Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 13 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 042

கோச் செங்கட் சோழ நாயனார்...!!

திருக்கையிலாயமலையில் எம்பெருமானின் கணங்களாக புஷ்பதத்தன், மாலியவான் என்று இருவர் இருந்து வந்தனர். அவர்களுக்குள் எம்பெருமானுக்கு தொண்டு புரிவதில் யார் சிறந்தவர்? என்ற எண்ணம் உருவாகியது. ஒருவருக்கொருவர் ஏற்பட்ட அவ்வகை எண்ணத்தால் இருவர் மனதிலும் பொறாமையும், கோபமும் தோன்ற துவங்கியது. ஒருநாள் தங்கள் மனதில் இருந்துவந்த கோபத்தின் விளைவால் ஒருவருக்கொருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர்.

புஷ்பதத்தன் மாலியவானை நோக்கி நீ சிலந்தியாக பிறக்க சபிக்கிறேன் என்றார். அதேபோல் மாலியவான், புஷ்பதத்தனை நோக்கி நீ யானையாக பிறப்பாயாக என்று சபித்தார். இருவரும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்ட சாபத்தால் மானுடர்கள் வாழும் இப்பூவுலகில் பிறந்தார்கள். பெருமரங்கள் நிறைந்த நீண்ட நெடிய குளிர்ந்த சோலை கொண்ட வளமும், எழிலும் மிக்க நாடுதான் சோழநாடு. அந்நாட்டில் வற்றாமல் ஓடிக்கொண்டு இருக்கும் காவிரியாற்றின் கரையில் பல தீர்த்தங்கள் உள்ளன. அதில் சந்தரதீர்த்தம் என்னும் நாமம் கொண்ட பொய்கை ஒன்று அமைந்திருந்தது.

அப்பொய்கையில் அமைந்துள்ள சோலையிலுள்ள வெண்ணாவல் மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. தவமிக்க ஒரு வெள்ளை யானையாக பிறந்த புஷ்பதத்தன் தன்னுடைய முற்பிறவியில் செய்த அரும் செயலின் பயனாக அந்த சிவலிங்கத்திற்கு தனது துதிக்கையால் நீரும், மலரும் நாள்தோறும் கொண்டு வந்து சமர்ப்பித்து சிவலிங்கத்தை வழிபட்டு வரும் பாக்கியத்தை பெற்றது. இக்காரணத்தினாலேயே அப்பகுதிக்கு திருவானைக்காவல் என்ற பெயர் தோன்றியது. யானை வழிபட்டு வந்த அதே பகுதியில் நாவல் மரத்தின் மீதிருந்த சிலந்தி ஒன்று அதாவது, மாலியவான் புஷ்பதத்தன் கொடுத்த சாபத்தினால் சிலந்தியாக பிறந்தார்.

தன்னுடைய முற்பிறவியில் எம்பெருமானுக்கு செய்து வந்த அரும் பணியால் கிடைத்த புண்ணியத்தினால் வெண்மையான நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது காய்ந்த சருகுகள் மற்றும் மரத்தின் இலைகள் ஏதும் விழாமல் இருக்கவும், சூரிய வெப்பம் எம்பெருமானை தாக்காமல் இருக்கவும் தனது உடலில் உருவாகும் ஒருவிதமான திரவியத்தைக் கொண்டு சிவலிங்கத்திற்கு மேல் தன்னுடைய வலையினால் ஒரு பந்தலை ஏற்படுத்தியது. சிவபெருமானை வழிபட வரும் யானையானது லிங்கத்தின் மேல் இருக்கும் சிலந்தி வலையினைக் கண்டதும் எம்பெருமானுக்கு தூய்மையற்ற செயலை செய்ததாக எண்ணி வருந்தி சிலந்தியினால் உருவான வலையை நீக்கியபின் தனது வழிபாட்டினை செய்துவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டது.

எம்பெருமானுக்கு எவ்விதமான தீங்கும் நேராமல் இருக்கும் வண்ணம் உருவாக்கிய பந்தலானது சிதைவுற்று இருப்பதைக் கண்டு சிலந்தி வருத்தம் கொண்டது. ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் முன்பு போல் சிவலிங்கத்திற்கு மேல் தன்னுடைய உடலில் உருவாகும் திரவியத்தைக் கொண்டு வலையினால் மீண்டும் பந்தலை உருவாக்கியது. இவ்விதமாக சிலந்தி வலை பின்னுவதும் மறுநாள் யானை வழிபட வரும் வேளையில் வலையினை அகற்றுவதுமாக இருந்தது.

ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்த சிலந்தி தன்னுடைய வலையினால் உருவாக்கிய பந்தலுக்கு பங்கம் ஏற்படுத்துவது யார்? என்று அறிந்து கொள்வதற்காக மறைந்திருந்து கவனிக்க துவங்கியது. பின் தன்னுடைய வலையை சிதைப்பது யானைதான் என்று உணர்ந்து கொண்டதும் கோபம் மேலிட அந்த யானையை எவ்விதத்திலாவது கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் சிவனை பூஜிக்க வந்த யானையின் துதிக்கையில் புகுந்த சிலந்தியானது யானையை கடிக்க துவங்கியது. சிலந்தியின் செயலால் வலி தாங்க முடியாத யானை துதிக்கையை ஓங்கி வேகமாக தரையில் அடித்தது.

யானையின் இந்த செயலால் துதிக்கையின் உள்ளே இருந்த சிலந்தியானது இறந்தது. அதே சமயம் சிலந்தி கடித்ததினால் வெளிப்பட்ட விஷம் உடம்பில் ஏறியதால் யானையும் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. சிவபெருமானுக்கு தொண்டு செய்ததால் யானை சிவலோகம் அடைகிறது. யானைக்குத் துன்பம் ஏற்படுத்த முதலில் முயன்றதால் சிலந்தி மட்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கிறது. மீண்டும் இவ்வுலகில் பிறக்க வேண்டி இருந்தாலும் ஈசனுக்கு வலை பின்னிய அரும்பெரும் காரணத்தால் நல்லதொரு வாழ்க்கையும் அமைய இருந்தது.

சோழ வேந்தரான சுபதேவர் தன் மனைவியான கமலாவதியாருடன் நன்முறையில் சோழவளநாட்டை ஆட்சி செய்து வந்தார். தம்பதிகள் இருவருக்கும் திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட்பேறு இல்லாமல் மனம் வருந்தினார்கள். பின்னர் மன்னன் தன்னுடைய மனைவியாருடன் தில்லையை அடைந்து அம்பலவாணரது திருவடியை வழிபாடு செய்து கொண்டு இருந்தார். சோழ வேந்தர் மற்றும் அவரது துணைவியார் தம்மீது கொண்ட பக்தியால் மனம் மகிழ்ந்த கூத்தப்பெருமான் திருவருள் புரிந்ததற்கு ஏற்ப சிலந்தியின் மறுபிறவியானது மானுட பிறவியாகவும், அதுவும் சோழ வேந்தரின் துணைவியான கமலாவதியின் மணிவயிற்றில் கருவடைந்தது.

கரு உருவானது முதல் மனம் மகிழ்ந்த சோழ வேந்தர் தம் புதல்வரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார். கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணமும் நெருங்கியது. கமலாவதி தாயார் பேறு வலியுடன் இருக்க குழந்தை பிறக்கும் முன்பு ஜோதிடர்கள் குழந்தை பிறப்பது ஒரு நாழிகை கழித்து பிறக்குமேயானால் குழந்தை பூவுலகம் முழுவதும் ஆட்சி செய்து சிறப்பு பெறுவது மட்டுமின்றி எம்பெருமானின் பரிபூரண அருளை பெற்றதாகவும் இருக்கும் என்று கூறினர்.

ஜோதிடர் மொழிந்ததை அறிந்த அம்மையார் ஒரு நாழிகை தாமதித்து தமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்மை தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார். அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். இவ்வாறு செய்து ஒரு நாழிகை தாமதித்து ஜோதிடர் உரைத்த நல்லநேரம் நெருங்கியதும் கட்டுக்கள் அவிழ்க்கப் பெற்றதும் ஒரு அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அரசியார். அரசியார் தலைகீழாகத் தொங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்திருக்கிறது.

நீண்ட நாள் தவத்தின் பயனாகவும், அன்பு மேலிடவும் தன்னுடைய புதல்வனை தமது கரங்களில் வாங்கிய தாய் 'என் கோவே செங்கண்ணா" என்று அழைத்து உச்சிமுகர்ந்து மகிழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அந்த தாய்க்கு அந்த மகிழ்ச்சி சிறு கால அளவு மட்டுமே நீடித்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தன்னுயிரை இழந்தாள் அரசியார். தம் மனைவி அழைத்த கோச் செங்கட் சோழர் என்ற நாமத்துடன் பல காலம் காத்திருந்து அரிதாகப் பெற்ற மகனை நன்கு வளர்த்து வில், வித்தையில் வல்லவனாக்கியதோடு மட்டும் அல்லாமல் போர்க்கலை மற்றும் வேதாகமங்களிலும் சிறந்தவராக வளர்த்தார்.

தக்க பருவத்தில் இளவரசனுக்கு முடிசூட்டினார் சுபதேவர். பின்பு தமது கடமைகள் யாவும் முடிந்துவிட்டன என்று எண்ணி வனங்கள் நிறைந்த காட்டு பகுதிக்குள் புகுந்து அருந்தவம் புரிந்து எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார். இறைவனருளால் தனது முற்பிறப்புக்களை அறிந்து கொண்ட அரசன் எம்பெருமானின் மீது மிகுந்த பக்தியில் திளைத்து விளங்கினார். எம்பெருமானுக்கு ஆலயம் எழுப்ப தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

தனது பூர்வ ஜென்மத்தில் யானையான புஷ்பதத்தனால் தான் ஈசனுக்கு ஏற்படுத்திய வலைக்கு ஏற்பட்ட அழிவாலேயே கோச் செங்கண்ணான் தான் கட்டிய கோவில்களை மாடக் கோவில்களாக, அதாவது யானை நுழைய முடியாதபடி பல படிகளுடனும், குறுகிய வாயிலுடனும் அமைத்தார். சோழ நாட்டில் ஆங்காங்கே அழகிய கோவில்களை கட்டி முடித்தார். கோச் செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் பெருமானை மூன்று வேளைகளில் முறையோடு வழிபட்டுத் தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானது பாத கமலங்களில் வீழ்ந்து இன்பமெய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக