திங்கள், 11 மே, 2020

பதிமூன்றாம் நாள் போர் முடிவு..! அர்ஜூனனின் சபதம்.!

 சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது புதல்வனும் அடங்கிய படை ஒன்று அபிமன்யுவை ஐந்தாவது ஆரத்தில் எதிர்த்தனர். போரின் ஆரம்பத்தில் அபிமன்யு சகுனியின் புதல்வனை வீழ்த்தினான். இது சகுனியோடு வந்தவர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுபோன்று கௌரவர்களின் சக்கரவியூகத்தை அபிமன்யு தனது போர்த்திறமையால் ஆரம் ஆரமாகக் கலைத்துக் கொண்டிருந்தபோது பீமனும், அபிமன்யுவுக்கு போரில் உதவிக்கு வந்தான். பீமனுடைய வருகையால் கௌரவர்களின் சக்கர வியூகத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த பலநாட்டு மன்னர்கள் வீழ்ந்தனர். பீமனும், அபிமன்யுவும் ஒன்று சேர்ந்து கௌரவர்களின் வியூகத்தை உடைத்துக் கொண்டு விரைவாக வருவதை துரியோதனன் பார்த்து விட்டான்.

துரியோதனன் உடனே சகுனி, விகர்ணன், அசுவத்தாமன் ஆகியவர்களை அழைத்து, படைகளோடு விரைந்து சென்று பீமனை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று கட்டளையிட்டான். துரியோதனனுடைய கட்டளையின்படி அவர்கள் பீமனை எதிர்க்கப் புறப்பட்டனர். துரியோதனன், அவர்கள் சென்ற பின்பும் தன் தம்பிமார்கள் மற்றும் வேறு பல அரசர்கள் எல்லோரையும் பீமனை எதிர்ப்பதற்கு அனுப்பினான். பீமனும் தன்னை எதிர்த்து வந்தவர்களை சமாளித்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். வியூகத்தின் உட்புறத்தில் அபிமன்யுவும், வெளிப்புறத்தில் பீமனும் மாட்டிக் கொண்டார்கள். தன்னைச் சுற்றி அணி அணியாக நிற்கும் படைகளை அழித்தால்தான் அபிமன்யு வியூகத்தில் இருந்து வெளியே வரமுடியும்.

பீமன், வீரர்கள் அனைவரையும் எதிர்த்து போர் புரிவதை பார்த்த துரியோதனன் பயந்து கொண்டு ஒரு சூழ்ச்சியை செய்தான். தன் சூழ்ச்சியை பற்றி சிந்து தேசத்து மன்னனாகிய ஜெயத்திரதன் என்பவனோடு கலந்து ஆலோசனை நடத்தி இரண்டு வேண்டுகோள் விதித்தான். பீமன் சிவபக்தி உடையவன். பீமன் சிவபெருமானுக்கும், அவர் அணிந்து கொண்ட பொருளுக்கும் மரியாதை செலுத்துபவன். ஆகவே நீ ஒரு பெரிய கொன்றை மலர் மாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து கழற்றி வந்து பீமனின் தேருக்கு முன்னால் வைத்துவிடு. அப்போது நீ சிவபெருமானிடம் மீது பக்தி உடையவன் என்று பீமன் எண்ணிக் கொண்டிருப்பான். அதனால் பீமன் மாலையைக் கண்டு பயபக்தியோடு வணங்கித் தேரை மேலே செலுத்தாமல் நிறுத்தி விடுவான். அபிமன்யுவும் வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில் சிவபெருமான் அருளால் நீ பெற்றிருக்கும் கதாயுதத்தால் அபிமன்யுவை தலையில் அடித்து அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றான். ஜெயத்திரதனும் துரியோதனனின் வேண்டுகோளுக்கு ஒப்புக்கொண்டான். பின்பு எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானை நினைத்துக் கொண்டு தியானமும் வழிபாடும் செய்து கொன்றை மலர் மாலையை வரவழைத்தான். பின்பு அம்மாலையை பீமன், அபிமன்யு இருவருடைய தேர்களுக்கும் நடுவே குறுக்காக போட்டு விட்டான். அபிமன்யு வியூகத்தின் உட்புறம் இருந்தவர்களை வென்று வீழ்த்தி விட்டு வியூகத்தில் இருந்து வெளியே வருவதற்காக திரும்பினான். திரும்பியபோது தேர் செல்ல வேண்டிய பாதையின் வழியில் கொன்றைமாலை விழுந்து கிடப்பதைக் கண்டு தயங்கினான்.

சிவபெருமானுக்கு விருப்பமான அழகிய கொன்றை மலர் மாலை வழிமேல் வீழ்ந்து கிடக்கிறது. அதை மிதித்துக் கொண்டு தேரைச் செலுத்தினால் சிவபெருமானை அலட்சியம் செய்வது போல ஆகிவிடும் என்று எண்ணி அபிமன்யு வியூகத்திலிருந்து வெளியேறாமல் மீண்டும் வியூகத்திற்குள்ளேயே சென்று எஞ்சியிருந்த எதிரிகளோடு போர் செய்ய ஆரம்பித்தான். பீமனும் தன் தேரை அபிமன்யு பக்கமாக வியூகத்திற்குள் செலுத்துவதற்குத் திருப்பினான். திரும்பிய வேகத்தில் வழிமேல் கிடந்த கொன்றைமாலையை பார்த்ததும் உடனே தீயை மிதித்ததைப் போல எண்ணி தேரை இழுத்துப்பிடித்து நிறுத்தினான். தெய்வப் பிரசாதமாகிய கொன்றை மலர் மாலையைக் கடந்து தேரைச் செலுத்தக் கூடாது என்று நின்று விட்டான்.

பீமன், வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார்? என்று தனக்குள் சிந்தித்து, அது சூழ்ச்சி என்று புரிந்து கொண்டான். தன்னை அபிமன்யுவை நெருங்க விடாமலும், அபிமன்யுவை வியூகத்தை விட்டு வெளியே வராமலிருப்பதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சி என்று தெரிந்து கொண்டான். பீமனும், அபிமன்யுவும் கொன்றை மாலையைத் தாண்டிச் செல்லாமல் வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றதை கண்ட துரியோதனன் தன் சூழ்ச்சி பலித்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தான். வெளிப்புறம் திரும்பிய பீமனும் உட்புறம் திரும்பிய அபிமன்யுவும் தங்களுடைய கோபத்தை முழுவதையும் ஒன்று திரட்டி எதிரிகளைக் கடுமையாக தாக்குவதற்கு தொடங்கினர். கர்ணனும், அபிமன்யுவும் நெருங்கி நின்று போர் செய்தனர். தொடக்கத்தில் இரண்டு மூன்று முறை அபிமன்யுவின் விற்போரைச் சமாளிக்க முடியாமல் கர்ணன் தோற்றான்.

நான்காவது முறையாக அபிமன்யு எதிர்த்து வந்தபோது கர்ணன் எய்த அம்பு அபிமன்யுவின் வில்லை இரண்டாக முறித்துக் கீழே தள்ளியது. துரோணர், அபிமன்யு மேல் பிறைச் சந்திரனைப் போன்ற உருவமுள்ள அம்பு ஒன்றை எடுத்து அபிமன்யுவின் வலது கையைத் துண்டித்து விட்டார். பிறகு சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று ஜெயத்திரதனிடம் இருந்தது. அதை ஓங்கிக் கொண்டு அபிமன்யுவின் மேல் பாய்ந்தான். உடனே அபிமன்யுவும் பக்கத்திலிருந்த வேறோர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஜெயத்திரதனை எதிர்த்தான். இருவரும் கதாயுதத்தை வைத்துக் கொண்டு மோதினர்.

 எனினும் இடது கையால் கதாயுதம் பிடித்து அபிமன்யுவால் போரிட முடியாமல் கைசோர்ந்து கதாயுதத்தை கீழே போட்டுவிட்டான். அச்சமயம் ஜெயத்திரதன், தன் வலிமை வாய்ந்த கதாயுதத்தை அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். அடுத்த விநாடி அபிமன்யு கீழே தரையில் சாய்ந்தான். அபிமன்யுவின் மரணம் பாண்டவர்களை பெரிதும் பாதித்தது. மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜெயத்திரதன் என்று அறிந்த அர்ஜூனன் ஜெயத்திரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன், தவறினால், அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணர் மீது ஆணை! என்று சபதம் செய்தான். பதிமூன்றாம் நாள் போர் நிறைவுப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்