கொரோனா-வில் பாதிப்பு இந்தியாவில் எந்தத் துறையையும்
விட்டுவைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆரம்பத்தில் ஐடி நிறுவனங்கள் Work
From Option இருப்பதால் கொரோனாவால் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனக் கூறப்பட்ட
நிலையில், கடந்த 2 வாரத்தில் நாட்டின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டு
வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருக்கும் 90 சதவீத ஐடி நிறுவனங்கள்
தற்போது இருக்கும் வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், செலவுகளைக் குறைத்து
லாபத்தை அதிகரித்துக்கொள்ளத் திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள்
பல்வேறு முக்கியமான முடிவுகளைக் கையில் எடுத்துள்ளது.
இதன் ஒருபகுதியாக ஐடி நிறுவனங்கள் இனி பணியில் அமர்த்தப்படும்
ஊழியர்கள் அனைவரையும் கான்டிராக்ட் ஊழியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் சில சிறு
மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்கள் புதிய பிராஜெக்ட்களைப் பெறவும், பழைய
பிராஜெக்ட்களைக் குறைந்த செலவில் முடித்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவும்
புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்த தேடி வருகிறது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்.
எப்போதும் இல்லாமல் சிறு மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களில்
தற்போது பணியில் அமர்த்தப்படும் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக பணியில் அதாவது
கான்டிராக்ட் ஊழியர்களாகவே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
தேவை அதிகரிப்பு
இதேபோல் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது கான்டிராக்ட்
ஊழியர்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட இந்த 3 மாத
லாக்டவுன் காலத்தில் மட்டும் கான்டிராக்ட் ஊழியர்களின் தேவை 3 முதல் 4 மடங்கு
அதிகரித்துள்ளது என HR துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியத் துறை
கொரோனா காலத்தில் கான்டிராக்ட் ஊழியர்களின் தேவை அதிகரித்தது
போல் CRM, டேட்டா மைனிங், செயற்கை நுண்ணறிவு (AI), ரிமோட் சைபர் மேனேஜ்மென்ட்,
இன்னும் பல தொழில்நுட்பத்தில் ஊழியர்களின் தேவையும், இத்தொழில்நுட்பத்தைச் சார்ந்த
வர்த்தகமும் அதிகரித்துள்ளது.
செலவு குறைப்பு, இப்புதிய தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள
வர்த்தகத் தேவை இரண்டையும் பூர்த்தி செய்யவே தற்போது ஐடி நிறுவனங்கள் கான்டிராக்ட்
ஊழியர்களைத் தேடி வருகிறது.
இன்போசிஸ்
கொரோனா-வால் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு
அடுத்த சில காலாண்டுகளுக்கு மீண்டு வருவதாகத் தெரியவில்லை. இதனால் இன்போசிஸ்
நிறுவனத்தின் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் பிற முக்கிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்
செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த திட்டங்களை
ரத்து செய்துள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் அதிகளவிலான பாதிப்பை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
லாபம் மற்றும் வருவாய்
மேலும் தனது வாடிக்கையாளர்கள் கொரோனா பாதிப்பால் பிராஜெட்-ஐ
தாமதம் செய்தும், தற்காலிகமாக நிறுத்தியும், ரத்து செய்தும், வர்த்தகம் குறைவாக
இருப்பதால் பல்வேறு சேவைகளைக் குறைத்த காரணத்தால் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய்
மற்றும் லாப அளவீடுகள் திட்டமிட்டபடி இருக்காது எனப் பங்குச்சந்தைக்குச்
சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது இன்போசிஸ்.
பெரு நிறுவனங்கள்
இன்போசிஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்கே இந்த நிலைமை என்றால்
சிறிய நிறுவனங்களின் கதி என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மேலும் பெரும் நிறுவனங்கள் சந்தித்துள்ள வர்த்தக பாதிப்பால்
சிறு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கான்டிராக்ட் ஆர்டர்களும் குறைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக