திங்கள், 8 ஜூன், 2020

இலட்சுமணனின் போர் திறமை!...

இராவணன் அனுமனிடம், இப்பொழுது நான் உன் மார்பில் குத்துகிறேன். என் குத்தினால் நீ மாண்டு போவாய். அப்படி இல்லாமல் நீ பிழைத்துக் கொண்டால் உனக்கு அழிவில்லை. உன்னால் என்னை கொல்ல முடியவில்லை. என்னால் உன்னை கொல்ல முடியவில்லை என்றால் உனக்கும் எனக்கும் போரில்லை எனக் கூறினான். பிறகு அனுமன் தன் மார்பை காட்டி இராவணன் முன் நின்றான். 

இராவணன், கண்களில் தீப்பொறி பறக்க, பற்களை கடித்து, விரல்களை பலமாக மடித்து அனுமனின் மார்பில் ஓங்கி குத்தினான். மேரு மலைபோல் நின்ற அனுமன் இராவணனின் பலமான அடியால் சற்று நிலை தடுமாறினான். அனுமன் நிலை தடுமாறியதை பார்த்த தேவர்கள் மிகவும் வருந்தினர். 

போர் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருந்தது. வானர படைகள் கற்களையும், மலைகளையும், பாறைகளையும் எடுத்து அரக்கர்கள் மீது வீசினர். இதனைப் பார்த்த இராவணன் அவற்றை தன் அம்புகளுக்கு இரையாக்கினான். இராவணன், வானர வீரர்களை கொன்று குவிந்த வண்ணம் இருந்தான்.

இராவணனால் வானர வீரர்கள் பலர் மாண்டனர். இராவணனின் அம்பு வானர படைத்தலைவன் நீலனின் உடலில் துளைத்தது. இதனால் நீலன் மயங்கி வீழ்ந்தான். ஜாம்பவானும் இராவணனின் ஆயுதத்தால் அடிப்பட்டு கீழே விழுந்தான். இதைப் பார்த்த இலட்சுமணன் தன் வில்லை எடுத்து இராவணனின் அம்புகளை தகர்த்து எறிந்தான். இலட்சுமணன் ஓர் வில்லினால் இராவணனின் கை வில்லை அறுத்தெறிந்தான். 

இலட்சுமணனின் வீரத்தையும், போர் திறமையும் கண்டு இராவணன் இலட்சுமணனை புகழ்ந்தான். உன் போர் வலிமை சிறப்பாக உள்ளது. அம்பு தொடுக்கும் உன் கையின் விவேகமும், நீ எதிர்த்து நிற்கும் உன் தைரியமும் மிகச் சிறந்தது. நீ மற்றவர்களை காட்டிலும் ஒப்பற்றவன் என்றான். பிறகு இராவணன், இலட்சுமணா! உன் அண்ணன் இராமனும், இந்திரனை வென்ற இந்திரஜித் மற்றும் என்னை காட்டிலும் உனக்கு நிகர் சிறந்த வீரர் இவ்வுலகில் இல்லை என்றான்.

பிறகு இலட்சுமணன் இராவணனை பார்த்து அம்புகளை ஏவினான். இராவணன் இவனை வெல்லுதல் என்பது மிக எளிதான விஷயம் அல்ல என நினைத்து, பிரம்மன் கொடுத்த ஒளிமிக்க வேலை எடுத்து இலட்சுமணன் மீது வீசினான். அந்த வேல் இலட்சுமணனின் அம்புகளை தகர்த்தெறிந்து இலட்சுமணன் மேல் பாய்ந்தது. இலட்சுமணன் மயங்கி கீழே விழுந்தான். 

இலட்சுமணன் மயங்கி விழுந்ததை பார்த்த வானர வீரர்கள் பயந்து ஓடினர். அரக்கர்கள் ஆரவாரம் செய்தனர். இலட்சுமணன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த இராவணன் அருகில் சென்று இலட்சுமணனை தூக்க முயன்றான். வெள்ளிமலையை அள்ளி எடுத்த இராவணனால் இலட்சுமணனை தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் தூக்க முயற்சித்தும் இராவணனால் தூக்க முடியவில்லை. 

இலட்சுமணை சிறிதும் கூட இராவணனால் அசைக்க முடியவில்லை. இலட்சுமணனை தூக்க முடியாமல் இராவணன் பெருமூச்சுவிட்டான்.

இதனைப் பார்த்த அனுமன் இலட்சுமணனை தூக்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றான். இராவணனால் தூக்க முடியாத இலட்சுமணனை அனுமன் எளிதாக தூக்கிச் சென்றதை பார்த்து அரக்கர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அனுமன் இலட்சுமணனை தூக்கிச் சென்றது, ஒரு தாய் தன் குழந்தையை தூக்கிச் செல்வது போல் இருந்தது. 

மயக்கம் தெளிந்த இலட்சுமணன் அனுமனை அழைத்துக் கொண்டு இராமர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். இராமர், இராவணனுடன் போர் புரிய ஆயத்தமாக நின்று கொண்டிருந்தார். இராவணன் தன் தேரை செலுத்திக் கொண்டு இராமருக்கு எதிரே வந்து நின்றான். போர் புரிய இராவணன் தேரில் வந்து நின்றதும், அனுமன், இராமர் தரையில் நின்று போர் புரிவதா! என நினைத்து வருந்தினான். 
பிறகு அனுமன் இராமரிடம், பெருமானே! தாங்கள் என் தோளின் மேல் ஏறி போர் புரியுமாறு வேண்டினான். இராமரும் அனுமனின் வேண்டுகோளை ஏற்று போர் புரிய தொடங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்