திங்கள், 4 மே, 2020

அனுமன் மகேந்திர மலையை அடைதல்!

அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். அவ்வாறு அனுமன் செல்லும்போது சமுத்திர ராஜன் வேண்டுகோளுக்கிணங்க தன் மீது ஓய்வெடுத்து செல்லும்படி சொன்ன மைந்நாகம் மலையின் மீது வந்து நின்றான். 

அங்கு அம்மலையின் மீது சிறிது நேரம் ஓய்வெடுத்தான். அப்பொழுது இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் அம்மலையிடம் கூறினான். பிறகு தன்னை எதிர்பார்த்து அங்கதனும் மற்ற வானர வீரர்களும் காத்து கொண்டிருப்பார்கள் எனக் கூறி விட்டு அம்மலைக்கு விடைகொடுத்து வானில் பறந்தான். 

அனுமன் விரைந்து சென்று மகேந்திர மலையை அடைந்தான். அனுமனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வானர வீரர்கள் அனுமனை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை தொழுதனர். 

சிலர் அனுமனை தூக்கி ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை கட்டி தழுவிக் கொண்டனர். சிலர் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்.

வானரங்கள் அனுமனை பார்த்து! அனுமனே! உன் வீரதீர செயல்களின் காரணமாய் ஏற்பட்ட புண்களும், உன் முகத்தின் பொழிவும் நீ சீதையை பார்த்துவிட்டாய் என்பதை காட்டுகிறது என்றனர். 

பிறகு வானரங்கள், உனக்காக காய்களும், கனிகளும், கிழங்குகளும் சேகரித்து வைத்துள்ளோம். இவற்றை உண்டு சிறிது நேரம் இளைப்பாறு என்றனர். பிறகு அனுமன் அங்கதனிடம் சென்று அவனை வணங்கினான். ஜாம்பவானின் காலில் விழுந்து வணங்கினான். 

பிறகு அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். அனுமன் அனைவரிடமும் நான் சீதையை கண்டுவிட்டேன். சீதையின் வாழ்த்துக்களையும் பெற்றேன் என்றான். உடனே வானரங்கள் அனுமனிடம், நீ இங்கிருந்து சென்றது முதல் அங்கிருந்து இங்கு வந்தது வரை நடந்தவற்றை எல்லாம் கூறு என்றனர். 

அனுமன், சீதையின் கற்பு திறனையும், அவர் இராமரின் நினைவாக இருப்பதையும், தன் அடையாளமாக சீதை கொடுத்த சூடாமணி பற்றியும் கூறினான்.

பிறகு அங்கு அரக்கர்களிடம் போர் புரிந்ததையும், இலங்கைக்கு தீ மூட்டியதையும் கூறினான். பிறகு வானரங்கள், அனுமனே! நீ போர் புரிந்ததற்கு அடையாளமாய் உனக்கு ஏற்பட்ட புண்களே காண்பிக்கிறது. 

அவர்களிடம் நீ வெற்றி பெற்று தான் இங்கு வந்துள்ளாய் என்றனர். அங்கதன் அனுமனிடம், நீ மிகவும் துணிவுடன் இக்காரியத்தை செய்து உள்ளாய். உன் பலத்துக்கும், வலிமைக்கும் நிகரானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டாய். 

இன்று உன்னால் வானர குலம் புகழ் பெற்றுள்ளது என பாராட்டினான். பிறகு அனுமன், அன்னை சீதை, நான் இன்னும் ஒரு மாத காலம் தான் உயிருடன் இருப்பேன். அதற்குள் இராமர் வந்து என்னை காப்பாற்றி செல்ல வேண்டும் என்று கூறினார் என்றான். 

உடனே வானரங்கள், இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. உடனே இராமரிடம் சென்று சீதையை கண்ட செய்தியைக் கூற வேண்டும் என்றனர்.

அங்கதன் அனுமனிடம், அனுமனே! நாங்கள் உயிரை விட தயாராக இருந்தோம். நீ தான் தக்க சமயத்தில் இலங்கை சென்று சீதையை கண்டு எங்கள் உயிரையும் காப்பாற்றி உள்ளாய் என்றான். 

ஆதலால் நீ விரைந்து சென்று, இராமரிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறு என்று அனுப்பி வைத்தான். பிறகு அங்கதன் தலைமையில் வானர வீரர்கள் இராமரை நோக்கிச் சென்றனர். அவர்கள் போகும் வழியில் மதுவனத்தை கண்டனர். 

அம்மதுவனம் முதலில் வாலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. வாலி இறந்த பின் அம்மதுவனம் சுக்ரீவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனை ததிமுகன் என்னும் வானர வீரன் தன் ஏவலாட்களுடன் காவல் காத்து கொண்டிருந்தான். 

வானரங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால், அவர்கள் அங்கதனிடம், நாங்கள் மிகுந்த பசியுடன் உள்ளோம். தாங்கள் இந்த மதுவனத்தில் உள்ள மதுவை அருந்த அனுமதி தர வேண்டும் என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்