இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுமார் 170% வரை சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கல்வான் பள்ளதாக்கு பதற்றத்திற்கு பிறகு சீன-இந்திய எல்லைப் பகுதியில் தொடர் பதற்றம் நீடிக்கும் நிலையில், எல்லை பகுதியில் பணிபுரியும் மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 100 முதல் 170 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பதட்டமான லடாக் பகுதியில் சாலை கட்டுமான பணியில் ஈடுப்படும் ஊழியர்களுக்கு அதிக அதிகரிப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
புதிய அறிவிப்புக்கு பிறகு, லடாக்கில் பணிபுரியும் தகவல் உள்ளீட்டு ஊழியர்கள் (data entry operator) போன்ற அவுட்சோர்ஸ் தொழில்நுட்பமற்ற ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.16,770-லிருந்து மாதத்திற்கு ரூ.41,440-ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் டெல்லியில் தகவல் உள்ளீட்டு ஊழியர் ஒருவர் பெறும் ஊதியத் ரூ.28,000-ஆக மட்டுமே உள்ளது.
லடாக் பகுதியில் ஒரு கணக்காளரின் சம்பளம் ரூ.25,700-லிருந்து ரூ.47,360-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியின் ஆரம்ப சம்பளம் மாதத்திற்கு ரூ.30,000-ல் இருந்து ரூ.60,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலாளர் மட்டத்தில் சம்பளம் மாதத்திற்கு ரூ.50,000-லிருந்து 1,12,800-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் ஒரு மூத்த மேலாளருக்கு மாத சம்பளம் ரூ.55,000-லிருந்து ரூ.1,23,600-வரை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பள சலுகைகள் தவிர, ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டுக் கொள்கைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதேப்போல் பயணக் கொடுப்பனவு, வருங்கால வைப்பு நிதி போன்ற பிற வசதிகளையும் அவர்கள் பெறுவார்கள்.
கடினமான பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு (மூன்று பிரிவுகளாக வைக்கப்பட்டுள்ளனர்) இந்த சம்பள உயர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களின் முதல் பிரிவில் அசாம், மேகாலயா, திரிபுரா, சிக்கிம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் பணிபுரிபவர்கள் இடம்பெறுகின்றனர். அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய இடங்களில் பணிபுரிபவர்கள் இரண்டாம் பிரிவில் உள்ளனர். லடாக் பிராந்தியத்தில் பணிபுரியும் மக்கள் மூன்றாவது(அதிக ஆபத்து) பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக