு மறுபிறவி இல்லையென்று நம்பப்படுகிறது. திருமணம், மகப்பேறு, தொழிற்கல்வி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்பது பலனடைந்தவர்கள் கூறும் தகவல். மேலும் தொழில் சிக்கல் தீரவும், தம்பதி அன்னி யோன்யமாக வாழவும் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வருகின்றனர். வரலாற்றுப் பெருமைமிக்க இவ்வாலயம், எழில் கொஞ்சும் இயற்கைப் பேரழகு நிரம்பிய சூழலில் அமைந்துள்ளது.
அமைவிடம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குரும்பலமகாதேவி கிராமம், வடுகபாளையத்தில் இக்கோவில் இருக்கிறது. திருச்செங்கோடு - ஜேடர்பாளையம் வழியில் கள்ளுக்கடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கில் 1 கிலோமீட்டர் அருகில் வடுகபாளையம் காவிரிக்கரை அமைந்துள்ளது.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக