Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 052

மானக்கஞ்சாற நாயனார்...!

கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரில் மானக்கஞ்சாற நாயனார் என்னும் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பிறந்த குடியானது அரசருக்கு சேனாதிபதி பதவி வகிக்கும் குடியாகும். பசுமை நிறைந்த அவ்வூரில் வேளாண் தொழிலின் மூலம் செல்வ வளம் பெருகியவராக இருந்தார் மானக்கஞ்சாற நாயனார்.

இவர் சிறு வயது முதலே சிவபெருமானின் மீது அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். இவர் வாலிப பருவம் அடைய இவருடன் சேர்ந்து எம்பெருமானின் மீது கொண்டிருந்த அன்பும், பக்தியும் வளர துவங்கியது.

பருவத்தின் ஒரு நிலையில் சிவபெருமானை வழிபடுவது போல் சிவனடியார்களையும் வழிபடுவதையே இப்புவியில் பிறவி எடுத்த மனித வாழ்வின் முழுமையான பலன் என்பதை உணர்ந்திருந்தார். 

பின் சிவனடியார்களை வழிபடுவதும், அவர்களை பற்றிய எண்ணங்களை சிந்தையில் வைத்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களின் தேவைகளை அறிந்து தான் ஈட்டிய பெரும் பொருட்களை எல்லாம் கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

இவரது துணைவியாரின் பெயர் கல்யாண சுந்தரி என்பதாகும். தம்பதிகளிடம் செல்வ, நில வளம் என நிறைய வளங்கள் நிரம்ப பெற்று இருந்தாலும் அவர்களுடைய மனதில் ஒரு வளம் இன்றி மிகவும் மனவேதனை அடைந்து கொண்டிருந்தனர். 

அதாவது, மக்கட்பேறு வளம் ஒன்று மட்டும் இல்லாமல் போனது என்பதாகும்.

தம்பதிகள் இருவரும் தங்கள் மனதில் இருக்கும் இந்த குறையை நீக்கும் படி எந்நேரமும் இறைவனின் திருவருளையே எண்ணி குழந்தை செல்வத்தை அருள வேண்டும் என்று வேண்டி நின்றனர். 

அதற்காக அவர்களும் பல விரதங்களை மேற்கொண்டனர். எம்பெருமானின் அருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். பெண் குழந்தையும் வளர்ந்து மழலை பருவம் முடிந்து திருமண வயதை அடைந்தாள். தமது மகள் திருமண வயதை அடைந்ததும் அவளை நல்ல இடத்தில் மணம் முடித்து மகிழ வேண்டும் என்று விரும்பினார் மானக்கஞ்சாற நாயனார்.

சிவபெருமானிடம் அன்பு கொண்ட மற்றொரு அன்பரான ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் மானக்கஞ்சாறருடைய மகளின் எழிலையும், புலமையையும் மற்றும் அவர்களுடைய குலப்பெருமையையும் பற்றி கேள்வியுற்று குடும்ப பெரியோர்களை அனுப்பி தமக்கு அப்பெண்ணை மணம் முடித்து வைக்க பேசுமாறு செய்தார். 

ஏயர்கோன் கலிக்காமரின் பெரியோர்கள் மானக்கஞ்சாறரை சந்தித்து திருமணப் பேச்சு நடத்தினர். அவர்களின் குலப்பெருமையை நன்கு அறிந்த மானக்கஞ்சாறர் முழுமனதுடன் தமது மகளை கலிக்காமருக்கு மணம் முடித்து வைக்க மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்.

ஆண் வீட்டாரும், பெண் வீட்டாரும் கலந்து ஆலோசித்து விரைவிலேயே இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான சுப நாட்களை குறித்தனர். மங்கல நிகழ்வானது மணமகளின் மாளிகையிலேயே வைத்து கொள்ளலாம் என்று தீர்மானம் செய்யப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு கொண்டிருந்தன. 

முகூர்த்தநாள் வந்ததும் கலிக்காமர் தமது உறவினர்களுடன் புடைசூழ... குதிரையின் மீது அமர்ந்து... மங்கல இசை முழங்க... புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

திருமண ஊர்வலம் கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தது. அவ்வேளையில் கஞ்சாறரது மனதில் என்றும் நிறைந்து இருக்கும் எம்பெருமான் மாவிரதிக் கோலத்துடன் பூண்டு அவர்தம் திருமனையில் எழுந்தருளினார்.

நெற்றியில் திருநீற்றுப் பூச்சு,

உச்சியில் குடுமி,

காதில் வெண் முத்துக்குண்டலம்,

மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல்,

கையில் திருநீற்றுப் பொக்கணம்,

பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்றவாறு அவர் திருக்கோலம் அமையப்பெற்று இருந்தது.

மாவிரதிக் கோலத்தில் எழுத்தருளியிருக்கும் சிவனடியாரை (எம்பெருமான்) அம்மங்கல நாளில் எழுந்தருளியதை கண்டதும் மானக்கஞ்சாறர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

அவரை அன்போடு வரவேற்று பணிந்து அவருடைய பொற்பாதங்களில் விழுந்து, வணங்கி, எழுந்து இன்மொழி மொழிந்து, ஆசனமளித்தார். தாங்கள் இந்த சுப தினத்தில் எழுந்தருள யாம் என்ன செய்தோமோ? என்று மொழிந்து அவரை வலம் வந்து வணங்கினார்.

மானக்கஞ்சாறர் மகளின் திருமணத்திற்காக தன் மாளிகை முழுவதும்

வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டும்...

தோரணங்கள் தொங்கவிடப்பட்டும்...

மங்கள இசை ஒலித்து கொண்டும்...

இருந்தது. இவையாவும் அறிந்தும் ஒன்றும் அறியாதது போல மாவிரதியார் கோலத்தில் வந்திருந்த சிவனடியார் (எம்பெருமான்) இங்கு ஏதேனும் மங்களச்செயல் நடைபெற இருக்கின்றதா? என்று வினவினார்.

அதைக் கேட்டதும் மானக்கஞ்சாறர் ஆம் ஐயனே.... இன்று இந்த அடியேனின் புதல்விக்கு திருமணம் என்று கூறினார். பின்பு அவரை வணங்கி விட்டு அவ்விடத்தில் இருந்து சென்று மணக்கோலத்தில் இருக்கும் தமது புதல்வியை அழைத்து வந்தார். மணப்பெண்ணும் மாவிரதியார் கோலத்தில் வந்திருந்த சிவனடியாரின் (எம்பெருமான்) திருவடிகளில் விழுந்து வணங்கினாள்.

'மங்களம் உண்டாகுக" என மணமகளை மாவிரதியார் வாழ்த்தினார். பின்பு அவரை வாழ்த்திய வேளையில் மணமகளது கருமேகம் போன்ற நெடுங்கூந்தலைப் பார்த்து மாவிரதியார் கோலத்தில் இருந்த எம்பெருமான் இவளுடைய கூந்தல் கிடைத்தால் நமது பஞ்சவடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே எனக் கூறினார்.

(பஞ்சவடி என்பது நெடிய மயிரினால் அகலமாகச் செய்யப்பட்டு மார்பில் அணியப்படும் பூணூலில் ஒரு வகை ஆகும்.)

அடியார் இவ்விதம் உரைத்ததை கேட்டதும் எவ்விதமான சினமும் கொள்ளாமல் அவ்விதமே உங்கள் விருப்பப்படி ஆகட்டும் என்று கூறினார் மானக்கஞ்சாற நாயனார். பின்பு உள்ளே சென்று முடியை வெட்டுவதற்காக உடைவால் ஒன்றை எடுத்து வந்தார். ஒரு நன்னாளில் இப்படி ஒரு செயலை செய்யக்கூடாது என்று அவரும் எண்ணவில்லை.

அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மணக்கோலத்தில் இருந்த தம் மகளின் பூமலர் சூடிய நீண்ட நெடிய கருங்கூந்தலை கணப்பொழுதில் அடியோடு வெட்டினார். பின்பு வெட்டிய கூந்தலை அடியாரிடம் கொடுக்க முயல அவரை தேடினார். ஆனால், அடியார் கோலத்தில் இருந்த எம்பெருமான் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.

மானக்கஞ்சாற நாயனார் தன் மகளின் கூந்தலை கேட்ட அடியாரை தேடிய அவ்வேளையில் வானத்தில் பேரொளி திகழ துவங்கியது. பரமன் உமையாளுடன் வெள்ளை எருதின்மேல் அவ்வடியாருக்கு காட்சி அளிக்கும் வகையில் தோன்றினார். அதைக் கண்டதும் மெய்மறந்து அடியாரும், அவரது மனைவியும், அவரது மகளும் நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அப்பொழுது வான்வழியே ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. அடியார்களின் மீது நீ கொண்டுள்ள பக்தியை உலகறிய செய்தோம் என்றார்.

மேலும் எப்பொழுதும் எம் அருகிலேயே இருக்கும் சிவலோக பதவியையும் அளித்தோம் என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். இதைக் கேட்டதும் மனக்கஞ்சாற நாயனார் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். இதுவரை இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்திருந்தனர்.

அவ்வேளையில் ஏயர்கோன் கலிக்காமர் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். பெண் வீட்டார் மணமகனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்பு அங்கு நிகழ்ந்து முடிந்த இறைவனின் திருவிளையாடலை அங்கு இருந்தவர்களின் மூலம் தெரிந்து கொண்ட கலிக்காமர் பெருமகிழ்ச்சி கொண்டார்.

யான் சென்ற பிறவியில் செய்த புண்ணிய பலனின் பலனாக இறைவனுக்கு கூந்தலை கொடுத்த அறமகள் தமக்கு மனைவியாக வருகிறாள் என்று மனதில் எண்ணி மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொண்டார் கலிக்காமர்.

சுபமுகூர்த்த வேளையில் மானக்கஞ்சாறரின் மகளுக்கும், கலிக்காமருக்கும் மங்கள இசை ஒலிக்க எம்பெருமானின் திருவருளோடும் திருமணம் இனிதே நடைபெற்றது. மானக்கஞ்சாறரும், அவரது துணைவியாரும் இம்மண்ணுலகில் நெடுங்காலம் வாழ்ந்து எம்பெருமானுக்கு திருத்தொண்டுகள் பல புரிந்து சிவலோகப்பதவியை அடைந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக